Tamilnadu
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜன. 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நேற்று (பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான உருப்படியான ஒரு விசயமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், வழக்கம்போல இந்த முறையும் தமிழ்நாட்டுக்கு தேவையான ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதற்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த சூழலில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடந்தது. தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்களிடம் உறுப்பினர்கள் கேள்விகளும் எழுப்பினர்.
இதில் திமுக எம்.பி-க்கள் எழுப்பிய கேள்விகள் வருமாறு :-
=> வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் ரூ.100 கோடி இலக்கை அடைய நடவடிக்கை என்ன? - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.!
வேளாண் பொருட்களின் ஏற்றுமதி இலக்கு தற்போதைய அளவை விட இருமடங்காக (ரூ.100 பில்லியன்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையா? அந்த இலக்குகளை அடைவதற்காக, இந்திய வேளாண் பொருட்களின் தரம் மற்றும் அளவை உறுதிசெய்ய செயல்படுத்தப்படும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் யாவை? ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்புத் திட்டங்கள் ஏதேனும் இருந்தால், அதன் விவரங்கள் யாவை?
=> தமிழ்நாட்டில் AHIDF திட்டத்தின் செயல்பாடுகள் - திருவண்ணாமலை திமுக எம்.பி. சி. என். அண்ணாதுரை மற்றும் காஞ்சிபுரம் திமுக எம்.பி. செல்வம்!
திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (AHIDF) திட்டத்தின் கீழ் செயல்பாட்டிலுள்ள திட்டங்களின் விவரங்கள் மற்றும் மொத்த எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை மற்றும் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO), குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் தனியார் தொழில்முனைவோர் AHIDF திட்டத்தினால் பயன்பெற ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இந்த மாவட்டங்களின் கிராமப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புறங்களில் சிறு அளவிலான பால் பதப்படுத்தும் அலகுகள், மதிப்புக்கூட்டல் மற்றும் குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே இத்திட்டத்தை பிரபலப்படுத்த திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு அல்லது பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படுமா?
=> பிரதமர் வீடு வழங்கும் திட்டம் - தாமதங்களை சரிசெய்யுமா ஒன்றிய அரசு? - காஞ்சிபுரம் திமுக எம்.பி. செல்வம்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட, கட்டப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட வீடுகளின் விவரங்கள் குறித்து திமுக காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கேட்டுள்ளதாவது:-
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தகுதியுள்ள மக்களில் அவர்களின் விகிதாசாரப் பங்கு எவ்வளவு? காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள ஏராளமான தகுதியுள்ள குடும்பங்கள், திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டிருந்தபோதிலும், இன்னும் தற்காலிக அல்லது நெரிசலான வீடுகளில் வசித்து வருவ்அதன் காரணம் என்ன? நிலுவையில் உள்ள வீடுகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், தவணைகளை விடுவிக்கவும் மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு அடிப்படை சேவைகளை வழங்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
=> பெரு நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துக! - திமுக எம்.பி. ராஜாத்தி சல்மா
100 கோடிக்கு மேற்பட்ட மூலதனம் கொண்ட பெரிய பொது நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஒன்றிய அமைச்சகத்திடம் உள்ள திட்டங்கள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
2014ஆம் ஆண்டுமுதல் விதியை மீறி பெண் பிரதிநிதித்துவத்தை அனுமதிக்காத சம்பவங்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த நிறுவனங்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் யாவை? 2021ஆம் ஆண்டுமுதல் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு, நிறுவனங்களில் அதிக பாலினப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்காக, பணியிடப் பாலின சமத்துவச் சட்டத்தை இயற்ற இந்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
=> சேலம் உருக்காலையில் முதலீடுகள் நிறுத்தியதது ஏன்? - தென்சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
2,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கும் சேலம் உருக்கு ஆலையின் முதலீடுகளை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது ஏன் என திமுக தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
JSW-SAIL கூட்டுத் திட்டத்தில் தமிழ்நாடு சேர்க்கப்படாததற்கான காரணங்கள் யாவை? சிறப்பு எஃகுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதா? உருக்குத் துறை முதலீடுகள் மாநிலங்களுக்கு இடையில் சமமாகப் பகிரப்படுவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?
=> ஏழை கைதிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் செயல்பாடுகள் என்ன? - கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் மற்றும் தேனி திமுக எம்,பி. தங்க தமிழ்ச்செல்வன்!
