Tamilnadu
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தற்போது கூட, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவுக்கு மக்களவையில் இருந்து இந்தியில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து சபாநாயகருக்கு துரை வைகோ எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஒன்றிய பாஜக அரசு பகிரங்கமாக இந்தி திணிப்பை மேற்கொண்டு வருகிறது என்று நாங்கள் குற்றம் சாட்டுவதற்கான சாட்சியை நீங்களே வழங்கியுள்ளீர்கள். அதற்கு நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் தான் சாட்சி.
இந்தி பேசாத இந்திய மாநிலம் தமிழ்நாட்டிலிருந்து, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று, அவர்களின் பிரதிநிதியாக, மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு, மக்களவை சபாநாயகரான தங்களிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
Speaker, Lok sabha என்பது மட்டும் ஆங்கிலத்தில் உள்ளதால் குறைந்தபட்சம் உங்களிடமிருந்து தான் அக்கடிதம் வந்துள்ளது என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அதைத்தவிர அனைத்து வார்த்தைகளும், என் பெயர் உட்பட முகவரியும் இந்தியில் தான் இருக்கிறது.
முழுக்க முழுக்க இந்தியிலேயே இடம் பெற்றிருக்கும் ஒரு அதிகாரப்பூர்வமான கடிதத்தை எனக்கு அனுப்பி, எனது மொழி உணர்வை நீங்கள் காயப்படுத்தி உள்ளீர்கள் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.
இதைத்தான் தமிழ்நாடு ஆண்டாண்டு காலமாக “இந்தித் திணிப்பு” என்று சுட்டிக்காட்டுகிறது; இந்தித் திணிப்பை மிக அழுத்தமாக எதிர்க்கிறது. நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் இவ்வாறான இந்தித்திணிப்பை ஒரு போதும் ஏற்காதவர்கள் என்று பதிவுசெய்ய விரும்புகிறேன்.
இது ஒன்றிய அரசின் ஒரு அப்பட்டமான உரிமை மீறல் என்று குறிப்பிடுவதோடு, “வேற்றுமையில் ஒற்றுமை” என்று இந்தியா கொண்டிருக்கும் முதன்மையான கோட்பாட்டிற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டுகிறேன்.
இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மோசமான நடைமுறை ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் பொதுவான ஆங்கிலத்தில் மட்டும் தான் கடிதம் உள்ளிட்ட அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் பறிமாற்றம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இதுதான் இந்தியாவில் வாழும் அனைத்து மொழி பேசும் தேசிய இன மக்களின் எதிர்ப்பார்ப்பு ஆகும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!