Tamilnadu
3 மாவட்ட தேவஸ்தான திருக்கோயில்களுக்கு அரசு மானியம்... ரூ.36 கோடிக்கான காசோலைகளை வழங்கினார் முதலமைச்சர்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.02.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 18 கோடி ரூபாய்க்கான காசோலையை சுசீந்திரம் – கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்கள் இணை ஆணையர் / செயல் அலுவலர் அ. ஜான்சிராணி அவர்களிடமும், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின்கீழ் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 10 கோடி ரூபாய்க்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்களின் தக்கார்/உதவி ஆணையர் ர.ரஞ்சிதா அவர்களிடமும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 8 கோடி ரூபாய்க்கான காசோலையை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்களிடமும், என மொத்தம் 36 கோடி ரூபாய்க்கான காசோலைகளையும், முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 389 பக்தர்களுக்கு அரசு மானியம் தலா ரூ.30,000/-வீதம் 1.17 கோடி ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு அதற்கான காசோலைகளையும் வழங்கினார்.
முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு முனைப்பான திட்டங்களும், சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு இறையன்பர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 57 மாதங்களில் 12,803 திருக்கோயில்களில் 8,607 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 29,149 திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 4,992 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 16,595 திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இதுவரை 4,087 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, 8,347.56 கோடி ரூபாய் மதிப்பிலான 8,082.70 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் (Master Plan) பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை புரியும் முக்கிய திருக்கோயில்களான திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், பழநி, அழகர்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் 1,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, 14 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியம் வழங்குதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத 490 திருக்கோயில்கள், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 225 திருக்கோயில்கள் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக அரசால் ஆண்டுதோறும் மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்றபின், 2021-2022ஆம் நிதியாண்டில் கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்களுக்கான அரசு மானியம் 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களுக்கான அரசு மானியம் 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட திருக்கோயில்களில் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப் பெறுவதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து, இத்திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக இதுவரை அரசு மானியம் வழங்கப்படாத நிலையில், 2022 - 2023 ஆம் நிதியாண்டில் முதல்முறையாக அரசு மானியமாக 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2023-2024 ஆம் நிதியாண்டில் கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்களுக்கான அரசு மானியம் 6 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களுக்கான அரசு மானியம் 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2024 – 2025 ஆம் நிதியாண்டில் அரசு மானியம் கன்னியாகுமரி தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு 8 கோடி ரூபாயிலிருந்து 13 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு 5 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாகவும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.
2025–2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, “கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு அரசு மானியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றிடும் வகையில், திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு 13 கோடி ரூபாயிலிருந்து 18 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாகவும் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 6 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாகவும் உயர்த்தி, அதற்கான காசோலைகளை முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
முக்திநாத் ஆன்மிகப் பயணம் சென்று வந்த பக்தர்களுக்கு அரசு மானியம்
முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் மனநிறைவோடு இறை தரிசனம் பெறும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் அரசு மானியத்தில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், இராமேஸ்வரத்திலிருந்து – காசிக்கும் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும், சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆன்மிகப் பயணம் சென்று வரும் தலா 500 பக்தர்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
2023–2024 ஆம் நிதியாண்டில் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், 2025–2026 ஆம் நிதியாண்டில் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 50,000 ரூபாயிலிருந்து 1 இலட்சம் ரூபாயாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
அதன்படி, நடப்பாண்டில் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தகுதி வாய்ந்த 389 பக்தர்களுக்கு அரசு மானியமாக தலா ரூ. 30,000/- வீதம் 1.17 கோடி ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.
இந்த அரசு பொறுப்பேற்றபின், 9.94 கோடி ரூபாய் அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 1,034 பக்தர்களுக்கு 2.36 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மானசரோவர் ஆன்மிகப் பயணம் செல்ல அனுமதி வழங்கப்படாததால் அரசு மானியம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்கள் முதல் நீதித்துறை தரநிலைகள் வரை.. - திமுக எம்.பி-க்கள் கேள்வி!
-
ரூ.100 கோடியில் முடிவுற்ற பணிகள் முதல் ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் வரை... முதலமைச்சர் அசத்தல்!
-
மீண்டும்... மீண்டும்.. அன்று பார்க்.. இன்று சிவகாசி.. ரயில் நிலையம் மூலம் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசு!
-
11.60 இலட்சம் மக்களுக்காக... 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடக்கம்! : திராவிட மாடலின் மற்றொரு சாதனை!
-
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை திறப்பு! - முழு விவரம் உள்ளே!