Tamilnadu
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை
இன்றைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உங்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
மிகவும் குறுகிய காலத்தில் 2 நாட்களில் சுமார் 517 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள், நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது என்று இந்த அரசு விழாவை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் திரு. சக்கரபாணி அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் மதியழகன் அவர்களுக்கும், அண்ணன் பிரகாஷ் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும் பயனாளிகள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய பயனாளிகள் உங்கள் ஒவ்வொருவருடைய முகத்திலும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியும் சிரிப்பும் தெரிகிறது. 5 ஆண்டு கால திராவிட மாடல் அரசினுடைய வெற்றிக்கு சாட்சிதான், எடுத்துக்காட்டுதான் உங்களுடைய மகிழ்ச்சி.
கடந்த 5 வருடத்தில் எடுத்துக் கொண்டால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதை செயல்படுத்தி காட்டியிருக்கிறார்.
குறிப்பாக, மகளிருக்கு ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்தி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்திற்கான கையெழுத்து.
இன்றைக்கு மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் இந்த 5 வருடத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 920 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளீர்கள். குறிப்பாக, இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ஒன்றரை இலட்சம் பயணங்களை மகளிர் நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள்.
அதே போல பள்ளிக்கூடம் செல்லுகின்ற குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த திட்டத்தினால் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 22 இலட்சம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 73 ஆயிரம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் உணவு அருந்தி வருகிறார்கள்.
அதேபோல அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி சேருகின்ற மாணவ, மாணவிகள். மாணவனாக இருந்தால் தமிழ்ப்புதல்வன் திட்டம், மாணவியாக இருந்தால் புதுமைப் பெண் திட்டம் என்று அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையும் நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 12 இலட்சம் மாணவ, மாணவிகள் இதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 56 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நம்முடைய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச அதிநவீன லேப்டாப் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற திட்டங்களால்தான் ஒரு காலத்தில் கல்வியில் பின்தங்கியிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் இன்றைக்கு மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை அடைந்திருக்கிறது. நான் முதல்வன் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது எல்லாவற்றிற்கும் மேல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 32 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உரிமைத் தொகையாக வழங்கி கொண்டிருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த உரிமைத் தொகை திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று ஒரு சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு ஒவ்வொரு மகளிருடைய வங்கி கணக்கிலும் அதாவது 3 மாதத்திற்கு சேர்த்து 3 ஆயிரம் கோடைகால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் என மொத்தம் 5,000 ரூபாயை ஒரே தவணையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்ல முதலமைச்சர் அவர்கள் இன்னொரு வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். மீண்டும் நம்முடைய ஆட்சி அமைந்தவுடன் அந்த உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி தருவேன் என்ற வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறார்.
இதுமட்டுமல்ல, இன்னும் கூடுதலாக மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள், மூத்த குடிமக்கள் என்று 38 இலட்சம் பேருக்கு சிறப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாயை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்.
சென்ற வாரம் சென்னையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 14 முக்கியமான வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கிறார். கல்வி, தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு, விவசாயம் என்று ஒவ்வொன்றையும் 2030 ஆண்டிற்குள் தமிழ்நாட்டை நான் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வேன் என்று உறுதி மொழி கொடுத்திருக்கிறார்கள்.
2030 ஆம் ஆண்டுக்குள் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படும், 50 இலட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். School drop outs முற்றிலுமாக தவிர்க்கப்படும். அரசுப்பள்ளிகள் அனைத்திலும் Smart class facilities கொண்டுவரப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படி எல்லா வகையிலும் நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுக்கு துணை நிற்கின்றது.
இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கின்றோம். இந்த மாவட்டத்தில் சுமார் 582 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூர் மாநகராட்சி பாதாளசாக்கடை திட்டம். 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்த்திறன் பூங்கா திட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய்க்கும் மேம்பட்ட பணிகள், சுமார் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாகலூர் புறவழிச்சாலை;
விவசாயிகளுக்கு மிக அதிக அளவில் 74 ஆயிரம் கட்டணமில்லா மின் இணைப்புகள், பையூரில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோட்டக்கலை கல்லூரி, அதேபோல 50 கோடி ரூபாயில் கிருஷ்ணகிரி நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம், பர்கூர், தளி-யில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சருடைய மினி ஸ்டேடியம், 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூர் ஜுஜுவாடி அடுக்குமாடி தொழிற்கூட வளாகம், பணிபுரியும் பெண்களுக்காக கிருஷ்ணகிரியில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோழி தங்கும் விடுதி இதுபோன்ற அடுக்கடுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒரு முக்கியமான விசயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். கிருஷ்ணகிரி மாவட்டதிற்கு என்று நம்முடைய அரசு அறிவித்துள்ள Knowledge Corridor பத்தி சில தவறான வதந்திகள் சமீபத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. எப்படி சென்னையில் ராஜீவ் காந்தி சாலை இருக்கிறதோ, அதே மாதிரி கிருஷ்ணகிரி, உங்கள் மாவட்டத்தில் ஒரு IT Corridorஐ உருவாக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் பெங்களுருக்கு இணையாக ஒசூர் உள்ளிட்ட பகுதிகளை வளர்த்து எடுக்க வேண்டும் என்று Knowledge Corridor திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே தவிர எந்த பணிகளும் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் சில பேர் இந்த திட்டத்திற்கு சாலை NH948 சாலையின் இருபுறமும் சுமார் 1 கி.மீ வரைக்கும் நிலம் எடுக்கப்படும் என்று பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். குறிப்பாக கெலவரப்பள்ளி அணையினுடைய பாசனப்பகுதியில் இந்த திட்டம் வரப் போகிறது என்று ஒரு வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
இதுபற்றி இந்த மாவட்டச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள், நம்முடைய அமைச்சர் அண்ணன் திரு. சக்கரபாணி அவர்கள் மற்றும் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வந்து நம்முடைய முதலமைச்சர் அவர்களை சந்தித்து அவர்களுடைய கருத்துகளை கூறினார்கள். அப்போது முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாக கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் எந்த ஒரு திட்டத்தையும் நம்முடைய அரசு நிச்சயம் செயல்படுத்தாது என்று உறுதி மொழியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார். ஆகவே நான் மீண்டும் உறுதியோடு சொல்கின்றேன் விவசாயிகளை, பொதுமக்களை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் நம்முடைய அரசு செயல்படுத்தாது. இது மக்களுக்கான அரசு, இது விவசாயிகளுக்கான அரசு.
இன்றைக்கு நம்முடைய பல்வேறு திட்டங்களினால் நம்முடைய மாநிலம் இந்தியாவிலேயே 11.19 சதவீத வளர்ச்சியோடு இன்றைக்கு முதல் மாநிலமாக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியை இன்னும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நாம் எடுத்து செல்ல வேண்டும் என்றுதான் இன்றைக்கு இவ்வளவு நலத்திட்டங்களை நம்முயை அரசு பார்த்து, பார்த்து செய்கின்றது.
இங்கே மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் நிறைய பேர் வந்திருக்கின்றீர்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 4 இலட்சம் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மகளிர் குழுக்களுடைய வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்கள். இந்த 5 வருடத்தில் மட்டும் சுமார் 1 இலட்சத்து 41 ஆயிரம் கோடி அளவிற்கு குழு சகோதரிகளுக்கு வங்கி கடன் இணைப்புகளை நாம் கொடுத்திருக்கின்றோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி அளவிற்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் குழு சகோதரிகளுக்கு கொடுக்கின்ற கடன் தொகையாக பார்க்கவில்லை. குழு சகோதரிகளுடைய உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய ஒரு நம்பிக்கை தொகையாகதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் அந்த அளவிற்கு குழு சகோதரிகள் நீங்கள் சாதித்து கொண்டு வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருத்தருமே ஒரு தனி நிறுவனம் என்று சொல்லும் அளவிற்கு தொழில் முனைவோராக மாறி இருக்கின்றீர்கள். அதனால்தான் ஐடி கம்பெனியில் கொடுப்பது போல ஒவ்வொரு குழுவில் இருக்கக்கூடிய சகோதரிகளுக்கும் அவர்கள் புகைப்படம், பெயருடன் சேர்த்து அச்சிடப்பட்டு அடையாள அட்டையை நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது.
