Tamilnadu
தமிழ்நாட்டில் நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (09-03-2026) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’ கழகத்தின் 12-ஆவது மாநில மாநாட்டில் கலந்துகொண்டு ஆற்றிய எழுச்சியுரையின் விவரம்:-
எல்லாச் சாலைகளும், திருச்சியை நோக்கி! எல்லாத் திசைகளும், திருச்சியை நோக்கி! எல்லா மக்களும், திருச்சியை நோக்கி! திரும்பும் திசை எல்லாம், கருப்பு சிவப்பு! திரும்பும் திசை எல்லாம், அண்ணாவின் தம்பிகள்! திரும்பும் திசை எல்லாம், கலைஞரின் உடன்பிறப்புகள்! தெற்கே குமரியில் இருந்து வடக்கே கும்மிடிப்பூண்டி வரை, தமிழ்நாடே இந்தச் சிறுகனூரில் திரண்டு, சிறுகனூர் பெருகனூராக ஆகியிருக்கிறது.
எதிரிகளால் வீழ்த்த முடியாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் சேனை இங்கு திரண்டிருக்கிறது. இந்தச் சேனையின் தலைமைத் தொண்டனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அழைப்பை ஏற்று வந்திருக்கும், தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய முதல் வணக்கம்!
கடந்த மூன்று மாதங்களாக நாம் நடத்துவது மாநாடுகள்தான்! தம்பி உதயநிதி அவர்கள் மண்டல வாரியாக நடத்திய, இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள்; என்னுடைய அன்புத் தங்கை கனிமொழி அவர்கள் நடத்திய மகளிரணியின் வெல்லும் தமிழ்ப்பெண்கள் மாநாடுகள்; சென்னை - மதுரை - கோவை - திருப்பத்தூர் என மண்டல அளவில் நடத்தப்பட்ட பூத் நிர்வாகிகள் பயிற்சி மாநாடுகள் என்று இலட்சக்கணக்கான நிர்வாகிகளை அழைத்து மாநாடுகள் நடத்தி, தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கினோம்! அதற்கெல்லாம் உச்சமாக இன்று பத்து லட்சம் பேர் பங்கெடுத்திருக்கும் பெரிதினும் பெரிய மாநாடாகத் திருச்சியில் இந்த மாநில மாநாடு நடந்து கொண்டிருக்கிறது!
இங்கு நான் வந்தபோது மாநாட்டின் நுழைவாயிலிலிருந்து, மேடை வரும் வரைக்கும் நீங்கள் எனக்குக் கொடுத்த வரவேற்பு அட... அட... அட... உங்கள் முகத்தில் பார்த்த அந்த மகிழ்ச்சி இருக்கிறதே, என்னுடைய வயதைக் குறைந்திருக்கிறது! அந்த தெம்போடு நிற்கிறேன். கடந்த வாரம் என்னுடைய பிறந்தநாளுக்குத் தொலைபேசியில் எனக்கு மற்ற மாநிலத் தலைவர்கள் அனைவரும் வாழ்த்து சொன்னபோது, என்னுடைய வயதை நம்ப முடியவில்லை என்று சொன்னார்கள். இந்த மாதிரி என்னை இளமையாக வைத்திருக்கக் காரணமே நீங்கள் தான்! உங்கள் அன்புதான்!
ஆன்மீக நண்பர்கள் சொல்வார்கள், “என்ன தவம் செய்தனை”. அது போன்று, உங்களை எல்லாம் உடன்பிறப்புகளாகப் பெற, நான் என்ன தவம் செய்தேனோ! கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் தலைமைத் தொண்டனாக என்னைத் தேர்ந்தெடுத்தது நீங்கள்தான்! இந்தத் தாய்த்தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்க காரணமும் நீங்கள்தான்! உங்களால்தான் நான் வளர்ந்தேன்! உங்களால்தான் நான் உயர்ந்தேன்! உங்களுக்காகத்தான் நான் வாழ்கிறேன்! இந்தப் பாசப்பிணைப்பு - உடன்பிறப்புகள் என்ற இந்த உயிர்த்துடிப்பு - இதெல்லாம் இன்றைக்கு நேற்று ஏற்பட்ட பந்தமா? திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலம்தொட்டு, 75 ஆண்டுகளாகத் தொடரும் அன்பு இது!
பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், அவர் வழிவந்த நானும் இந்தப் பாச உணர்வைத்தான் உங்களிடம் பார்க்கிறோம். கழக வரலாற்றில் எத்தனையோ திருப்புமுனைகளுக்கு அடித்தளமிட்ட, தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் இந்த மாநில மாநாட்டை நடத்துகிறோம்!
இந்த மாநாடு எதற்கு என்று நிறைய பேர் கேட்கிறார்கள்! ஒரு கிரிக்கெட்டில், முதல் பந்தில் இருந்தே ரன் அடிப்பது முக்கியம்தான்... அதேசமயம், இறுதி ஓவர்களில் அடித்து ஆடி, கடைசி பந்தில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து ஜெயிப்பதுதான் ஒரு கிராண்ட் ஃபினிஷிங்காக இருக்கும்! அப்படிப்பட்ட வெற்றியை, 2026-இல் நாம் பெறுவதற்குதான் இந்த மாநாடு!
அதற்காகத்தான், இந்த மாபெரும் மாநில மாநாட்டை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் ஆருயிர் சகோதரர் திருச்சியின் தீரர் கே.என்.நேரு அவர்கள்! முதலில் தலைவராக, அவருக்கு என்னுடைய சார்பிலும், மேடையில் இருக்கும் தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள் சார்பிலும், ஏன், எதிரில் இருக்கும் உங்கள் அனைவரின் சார்பிலும், நம்முடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
நம்முடைய நேருவிடம் மாநாடு என்று சொல்லிவிட்டாலே போதும்! அவருக்குள் ஒரு புது எனர்ஜி வந்துவிடும். நாம் நினைப்பதை விட, எப்போதும் பிரம்மாண்டமாக நடத்துவதுதான் நேருவின் ஸ்டைல்! அதனால்தான் நான் எப்போதும் சொல்வது... மாநாடு என்றால் நேரு! நேரு என்றால் மாநாடு! இப்போது கூட பாருங்கள்… 200 ஏக்கர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, 200 இடங்களை வெல்ல வேண்டும் என்று குறிப்பால் தொண்டர்களுக்குச் சொல்லிவிட்டார்! நமக்கான இடத்தைத் தயார் செய்து கொடுத்துவிட்டார். இனிமேல் தொடர்ந்து நாம் அடித்து ஆட வேண்டும். இந்த மாபெரும் மாநாட்டிற்காக அயராது உழைத்த அவருக்கும், அவருக்குத் துணை நின்ற ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கும், என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
இன்றைக்கு நாம் முழங்கும், “ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்”... இது ஏதோ, தனிப்பட்ட ஸ்டாலினுக்கான முழக்கம் அல்ல இது! நம்மை எல்லாம் உருவாக்கிய, திராவிட முன்னேற்றக் கழகம் தொடரட்டும் என்பதுதான் இதன் உண்மையான பொருள்!
திருச்சியை மாநாட்டிற்காக நாம் ஏன் தேர்ந்தெடுக்கிறோம்? இது தமிழ்நாட்டின் மையப் பகுதி மட்டுமல்ல; இதுதான் கழகத்தின் மாநாட்டுப் பகுதி! இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருப்பது, பன்னிரண்டாவது மாநில மாநாடு! இந்த பன்னிரண்டு மாநில மாநாடுகளில், ஏழு மாநாடுகள் திருச்சியில்தான் நடந்திருக்கிறது! 1956-இல் இரண்டாவது மாநில மாநாடு; 1990-இல் ஆறாவது மாநில மாநாடு! 1996-இல் எட்டாவது மாநில மாநாடு! 2006-இல் ஒன்பதாவது மாநில மாநாடு! 2014-இல் பத்தாவது மாநில மாநாடு! 2021-இல் பதினோராவது மாநில மாநாடு; இதோ இப்போது பன்னிரண்டாவது மாநில மாநாடு!
ஈரோடு தந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மாளிகை கட்டி வாழ்ந்தது, இதே திருச்சியில்தான்! தனித்தனி இயக்கம் நடத்தியபோதும் கொள்கையால் ஒருபோதும் பிரியாத தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் வெவ்வேறு வழக்குகளில் ஒரே சிறையில் இருந்தது, இதே திருச்சியில்தான்! இரயில்வே சந்திப்பின் ஒரு முனையில் தந்தை பெரியாரும், மறுமுனையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தை நடத்தியதும், இதே திருச்சியில்தான்! கல்லக்குடி போராட்டத்தில் கைதான தலைவர் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டதும் இதே திருச்சியில்தான்! அப்போது, 1953-இல், கைக்குழந்தையாக இருந்த என்னை என்னுடைய அன்னையார் தயாளு அம்மாள் கொண்டு வந்து தலைவர் கலைஞரிடம் காட்டியதும், இதே திருச்சி சிறையில்தான்.