2023 ஆம் ஆண்டு கைதிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தின்கீழ், ஏழை கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் தனது தற்போதைய வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) திருத்தியுள்ளதா என திமுக மக்களவை உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்கள். கைதிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டம்-2023இன் கீழ், இன்றுவரை மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி எவ்வளவு? என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
=> சூரிய மின்சக்தி கூரை அமைக்கும் திட்டம். செயல்படுத்துவதில் தாமதன் ஏன்? - திமுக எம்.பி. பி. வில்சன்
பிரதம மந்திரி சூர்ய கர்: முஃப்ட் பிஜ்லி யோஜனா திட்டத்தின்கீழ் சூரிய கூரைகள் அமைப்பதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் முடிக்கப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகளின் எண்ணிக்கை, விண்ணப்பங்களுக்கும் பயனாளிகளுக்கும் இடையிலான இடைவெளிக்கான காரணங்கள், ஒப்புதல் அல்லது செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை நிறுவப்பட்ட அமைப்புகள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள், சவால்கள் மற்றும் திருத்த நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேட்ட்ள்ளார்.
=> மருந்து உற்பத்தியில் இந்தியா இறக்குமதி மருந்துகளை சார்ந்திருக்கிறதா? - திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு கேள்வி
மருந்து உற்பத்தியில் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களை (APIs) இந்தியா எந்த அளவிற்குச் சார்ந்துள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதிக இறக்குமதி சார்புநிலை கொண்ட முக்கிய மூல நாடுகள் மற்றும் சிகிச்சை பிரிவுகள் யாவை மற்றும் புவிசார் அரசியல் நிலையற்ற தன்மைகளால் எழும் கண்டறியப்பட்ட அபாயங்கள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.
=> திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை! - திமுக எம்.பி. ராஜாத்தி சல்மா கோரிக்கை
திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படாதது குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு தனது நாடாளுமன்ற கேள்வியின் மூலம் கொண்டு சென்றுள்ளார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா.
அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில், குறிப்பாக உணவுப் பாதுகாப்புத்துறையில், திருநங்கை சமூக உறுப்பினர்களைச் சேர்ப்பதை உறுதிசெய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? திருநங்கை சமூகத்தைச் சேர்ப்பது குறித்த NALS A தீர்ப்பின்படி, 2021 ஆம் ஆண்டு முதல் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்றும் அவர் கேட்டுள்ளார்.
=> நீர் மூலம் பரவும் நோய்களை தடுக்க நடவடிக்கை என்ன? - திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் நீர் மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதுகாப்பற்ற நீர் மற்றும் சுகாதாரமின்மை ஆகியவற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் என்ன? நீர் மூலம் பரவும் நோய்கள் குறித்து, குறிப்பாக கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? நோய்களின் பாதிப்புகளைக் குறைப்பதற்காக, மக்களிடையே நீர் சுத்திகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
=> அமெரிக்க வரியால் சரியும் ஏற்றுமதி - பொள்ளாச்சி திமுக எம்.பி. ஈஸ்வரசாமி
ஏப்ரல் 2025 முதல் உயர்த்தப்பட்ட வரியினால் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்த தரவுகளை அரசாங்கம் சேகரித்து வெளியிட வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்மார்ட்போன்கள், மருந்துகள், ரத்தினங்கள், சூரிய மின்சக்திப் பலகைகள், உலோகங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றுமதிச் சரிவு மற்றும் உற்பத்தியில் மதிப்பிடப்பட்ட இழப்பு குறித்த விவரங்கள் யாவை? வியட்நாம், மெக்சிகோ மற்றும் சீனா போன்ற போட்டி நாடுகள் இந்தியாவின் இழந்த சந்தைப் பங்கைக் கைப்பற்ற அனுமதித்த ஒப்பீட்டுத் தீர்வைக் கட்டமைப்பு குறித்து அரசாங்கம் ஆய்வு நடத்தியுள்ளதா? இந்தியாவின் ஏற்றுமதித் தளம் மேலும் சிதையாமல் தடுக்க, சூரத், மும்பை மற்றும் கோயம்புத்தூர் போன்ற குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் உட்பட பாதிக்கப்பட்ட ஏற்றுமதிக் குழுமங்களுக்கு ஆதரவளிக்க முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.
=> பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி - அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன்
டிபிஐஐடி-யால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா என்று திமுக அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் குறித்த தரவுகளை அரசாங்கம் தொகுக்கிறதா, அப்படியானால், அத்தகைய நிறுவனங்களின் சதவீதம் மற்றும் எண்ணிக்கை என்ன? ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த நபர்களால் நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா? மேலும் அந்நிறுவனர்களை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள், சலுகைகள் அல்லது வழிகாட்டுதல் நடவடிக்கைகள் யாவை? கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மற்றும் வழிமுறைகளின்கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவியின் விவரங்கள் என்ன?
Also Read
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!