Tamilnadu
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
மாமேதை காரல் மார்க்ஸ் ஒரு ஜெர்மானிய தத்துவஞானி, புரட்சிகர, பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார். 1841-இல் பட்டம் பெற்ற மாமேதை கார்ல் மார்க்ஸ், சில காலம் இதழியல் துறையில் பணிபுரிந்தார். தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிசு நகரம் சென்றார். 1847இல் தத்துவத்தின் வறுமை (The Poverty of Philosophy) என்னும் முதல் நூலை வெளியிட்டார்.
மாமேதை காரல் மார்க்ஸின் மார்க்ஸிய கோட்பாடுகள் இந்த மண்ணுலகில் மனிதர்கள் மனிதர்களாய் வாழ்வதற்கு வழிகாட்ட முனையும் ஒரு தத்துவக் கோட்பாடு ஆகும் எனக் கூறியுள்ளார். “என்றும் நினைவில் கொள், ஒரு மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது” என்று கூறிய மாமேதை கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள், இன்று வரை உயிர்ப்புடன் இருக்கின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 3.4.2025 அன்று சட்டப்பேரவையில், “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்தவர், இழப்பதற்கென்று எதுவுமில்லை-பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்கள்.
வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ் அவர்கள். அத்தகைய மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களது உருவச் சிலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகம், கன்னிமாரா பொது நூலகத்தின் வாயிலில் 85 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
எழுத்தாளரும், மார்க்சிய சிந்தனையாளருமான பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்கள் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து எழுதிய கடிதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சர் அவர்களிடம் வழங்கியதன் அடிப்படையில் அவரது திருவுருவச்சிலை சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காரல் மார்க்ஸ் சிலையை வடிவமைத்த சிற்பி என்.எஸ். கார்த்திகேயன் அவர்களை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது குறித்து கலைஞர் செய்தி தொலைக்காட்சிக்கு சிற்பி என்.எஸ். கார்த்திகேயன் அளித்த சிறப்பு நேர்கானல் அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், “சென்னையில் காரல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். உலகின் தலைசிறந்த போராளியாக வாழ்ந்து மறைந்த மார்க்ஸின் சிலையை வடிவமைத்ததில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.
மார்க்ஸ் பெரும் புரட்சியாளர் என்பதால், அவரது சிலை பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, ஒன்பதரை அடி உயரத்தில் நிறுவப்பட்ட இந்த வெண்கலச் சிலையை உருவாக்க மூன்று மாதங்கள் ஆனது.
முதலில் சிலைக்கு கொடுக்கப்பட்ட வண்ணத்தை மாற்றி, வேறு வண்ணம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கூறினார். அதற்கேற்ப தற்போதைய வண்ணத்தில் சிலை வடிவமைக்கப்பட்டது. சிலை திறக்கும் நிகழ்வின்போதே, அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் முதலமைச்சர் என்னை சிறப்பு செய்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கம்யூனிஸ்ட் கட்சியினரும் என்னை பாராட்டினர்.
சிலை உருவாக்கும் போது மார்க்ஸ் குறித்து பல நூல்களைப் படித்து பூரித்து போனேன். அப்படிப்பட்ட மகத்தான தலைவரை வடிவமைத்ததை நினைத்து நெகிழ்ச்சியடைகிறேன்.
இந்த சிலை வடிவமைப்பில் அமைச்சர் எ.வ. வேலு பல்வேறு வகையில் உதவி செய்தார்; அவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இந்த சிலையை நிறுவி முதலமைச்சர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அந்த வரலாற்றுச் செயலில் ஒரு அங்கமாக நானும் இருந்தேன் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன்.” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ஆய்வாளர்களுக்கான உதவித் தொகை வழங்குவதில் ஏன் தாமதம்? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்த பதில்!
-
கும்மிடிப்பூண்டியில் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு! : புதிய உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!