இதுமட்டுமா, தலைவர் கலைஞரை முதன்முதலில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிய குளித்தலை தொகுதி இருந்ததும், இதே திருச்சியில்தான்! அடுத்து பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு ஐம்பெரும் முழக்கங்களைத் தந்ததும், இதே திருச்சியில்தான்! அதனால்தான் சொல்கிறேன்... திருச்சி என்றாலே, திருப்பம்! திருச்சி என்றாலே, எழுச்சி! திருச்சி என்றாலே, உணர்ச்சி! திருச்சி என்றாலே, மகத்தான வெற்றி! அப்படிப்பட்ட திருச்சியில் இன்றைக்கு ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றத்தான் நாம் கூடியிருக்கிறோம். 1956-இல் இதே திருச்சி மாநாட்டில்தான், இலட்சக்கணக்கான தொண்டர்கள் வாக்களிக்கக் கழகம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை, பேரறிஞர் அண்ணா எடுத்தார். அது நடந்து, 70 ஆண்டுகள் ஆகிவிட்டது! இந்தத் தருணத்தில், தந்தை பெரியாரால் கொள்கை உரம்பெற்று, பேரறிஞர் அண்ணா அவர்களால் பக்குவப்படுத்தப்பட்டு, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் வழிநடத்தப்பட்ட நாம்தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும் என்ற உறுதியை இந்த மாநாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்!
இந்தியாவிலேயே முதல் மாநிலக் கட்சியாக நம்முடைய கழகத்தை ஆட்சியில் அமர்த்தினார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா! அவரது வழியில் ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்! ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து, உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையில் ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்தோம்! இப்போது ஏழாவது முறை மட்டுமல்ல, இனி எந்நாளும் கழகம்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சூளுரைக்கத்தான் இங்கு கூடியிருக்கிறோம்! இதுதான் நம்முடைய கடமை! அனைவரின் பெரும் கடமை!
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால், நான் முதலமைச்சர் ஆகவும், சில பேர் அமைச்சர்கள் ஆகவும், பல பேர் எம்.எல்.ஏ ஆகவும், சொல்கிறோமா? இல்லை. நம்முடைய தமிழினத்தைக் காக்கத் தகுதியும் - திறமையும் - உழைப்பும் கொண்ட ஒரே படை நம்முடைய கருப்பு சிவப்புப் படைதான்! நமக்கென்று மாபெரும் வரலாறு இருக்கிறது. நமக்கென்று ஒரு லெகசி இருக்கிறது. தமிழைக் காத்தவர்கள் நாம்! தாய்த்தமிழ்நாட்டிற்குப் பெயர் வைத்தவர்கள் நாம்! நம்முடைய மாநிலத்தை எல்லா நிலையிலும் உயர்த்தியவர்கள் நாம்! இப்போது கூட தமிழ் மண்ணுக்குக் காவல் அரணாக இருப்பவர்கள் நாம்தான்! தமிழ்நாடு, நம்மை நம்பித்தான் இருக்கிறது; நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் இருக்கிறோம்! அதற்காகதான் சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, தொய்வில்லாமல் தொடர வேண்டும்! அதற்காக நாம் உழைக்க வேண்டும். அதற்கேற்ப சூளுரைக்க வேண்டும்.
இந்த நேரத்தில், தந்தை பெரியார் 1971 தேர்தலின்போது சொன்னதை, நினைத்துப் பார்க்கிறேன். “தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான், தமிழ்ச்சமுதாயம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஏற்படும்” என்றார். இப்போதும் தந்தை பெரியார் சொன்னதை மனதில் வைத்து நம்முடைய பயணத்தைத் தொடர வேண்டும்!
இங்கே வந்ததும் என்னுடைய நினைவிற்கு வந்தது., 2021 தேர்தலுக்கு முன்பு, இதே திருச்சியில், இதே இடத்தில் ஏழு இலக்குகளை உறுதிமொழிகளாக நான் அறிவித்தேன். அதில் முதல் இலக்கு - வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு! இரண்டாவது இலக்கு - மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! மூன்றாவது இலக்கு - குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! நான்காவது இலக்கு - அனைவருக்கும் உயர்தரக் கல்வி – உயர்ந்த மருத்துவம்! ஐந்தாவது இலக்கு - எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! ஆறாவது இலக்கு - உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! ஏழாவது இலக்கு - அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு!
நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறேன்., இந்த ஏழு இலக்குகளையும் நம்முடைய ஐந்தாண்டு ஆட்சியின் திட்டங்களால் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்! அதனால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! இதையெல்லாம், நம்முடைய எதிரிகளே, இன்றைக்கு மனதிற்குள் ஒப்புக்கொள்வார்கள். யாராலும் மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை இது! தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுகூட, “நம்பர் ஒன் மாநிலம் - தமிழ்நாடு’ என்று சொல்கிறார்கள். உலக பத்திரிகைகளே, ‘சூப்பர்ஸ்டார் ஸ்டேட் தமிழ்நாடு’ என்று பாராட்டுகிறார்கள். அந்த அளவிற்கு நாம் கெத்தாக முன்னேறி இருக்கிறோம்!
கடந்த ஐந்து ஆண்டுகளில், நாம் செய்திருக்கும் சாதனைகளை நினைத்துப் பாருங்கள். எத்தனை நெருக்கடிகள், எத்தனை பிரச்சினைகளைத் தகர்த்து நாம் முன்னேறி இருக்கிறோம்! மூன்று நாட்களுக்கு முன்பு கூட, சென்னையில், 2030-க்கான 14 உறுதிமொழிகளை, “ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்” என்று நான் அறிவித்தேன். அந்த மேடையில் அமைச்சர்கள், ஒவ்வொரு துறையிலும் நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்று சொன்னார்கள். ஐந்தாண்டுகளில் ஒரு மாநில அரசால் இவ்வளவு செய்ய முடியுமா என்று எல்லோரும் பிரமித்துப் பார்த்தார்கள். நமக்கே மலைப்பாக இருந்தது. நம்முடைய சாதனைகளை PPT போட்டுக் காட்டினோம்! அதில் கடந்த ஆட்சியோடு, நாம் செய்திருப்பதை ஒப்பிட்டுச் சொன்னார்கள். உங்களுக்காகச் சிலவற்றை மட்டும் இங்கு சொல்கிறேன்... நன்றாக கவனியுங்கள்! மக்களிடம் சென்று சொல்ல வேண்டும்!
கடந்த 2016-21, அ.தி.மு.க. ஆட்சியில், தொழில் முதலீட்டிற்காகப் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு தெரியுமா? 471. இதுவே நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஆயிரத்து 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம்! கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் ஈர்த்த முதலீடு – நான்கு இலட்சத்து 13 ஆயிரத்து 414 கோடி ரூபாய்தான். ஆனால், நம்முடைய ஆட்சிக் காலத்தில், 12 இலட்சத்து 54 ஆயிரத்து 133 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்! மூன்று மடங்கு அதிகம்!
2016-21-இல் அ.தி.மு.க. ஆட்சியில், புதிதாக நான்கே நான்கு சிப்காட் தொழிற்பூங்காக்களைதான் தொடங்கினார்கள். ஆனால், நாம் 33 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களைத் தொடங்கி இருக்கிறோம்!
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை எடுத்துகொண்டால், 2021 வரைக்கும் இருந்த எண்ணிக்கை: 2 ஆயிரத்தி 45. இப்போது 13,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நம்முடைய ஆட்சியில் இருக்கிறது!
அடுத்து வேளாண் துறை, 2016-21-இல், 57.26 இலட்சம் ஹெக்டேராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பை, இப்போது 62.32 லட்சம் ஹெக்டேராக உயர்த்தி இருக்கிறோம்! ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் ஹெக்டேர் உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஒரு இலட்சம் விவசாயிகளுக்குத்தான் இலவச வேளாண் மின் இணைப்பு கொடுத்தார்கள். ஆனால், நம்முடைய ஆட்சியில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவச வேளாண் மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம்.
2016-21-இல், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இரண்டே இரண்டு பேர்தான்! ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் 386 மாணவர்களுக்கு, 160 கோடி ரூபாய் உதவித்தொகை கொடுத்து படிக்கிறார்கள்!
