Tamilnadu
“சிவந்தது சென்னை!” - மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால், சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகம், கன்னிமாரா பொது நூலகத்தின் வாயிலில் 85 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள்;
மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்கள் ஒரு ஜெர்மானிய தத்துவஞானி, புரட்சிகர, பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.
1841-இல் பட்டம் பெற்ற மாமேதை கார்ல் மார்க்ஸ், சில காலம் இதழியல் துறையில் பணிபுரிந்தார். தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிசு நகரம் சென்றார். 1847இல் தத்துவத்தின் வறுமை (The Poverty of Philosophy) என்னும் முதல் நூலை வெளியிட்டார்.
மாமேதை கார்ல் மார்க்ஸின் மார்க்ஸிய கோட்பாடுகள் இந்த மண்ணுலகில் மனிதர்கள் மனிதர்களாய் வாழ்வதற்கு வழிகாட்ட முனையும் ஒரு தத்துவக் கோட்பாடு ஆகும் எனக் கூறியுள்ளார். “என்றும் நினைவில் கொள், ஒரு மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது” என்று கூறிய மாமேதை கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள், இன்று வரை உயிர்ப்புடன் இருக்கின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 3.4.2025 அன்று சட்டப்பேரவையில், சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்தவர், இழப்பதற்கென்று எதுவுமில்லை-பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர் மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்கள். வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்;
பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ் அவர்கள். அத்தகைய மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களது உருவச் சிலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகம், கன்னிமாரா பொது நூலகத்தின் வாயிலில் 85 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
எழுத்தாளரும், மார்க்சிய சிந்தனையாளருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து எழுதிய கடிதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கியதன் அடிப்படையில் அவரது திருவுருவச்சிலை சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, “மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு: சிவந்தது சென்னை!
“இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்றுமில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது!
நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் திராவிட மாடல்!”
Also Read
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!