Tamilnadu
புறநகர் ரயில் ரத்து - தென்னக ரயில்வேயின் அலட்சியம்.. கேட்காமலேயே அரசு பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர்!
புறநகர் மின்சார இரயில் ரத்து. தென்னக இரயில்வே அலட்சியம். கேட்காமலேயே அரசு பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
இதுகுறித்த அமைச்சர் சா.சி. சிவசங்கர் அவர்களின் அறிக்கை பின்வருமாறு.
சென்னையில் புறநகர் மின்சார இரயில் ரத்து முன்னறிவிப்பின்றியும் தகுந்த ஏற்பாடுகள் செய்யாமலும் உள்ளதால் மக்கள், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் மக்கள் எந்தவித பாதிப்புக்கும் ஆளாக கூடாதென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகள் தென்னக ரயில்வே மூலம் சீரமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 20 அன்று முதல் மேற்கொள்ளப்பட இருப்பதாக முந்தைய நாளான பிப்ரவரி 19 அன்று திடீரென அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக முறையான அறிவிப்பு தென்னக ரயில்வே இடமிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்படவில்லை. இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தென்னக ரயில்வேயை தொடர்பு கொண்ட பின்னரே மின்னஞ்சல் மூலம் விவரங்கள் பெறப்பட்டது.
இந்த திடீர் அறிவிப்பில் கூட்ட நெரிசல் நேரங்களில் (Peak Hours) ஐந்து நிமிடங்களுக்கு ஒரு புறநகர் மின்சார ரயில் சேவை என்பது 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்ற நேர அட்டவணை மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடைமுறையில் 30 நிமிட இடைவெளியில் மட்டுமே புறநகர் மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த குறைக்கப்பட்ட நேர அட்டவணை 20.02.2026 முதல் 05.04.2026 வரை கடைபிடிக்கப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் ஆண்டு இறுதி தேர்வு மற்றும் பருவத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் எவ்வித ஆலோசனையும் இன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளாமல் எழும்பூர் இரயில் நிலைய சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளினால் மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்விற்கான பயிற்சி மேற்கொள்ளவோ தேர்வினை உரித்த நேரத்தில் எழுதுவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.
இருப்பினும், சென்னை மாநகரின் போக்குவரத்து தேவையினை பூர்த்தி செய்வதற்காக மாநகர் போக்குவரத்துக்கழகம் மூலம் ஏற்கனவே தடத்தில் இயக்கப்பட்டு வரும் 314 சேவைகளுடன் கூடுதலாக 60 சிறப்பு பேருந்துகள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. மேலும் இந்த கூடுதல் இணைப்பு பேருந்து சேவைகளின் மூலம், எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து தலைமைச்செயலகம், எழிலகம், சென்ட்ரல், அரசு பொதுமருத்துவமனை, உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை கடற்கரை இரயில்நிலையம் முதலிய இடங்களுக்கு பயணிகள் தங்களது வேலை நிமித்தமாக பயணத்தேவையினை பூர்த்தி செய்யும் விதமாக திட்டமிட்டு இயக்கப்படுகிறது.
சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து பாதிப்பை இருபதாம் தேதி அன்றே மாநில அரசு கணித்து கூடுதல் பேருந்துகளை மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு ஓரளவு நிலைமை சீர் செய்யப்பட்டது. முன்னதாகவே தென்னக ரயில்வே மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உரிய தகவல் அளித்திருந்தால் மற்றும் உரிய ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு இருந்தால் பயணிகள் பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை கலந்தாலோசிக்கப்பட்டு எடுத்திருக்கலாம். புறநகர் இரயில் சேவைகள் இயக்கம் குறைக்கப்பட்ட தகவல் வெளியான உடன் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் பின்னர்தான் தென்னக ரயில்வே விழித்துக்கொண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இரயில் நிலையங்களிலிருந்து புனித தோமையார் மலை மற்றும் எழும்பூர் வரை குறுகியதூர இடங்களுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு புறநகர் மின்சார ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில் இருந்து தேவையான அளவு மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவதால் ஒரே இடத்தில் பயணிகள் கூடி சிரமம் ஏற்படாத வண்ணம் உடனுக்குடன் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரித்த நேரத்தில் செல்கின்றனர். புறநகர் இரயில் பயணிகள் 3 மாத காலத்திற்கான மாதாந்திர பயண அட்டை பெற்றுள்ளதால் கூடுதல் பேருந்துகளில் உரிய பயணச்சீட்டு கட்டணம் செலுத்தி தங்களது இடங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இருப்பினும், மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து தேவையினை அறிந்து சிறப்பான சேவையை எந்தவொரு இக்கட்டான காலங்களிலும் நாள்தோறும் வழங்கி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து இதுகுறித்து விவரங்கள் கேட்டறிந்து வருகிறார்கள். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் பயணிக்க ஏற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
Also Read
-
சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!
-
மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
குமரியில் ரூ.7 கோடியில் 90 வீடுகள்.. திறந்து வைத்த முகாம்வாழ் தமிழர்கள்.. பூரித்துப்போன முதலமைச்சர்!
-
இது பெண்களுக்கான ஆட்சி… நம்முடைய உழைப்புக்கான அங்கீகாரத்தை முதலமைச்சர் நிச்சயம் தருவார்: கனிமொழி எம்.பி!