இந்த அடையாள அட்டைகளில் உங்களுக்கு பல்வேறு பயன்கள் இருக்கின்றது. உங்களுடைய தயாரிப்பு பொருட்களை 25 கிலோ வரை 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் எந்தவிதமான கட்டணமின்றி நீங்கள் எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம்.
ஆவின், கோ-ஆப்டெக்ஸ் போன்ற நிறுவனங்களில் எல்லாம் உங்களுக்கு கட்டண சலுகைகளும் இருக்கின்றது. மகளிர் குழுக்களுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி காட்டுவார். அந்த உறுதியை தந்து வங்கி கடன் இணைப்பை பெற்ற அத்தனைபேரையும் வாழ்த்துகின்றேன்.
அதே போல இன்று வருவாய்த்துறை சார்பாக 21 நபர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பை கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கும் இந்த அரசினுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்கே வீட்டுமனைப் பட்டாக்களையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் கொடுக்க இருக்கின்றோம். இருக்க இடம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய அத்தியாவசிய தேவை. அந்த தேவையை நம்முடைய அரசு தனி கவனம் கொடுத்து நிறைவேற்றி வருகிறது. பட்டா வேண்டும் என்று நீங்கள் அரசு அலுவலங்களுக்கு சென்ற காலம் மாறி, இன்றைக்கு உங்களுடைய வீடு தேடி, உங்களைத் தேடி வந்து அரசே உங்களுக்கான பட்டாக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 24 இலட்சம் பட்டாக்களை நம்முடைய அரசு வழங்கி இருக்கிறது. இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 88 ஆயிரம் பேருக்கு பட்டாக்களை நம்முடைய அரசு வழங்கி இருக்கிறது. பட்டா பெற்ற உங்கள் அத்தனைபேருக்கும் என்னுடைய வாழ்த்துகள். சொந்த வீடு என்ற கனவை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து நினைவாக்கி வருகிறது.
குறிப்பாக, கனவு இல்லம் திட்டம் மூலம் 3 இலட்சம் வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தான் வீடுகட்டுவதற்கான ஆணையும் இங்கே வழங்க இருக்கின்றோம். இன்றைக்கு உங்களுக்கு வீட்டை மட்டும் நம்முடைய அரசு தரவில்லை. உங்களுக்கான ஒரு தனி முகவரியும் நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது. ஆகவே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றுள்ள அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துகள்.
இந்த நிகழ்ச்சியில் அன்பிற்கினிய மாற்றுத் திறனாளி சகோதர, சகோதரிகள் வந்திருக்கின்றீர்கள். இன்றைக்கு மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருத்தரும் மாற்றத்திற்கான திறனாளிகளாக மாறி இருக்கின்றீர்கள். மாற்றுத் திறனாளிகளுடைய உரிமைக்கு என்றைக்குமே நம்முடைய அரசு குரல் கொடுத்திருக்கிறது.
அதனால்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நேரடியாக நியமனம் செய்கின்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு நிறைவேற்றி காட்டியிருக்கிறது. இவ்வளவு நாளாக தங்களுக்காக மற்றவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுக்காக குரல் கொடுக்கின்ற இடத்திற்கு மாறி இருக்கிறார்கள். ஆகவே உங்களுக்கும் எங்களுடைய வாழ்த்துகள்.
இதுபோல மகளிர், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் இப்படி எல்லா தரப்பினருக்கும் பார்த்து, பார்த்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திட்டங்களை செயல்படுத்தி இருக்கின்றார்கள். உங்களுக்கான இன்னும் அதிகமாக உழைக்க நம்முடைய அரசு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் காத்திருக்கிறார். ஆகவே உங்களுக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தரவேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்.
நலத்திட்டங்களைப் பெற்ற உங்கள் அத்தனைபேரையும் மறுபடியும் வாழ்த்தி, இந்த வாய்ப்பை எனக்கு அளித்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அமைச்சர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
Also Read
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!