Tamilnadu

‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!

ஒன்றிய பா.ஜ.க. அரசின் சுற்றறிக்கை!

கடந்த 29.1.2026 அன்று, ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘வந்தே மாதரம்’’ பாடலை– அதன் 6 பகுதிகளோடு அரசு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் பாட வேண்டியது கட்டாயமாகும். அங்கே கூடியுள்ள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும்’’ என்று சுற்றறிக்கை – ஆணை ஒன்றினை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

இப்பிரச்சினையை இப்போது கிளறிடும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுக்கு இந்தத் திடீர் தேச பக்தி எப்படி, ஏன் வந்தது தெரியுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதன் அடிக்கட்டுமானத்தின் முக்கிய கொள்கைத் தத்துவம் ‘Secular’ என்ற மதச்சார்பின்மையாகும்.

அரசு எந்த மதத்திற்குமான அரசு அல்ல; அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒன்று. அனைத்து மதச் சுதந்திரமும், உரிமையும் மற்றும் மதத்தை ஏற்காத நாத்திகர்களுக்கும்கூட அவர்களது உரிமையையும் பாதுகாக்கும் வண்ணம் பல சட்டக் கூறுகளை வைத்துள்ளது!

இதைத் தலைகீழாக மாற்றி, ஹிந்துராஷ்டிரம் – ஹிந்துத்துவா, அதன் கொள்கை; தற்போதுள்ள டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அதன் இடத்தில் மனுதர்ம சாஸ்திரத்தையே வைக்கும் அவர்களது தொடர் முயற்சிகளின் மற்றொரு முக்கிய கடமையாகும்!

வங்கத்துப் பார்ப்பன எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி!

‘வந்தே மாதரம்’ பாடலை, ‘பங்கிம் சந்திர சட்டர்ஜி’ என்ற வங்கத்துப் பார்ப்பன எழுத்தாளர் ‘ஆனந்த மடம்’ என்ற புதினம்  நாவல் ஒன்றில் உள்ள பாத்திரங்கள் பேசிடுவது, பாடுவதாக அமைந்துள்ள பகுதி இது!

அதில் வரும் வரிகளில், சிறுபான்மையினரை, இஸ்லாமியர்களை மிகவும் இழிவுபடுத்தி, ‘‘பன்றிகளோடு அவர்களை சிறைப்பிடிக்கவேண்டும், அடியோடு அழிக்கவேண்டும் – நிர்மூலம் செய்துவிட வேண்டும்’’ என்ற பகுதிகள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, வங்கத்துப் பெருமக்களான சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், எம்.என்.ராய் போன்றோர் வெறும் முஸ்லீம் வெறுப்பை மட்டுமே உட்கொண்டிருக்கும் இதனை நிராகரித்தனர்!

மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு அடித்தளமாக அமைந்ததற்குப் பலத்த எதிர்ப்பு வந்தது. திராவிட இயக்கம் இதனை வலுவாக எதிர்த்ததால், அன்று இது திரும்பப் பெறப்பட்டது!

1937–1938 இல் திரு.சி.இராஜகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சரான நிலையில், சட்டமன்றம் தொடங்குமுன் இதைப் பாடவேண்டும் என்று வற்புறுத்தியபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தனர். திராவிட இயக்கம் இதனை வலுவாக எதிர்த்ததால், அன்று இது திரும்பப் பெறப்பட்டது! அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகாமல், பழைய வெள்ளைக்கார இரட்டை ஆட்சி (Dyarchy) தான் நடைபெற்றது!

இப்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செக்யூலர் என்ற ‘மதச்சார்பின்மையை’ கொள்கையாகக் கொண்ட ஓர் அரசு, அதனை அறவே கைவிட்டு, திட்டமிட்டே ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யின் ஹிந்து நாடாகவே இந்தியாவை ஆக்கிட, ‘நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்’’ நடந்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

அரசியலமைப்புச் சட்ட மீறல், அவமதிப்பு என்பதோடு, உச்சநீதிமன்றம் இதுபற்றி முக்கிய தீர்ப்பும் தெளிவாகக் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் 1937 இல் நடத்திய கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில், முஸ்லிம்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தக் கூடாது என்று, அப்பாட்டில் இரண்டு பத்திகள் (Two Stanzas) மட்டுமே பாடவேண்டும் என்று இராஜேந்திர பிரசாத் முன்மொழிய, சர்தார் பட்டேல் வழிமொழிந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். மற்ற பகுதிகளை விட்டுவிட்டனர்.

இஸ்லாமியரோ, மற்ற மதத்தவரோ பாடிட ஏற்க முடியாது!

காரணம், அப்பகுதியில் ‘ஹிந்து கடவுள்களான’ துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி ஆகியவை 10 ஆயுதங்களை வைத்துள்ளன என்ற வரிகளையெல்லாம் இஸ்லாமியரோ, மற்ற மதத்தவரோ பாடிட ஏற்க முடியாது. மீறினால், அது அவர்களது மதச் சுதந்திர உரிமைகளைப் பறிமுதல் செய்யும்படி ஆகிவிடும். ஆகவே, அதனை விட்டுவிட முடிவு செய்தனர்.

மதவெறித்தனத்தின் உச்ச அக்கிரமம் அல்லாமல், வேறு என்ன?