அதேபோன்று, ஆதிதிராவிட மகளிர் நன்னிலம் நில உடைமைத் திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பயனடைந்த பெண்கள் 40 பேர்! 40 இலட்சம் ரூபாய் கொடுத்தார்கள்! அதுவே நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் 1,026 பெண்களுக்கு, சுமார் 50 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறோம்! எவ்வளவு பெரிய வித்தியாசம்?
அடுத்து, விளையாட்டில் நம்முடைய இளைஞர்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் சாதிக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன? விளையாட்டுத் துறைக்கு 800 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீட்டை, நம்முடைய ஆட்சியில், 2 ஆயிரத்து 268 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்!
அதுமட்டுமல்ல, 2016-21-இல் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் எத்தனை பேர்? மூன்றே மூன்று பேர்தான்! ஆனால், நம்முடைய அரசில், 301 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம்! இப்படி எல்லா துறையிலும் லிஸ்ட் இருக்கிறது!
மக்கள் பெரும் சுமையாகக் கருதும் மருத்துவச் செலவுகள், சென்ற ஆட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், 49 லட்சமாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கையை நம்முடைய ஆட்சியில் 90 இலட்சமாக உயர்த்தி இருக்கிறோம். அதற்குக் காரணம்., நம்முடைய அரசில் 72 ஆயிரமாக இருந்த வருமான வரம்பை, ஒரு இலட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி கொடுத்தோம்.
இப்படி எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு – மூன்று மடங்கு, ஏன், பல மடங்கு சாதனைகள் படைத்திருக்கிறோம்! இதுதான் வளர்ச்சி! அதனால்தான்., வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 14 ஆண்டுகள் கழித்து, நம்முடைய ஆட்சியில் 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை நம்முடைய மாநிலம் அடைந்திருக்கிறது! நானும் தொடர்ந்து ஒவ்வொரு மேடையிலும் நம்முடைய சாதனைகளை எல்லாம் டேட்டாவுடன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். செய்ததைக் கூட, நம்மால் முழுதாகச் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய பட்டியல் இருக்கிறது.
நம்முடைய திட்டங்களால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் சொல்கிறேன் கேளுங்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஒரு கோடியே 31 இலட்சம் பேர்! காலை உணவுத் திட்டம் – 19 இலட்சத்து 34 ஆயிரம் குழந்தைகள்! புதுமைப்பெண் திட்டம் – 6 இலட்சத்து 95 ஆயிரம் மாணவிகள்! தமிழ்ப்புதல்வன் திட்டம் – 5 இலட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள்! நான் முதல்வன் திட்டம் – 49 இலட்சத்து 90 ஆயிரம் பயிற்சிச் சான்றிதழ்கள்! விடியல் பயணம் திட்டம் – 910 கோடி பயணங்கள்! மக்களைத் தேடி மருத்துவம் – 2 கோடியே 56 இலட்சம் பேர்! இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் – 4 இலட்சத்திற்கும் அதிகமான உயிர்கள்! பல்வேறு ஓய்வூதியத் திட்டங்கள் மூலமாக 30 இலட்சத்து 55 ஆயிரம் பேர்! பட்டா பெற்றவர்கள் 23 இலட்சத்து 56 ஆயிரம் பேர்! உங்களால் டோட்டல் போட முடிந்ததா? இல்லையா... இன்னும் ஏராளமாக இருக்கிறது! ஆனால், அதையெல்லாம் சேர்த்து நீங்கள் டோட்டல் போட்டு மக்களிடம் சொல்ல வேண்டும்! இப்போது தெரிகிறதா... ஏன், நான் அடிக்கடி ‘வெல்வோம் இருநூறு, வெல்வோம் இருநூறு‘ என்று சொல்கிறேன் என்று. இருநூறு தொகுதி உறுதியா… இல்லையா? கேட்கவில்லை! இன்னும் சத்தமாக., மகிழ்ச்சி!
நீங்கள் பிரசாரத்திற்குச் செல்லும்போது, யாரைக் கேட்டாலும், அவர்கள் நம்முடைய அரசின் திட்டங்களில் பயனாளியாக இருப்பார்கள்! நம்முடைய அரசின் திட்டங்களின் பயனாளிகள் வாக்களித்தாலே போதும். நாம்தான் ‘ஃபுல் ஸ்வீப்’ பண்ணுவோம்! முழு வெற்றி அடைவோம். அதை உறுதிசெய்ய வேண்டியதுதான், உங்களின் பணி! நாம் இவ்வளவையும் செய்துவிட்டு, மக்களிடம் வாக்கு கேட்கிறோம்!