ஆனால், இப்போது ஆறு பகுதிகளை ஒரே மூச்சில் – நாட்டுப் பண்ணுக்கு அடுத்துக் கட்டாயம் அனைவரும் பாடவேண்டும் என்று வற்புறுத்திடுவது அப்பட்டமான மதவெறித்தனத்தின் உச்ச அக்கிரமம் அல்லாமல், வேறு என்ன?

அந்நாளில் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் மட்டுமல்ல; பின்னர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட அரசியலமைப்புப் பணி மன்றத்திலும் (Constituent Assembly) கூட ‘ஜனகனமண’ என்ற தாகூர் பாடலை – 2 பத்திகளை மட்டுமே பாடி மரியாதை செய்யலாம் என்றுதான் முடிவு எடுத்து அறிவித்தனர். மூன்றாவதாக, உச்சநீதிமன்றத்தில் இதுபற்றிய முக்கிய வழக்கினை பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த நிலையில், உச்சநீதிமன்றமும் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.

42 ஆவது இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்!

பிறகு 1976 ஆம் ஆண்டு அடிப்படைக் கடமைகள் என்று ஒரு புதிய 51A பகுதியை இணைத்தனர், 42 ஆவது இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலம். அதில் நாட்டுப் பண், தேசியக் கொடி அதில் திணிப்பு அம்சமே இடம்பெறவில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதன் பின்னர், 1985 இல் கேரள உயர்நீதிமன்றத்தில், பிஜோ எமானுவேல், பினு மோல் மற்றும் பிந்து இம்மானுவேல்  வழக்கு ஒன்றில், ‘‘நாட்டுப்பண் என்ற இந்த வந்தே மாதரம் பாடலைப்  பாட முடியாது.  காரணம், எங்கள் மதக் கோட்பாட்டுக்கு எதிரானது இந்தப் பாடல்’’ என்றனர். அதனால், கேரள உயர்நீதிமன்றம், அந்த கிறிஸ்தவ மாணவர்களின் செயலைக் கண்டித்து தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை  மாற்றி, அம்மூன்று மாணவர்களை அந்தப் பள்ளியில்  மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது. பின்பு இரு நீதியரசர் கொண்ட அமர்வு இதனை உறுதி செய்தது.

அம்மாணவர்களை  தேசிய கீதத்தைப் பாட வற்புறுத்துதல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19(1)(அ) மற்றும் 25(1)-க்கும் மாறானது. எனவே அம்மாணவர்களை கொடியை வணங்கவும்,  தேசிய கீதத்தைப்  பாடவும் வற்புறுத்துதல், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறானதாகும். ஆதலால் அம்மாணவர்களை அப்பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு, உச்சநீதிமன்றம் அவ்வழக்கில் தீர்மானித்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு இவ்வாறிருக்க, ‘‘‘வந்தே மாதரம்’ பாடலை– அதன் 6 பகுதிகளோடு அரசு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் பாட வேண்டியது கட்டாயமாகும். அங்கே கூடியுள்ள அனைவரும் எழுந்து நின்று மரியாதை காட்டவேண்டும்’’ என்று சுற்றறிக்கை – ஆணையை ஒன்றிய பா.ஜ.க. அரசு எல்லா மாநிலங்களுக்கும் அனுப்புவது எவ்வளவுக் கொடுமை!

எனவே, மேலே சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும் அரிய தகவல்களை, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் சஞ்சே ெஹக்டே அவர்கள் 13.2.2026 இல் எழுதிய நடுப்பக்க கட்டுரை (ஆங்கில ‘இந்து’, 13.2.2026)மூலம் தந்துள்ளார்.

ஒருவர் பதவியேற்கும்போது,  ‘கடவுள்’ நம்பிக்கைப்படியும், கடவுள் நம்பிக்கையற்றவராயின், அவர் ‘மனசாட்சிப்படி’  என்று கூறியும் பதவிப் பிரமாணம் எடுக்க அரசியலமைப்புச் சட்டம்  உரிமை அளித்துள்ளது.

திணிப்பு அல்லாமல் வேறு என்ன?

எனவே, ஒன்றிய அரசின் சுற்றறிக்கை, நீதிக்கும், சட்டத்திற்கும், தனி மனித உரிமைக்கும், மதச் சுதந்திரத்திற்கும் எதிரானது; முற்றிலும் எதிரானதாகும் – இது  திணிப்பு அல்லாமல் வேறு என்ன?

‘திடீர் தேச பக்தர்களாகக்’ காட்டிக் கொள்ள முயலும் இந்த ஆர்.எஸ்.எஸ். சங்கிகள், தேசியக் கொடி வணக்கம் செலுத்துகையில் ‘ஷாகா’வில் தனிக்கொடி, காவிக்கொடி, சுவஸ்திக் சின்னம் போட்டு, அதனை எதிர்த்துப் பரிசு பெறலாமே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ‘24 கேரட்’ தியாக பரம்பரையினரா இவர்கள்? 

மானிட  உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்!

பிறகு, ஏன் இந்த இரட்டை வேடம்? – இது நம் கேள்வி அல்ல; விவரம் அறிந்த மக்களின், அறிஞர்களின் கேள்வி. ஆதாரப்பூர்வமாக இக்கூற்றுக்களை மறுப்பார்களா? கண்டனங்கள் குவியட்டும்! மானிட  உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்!

Also Read: “பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!