இதே திருச்சி சிறுகனூரில், 5 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிவிட்டு, மக்கள் முன்னால் தெம்பாக, நம்பிக்கையாக நிற்கிறோம். அடுத்து விரைவில், விரிவான தேர்தல் அறிக்கை தங்கை கனிமொழி அவர்கள் தலைமையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப் போகிறோம்.
சமீப காலமாக கவனித்தீர்களா, மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம், இன்ஸ்டால்மென்ட்டில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதிலும் என்ன அறிவிக்கிறார்கள்? திராவிட மாடல் அரசு சார்பில், நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திட்டங்களையே, Top up செய்து, காப்பி அடித்து அறிவிக்கிறார்கள். அவ்வளவுதான்! ஏனென்றால், அவர்களுக்கும் வேறு வழியில்லை. நம்முடைய ஆட்சியில், நிறைவேற்றி இருக்கின்ற திட்டங்களை இனி யாராலும் மாற்ற முடியாது, எவராலும் நிறுத்த முடியாது.
யோசித்துப் பாருங்கள்., நாம் வழங்கிய மகளிர் உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியுமா? முடியாது. அப்படி அவர்கள் நினைத்தாலே, அவர்களின் வீட்டுப் பெண்களே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள். அதனால்தான் இப்போது அதிகப்படுத்தி அறிவிக்கிறார்கள்.
அடுத்து, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில், யாராவது கை வைக்க முடியுமா? முடியாது. அந்தக் குழந்தைகளை பட்டினி போட்டால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களைச் சும்மா விடமாட்டார்கள். அதேபோல, பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்தை அவர்களால் மாற்ற முடியுமா? முடியாது. இன்னும் இருக்கிறது. உயர்கல்விக்கு உறுதுணையாக இருக்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் - இதையெல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ எந்தக் கட்சியாவது யோசிக்க முடியுமா? முடியாது.
அதுமட்டுமல்ல, முதியவர்களுக்கு வீடு தேடி ரேசன் தரும் தாயுமானவர் திட்டம், வீடு தேடி மருத்துவம் தரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் - இதையெல்லாம் தொடரமாட்டோம் என்று எந்தக் கட்சியாவது வாய் திறக்க முடியுமா? இப்படி எவராலும் மாற்ற முடியாத திட்டங்கள்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திட்டங்கள்!
அவர்களுக்குத் தேர்தல் அறிக்கைக்குக் கண்டெண்ட் கொடுப்பதே இந்த ஸ்டாலினின் திட்டங்கள்தான்! அதனால்தான் உறுதியோடு சொல்கிறேன்... இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரைக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆளுவான்!
நாம் இவ்வளவையும் செய்துவிட்டு, மக்களிடம் வாக்கு கேட்கிறோம்! ஆனால், அ.தி.மு.க. கூட்டணி… சாரி… சாரி… அப்படி சொன்னால், மோடியும் - அமித் ஷாவும் கோபித்துக் கொள்வார்கள். N.D.A. கூட்டணி என்று சொல்ல வேண்டும். கூட்டணிக்குப் பெயர் வைக்கக் கூட முடியாத நிலையில்தான், இன்றைக்கு அ.தி.மு.க. இருக்கிறது. சரி அவர்கள் சொல்வது போன்று, அந்த N.D.A. கூட்டணி தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறது?
கடந்த 5 ஆண்டுகளில், நமக்கு தர வேண்டிய கல்வி நிதி, ஜல் ஜீவன் திட்ட நிதி, நூறு நாள் வேலைத்திட்ட நிதி, பேரிடர் நிவாரண நிதி என்று நாம் கேட்ட எதையும் தரவில்லை! மாநிலத்திற்கான சிறப்புத் திட்டங்களையும் தரவில்லை! ஏன், கோவை, மதுரை, திருச்சி மெட்ரோ உள்ளிட்ட எந்த உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அனுமதி தரவில்லை.
நாம் கேட்பது... மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் - ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால், அடிப்படையாக மாநிலத்துக்குக் கேட்டதையாவது அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். எதுவுமே இல்லையா?
பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குத் தந்ததெல்லாம் என்ன தெரியுமா? ஆளுநர் மூலமாகக் குடைச்சல்! மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வு! இந்தித் திணிப்பு! மிரட்டிப் பார்க்க ரெய்டுகள்! இப்படிப்பட்ட ஆட்சிதான், பிரதமர் மோடி சொல்லும் N.D.A. ஆட்சி! தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்கள்தான், நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்!
தமிழ்நாடு மீது எந்த அளவிற்கு வன்மம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், தேர்தல் வருகிறதே என்று கூட தெரியாமல், அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், நமக்கான எதையும் அறிவிக்க இவர்களுக்கு மனது வரவில்லை.
நான் கேட்கிறேன்… இப்படி திட்டமிட்டுத் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்ற N.D.A. கூட்டணிக்கு, எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?
எந்த நம்பிக்கையில் நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள்? தமிழ்நாடு கேட்பதற்கெல்லாம், ‘நோ’ சொல்லும் NDA-வுக்கு, தமிழ்நாடும் ‘நோ’தான் சொல்லும்! இங்கே உங்களுக்கு எப்போதும் ’நோ எண்ட்ரி’ தான்! உங்கள் டப்பா எஞ்சினுக்கு தமிழ்நாடு எப்போதுமே, ‘No Entry’-தான் சொல்லும்!
சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன். இந்தத் தேர்தல், தமிழ்நாடு vs NDA இன்னும் சொன்னால், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று பார்க்கும் தேர்தல் சொன்னேன். உடனே நம்முடைய எதிரிகள் என்ன சொன்னார்கள்? இது சட்டமன்றத்துக்கு நடக்கும் தேர்தல்தானே? இதை ஏன் தமிழ்நாடு Vs NDA என்று தி.மு.க. சொல்கிறது? தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று ஏன் ஸ்டாலின் சொல்கிறார் என்று கேட்கிறார்கள்.
தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் வரும் கட்சியல்ல. மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் கட்சி. எங்களுக்குத் தெரியும்... தமிழ்நாட்டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், உண்மையான எதிரி யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்... அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும், திராணியும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க என்பது மக்களுக்கும் நன்றாக தெரியும்!
அ.தி.மு.க. என்கிற முகமூடியை போட்டுக் கொண்டு வந்தால், எங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமா? உங்களின் முகத்திரையைக் கிழித்து, தமிழ்நாட்டு மக்களிடம் நாங்கள் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடம் இருந்து, விழுங்கிடலாம் என்று நினைக்கிறது காவிக் கூட்டம். எங்கள் கருப்பு - சிவப்புp பட்டாளம் இருக்கிறவரை அது நடக்கவே நடக்காது. உங்கள் அப்பனே வந்தாலும் நடக்காது. நடக்க விடமாட்டோம். இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான், அ.தி.மு.க. என்ற கட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள். அரசியலில் நேர் எதிராக இருந்தாலும், அ.தி.மு.க தொண்டர்கள் மீது நான் உண்மையாகவே பரிதாபப்படுகிறேன். அவர்களுடைய உணர்வுக்கு மாறாக கட்சியைக் கொண்டு போய் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. தன் சொந்த நலனுக்காக, சுயலாபத்துக்காக, எப்படியாவது முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நப்பாசையில், பழனிசாமி அடிமையாகக் கிடக்கிறார். அவரை வைத்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் அழிக்கும் வேலையை பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது.
இப்போது கூட பீகாரில், என்ன நடக்கிறது என்று நாடே பார்க்கிறதே! பீகார் மாநிலத்தில் இதுவரை பா.ஜ.க. முதலமைச்சர் இருந்ததே கிடையாது. நிதிஷ்குமார் அவர்களை முன்னிறுத்தி தேர்தலில் ஜெயித்துவிட்டு, இப்போது காரியம் ஆனதும் அவரை ஓரங்கட்டிவிட்டு, பா.ஜ.க. முதலமைச்சரை உள்ளே கொண்டு வரப் போகிறார்கள். இதையேதான் தமிழ்நாட்டிலும் செய்யலாம் என்று முயற்சி செய்கிறார்கள். நான் அடித்துச் சொல்வேன்! சேலஞ்ச் செய்து சொல்வேன்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், எங்கள் தி.மு.க.வும் இருக்கும் வரை, பா.ஜ.க.வால் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது! நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டுக் கொண்டு வந்தாலும், புதிது புதிதாக யாரை அழைத்துக் கொண்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டிப் பார்த்தாலும், தமிழ்நாடு எப்போதுமே உங்களுக்கு Out Of Control-தான்!
நாங்கள் பார்க்காத படையெடுப்பா? தி.மு.க. பார்க்காத மிரட்டலா? நீங்கள் இந்தியா மேப்பில் இருக்கும் எந்த மாநிலத்தின் மீது வேண்டுமானாலும், காவி அடித்திருக்கலாம்! ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்கவே பலிக்காது! இங்கே எப்போதுமே நாங்கள்தான்! எங்கள் மண்ணில், நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம்!
இங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு உடன்பிறப்பும், மக்களிடம் போகும்போது சொல்ல வேண்டியது என்ன? நடக்க இருக்கும் தேர்தல், தி.மு.க. vs NDA கிடையாது! தமிழ்நாடு வெர்சஸ் NDA! இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், வெல்லப்போவது, தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதுதான் 2026 தேர்தல்! இதில் நம்முடைய தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் என்றால், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும்! உங்கள் வாக்குகளைத் தி.மு.க.வுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் போடுங்கள் என்று கேளுங்கள்! இதுதான் நீங்கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு இடைவிடாமல் மக்களிடம் பரப்ப வேண்டிய மெசேஜ்!
அதேபோன்று, இங்கே வந்திருக்கும் உடன்பிறப்புகளுக்கு நான் வைக்கும் மற்றொரு வேண்டுகோள் என்பது, உதயசூரியன் சின்னம் வெற்றி பெற நீங்கள் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு உழைக்கிறீர்களோ, அதே உழைப்பை நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களின் வெற்றிக்கும் கொடுக்க வேண்டும். ஏனென்றால், நம்முடைய சாதனைகள், கொள்கைகள் மட்டும் நம்முடைய பலம் இல்லை! நான்காவது பொதுத் தேர்தலை இணைந்து சந்திக்கும் கூட்டணியும், நம்முடைய பெரிய பலம்தான்! மற்றவர்களைப்போல் வெறும் தேர்தலுக்காக, எலக்ஷன் சீசனில் மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை! கொள்கையின் அடிப்படையில், கொள்கைத் தோழர்களான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் நீங்கள் களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மக்களைச் சென்று சந்திக்கின்ற நீங்கள், இன்னொரு விஷயத்தையும் சொல்லுங்கள். “தமிழ்நாட்டில், இதுவரை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக வேண்டும் என்று வாக்களித்து மக்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அவர்களுக்குப் பின்பு, நீங்கள் வாக்களித்து ஜெயிக்க வைத்தது இந்த ஸ்டாலினைத்தான்!
கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை விட, அடுத்த 5 ஆண்டுகள் இன்னும் தமிழ்நாட்டிற்கு அதிக சாதனைகள் செய்வார் எங்க தலைவர் என்று தைரியமாக மக்களிடத்தில் சொல்லுங்கள். தமிழ்நாட்டைத் தொடர்ந்து நம்பர்-1 மாநிலமாக்க எங்கள் தலைவருக்கு ஆதரவு கொடுங்கள் என்று நம்பிக்கையோடு வீடு வீடாக சென்று சொல்லுங்கள். நம்மால் பயனடைந்த அவர்கள், நிச்சயம் உங்களை வரவேற்பார்கள்.
இந்த ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிதான், சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால், தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம் மண்- மொழி- மக்களை காக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம்முடைய வெற்றி, கழகத்தின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றி! அதை உணர்ந்து நீங்கள் உழைக்க வேண்டும்! ஏழாவது முறையும் நாம்தான்! இனி எப்போதும் நாம்தான்! திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்! திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! வெல்வோம் ஒன்றாக!
Also Read
-
'ஸ்டாலின் தொடரட்டும் ; தமிழ்நாடு வெல்லட்டும்' - திருச்சியில் தொடங்கியது தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு!
-
ரூ.21.72 கோடியில் முதல்வர் படைப்பகங்கள், பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
Vulgar Warriors.. எப்படி மக்களை காப்பாற்றுவார்? - விஜயை வெளுத்து வாங்கிய தவெக ரஞ்சனா நாச்சியார்!
-
ஈரான்- இஸ்ரேல் போர் எதிரொலி : சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்... உயரும் டீ விலையால் அதிர்ச்சி!
-
“இந்தோனேசியாவின் தவறை இந்தியா செய்யக்கூடாது!” : ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ குறித்து எச்சரித்த முதலமைச்சர்!