Tamilnadu

அதிமுக என்ற கூடாரத்தில் பா.ஜ.க என்ற ஆர்.எஸ்.எஸ் ஒட்டகம் நுழைகிறது : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!

தமிழ்நாட்டில் கால் பதிக்க பி.ஜே.பி.யின் அமித்ஷாக்கள் பல தந்திரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. என்ற கூடாரத்தில் முதலில் நுழைந்து, பிறகு கூடாரத்தையே தன் வசமாக்கும் தந்திரம்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த சூழ்ச்சி வாண வேடிக்கைகளைக் காட்டினாலும், மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணியே வெற்றி பெறும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி, நேற்று (23.1.2026) வந்து, மதுராந்தகத்தில் தங்களது கூட்டணியின் சார்பில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். வட நாட்டில் பார்க்கும் ‘சுப நாள்’ என்னும் (‘வசந்த பஞ்சமி’ நாளாம்!) நாளில் தொடங்கி வைத்துள்ளார்!

கடந்த ஆறு மாதங்களாக பி.ஜே.பி.யின் சிந்தனை எத்தகையது?

கடந்த ஆறு மாதங்களாக, தி.மு.க. தலைவர் (மு.க.ஸ்டாலின்) அவர்களது தலைமையில் அமைந்து, தொடர்ந்து வெற்றிக் கனிகளைப் பறித்து வரும், கூட்டணிக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க முயற்சித்து, அது தனது சொந்தக்காலில் நிற்க முடியாததால், அ.தி.மு.க. போன்ற ‘திராவிட’ முத்திரையுள்ள எதிர்க்கட்சியான ‘பெரிய கட்சி’யின் தோள்மீது சவாரி செய்தால்தான் முடியும்; இல்லையேல், தி.மு.க. கூட்டணியை அசைக்கவே முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உணர்ந்துள்ளதால்,

உள்துறை அமைச்சரான அமித்ஷாமூலம், அச்சுறுத்தல்களின் காரணமாக – எதிர்க்கட்சித் தலைவர் (அ.தி.மு.க. பொதுச்செயலாளர்) எடப்பாடி பழனிசாமிமூலம், ஒரு நிர்ப்பந்தக் கூட்டணியை – அ.தி.மு.க. என்ற பெரிய (தமிழ்நாட்டில்) கட்சியைத் தங்களது அரசியல் கூண்டுக்குள் (சாக்கில்) அடைத்து, சவுக்கெடுத்த ரிங் மாஸ்டர் போல பா.ஜ.க. தனது வெகுநாளைய ஆசையான, தமிழ்நாட்டைக் காவி அரசியல் மண்ணாக்கிட ‘வியூகம்’ வகுத்துக் களம் இறங்கி, வடக்கே செய்த வித்தைகளைக் கையாண்டு பார்த்தது.

இது தந்தை பெரியாரின் பகுத்தறிவு – சுயமரியாதை மண் ஆகும்.

இதில், ஜாதி, வர்ணாசிரமப் பாதுகாப்பு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ேஸா, அதன் அரசியல் அமைப்போ ஆழமாக ஒருபோதும் காலூன்றிவிட முடியாது என்பது பட்டாங்கமான சுவரெழுத்து.

கூடாரத்தில் நுழையும் ஒட்டகம்!

வட மாநிலங்களில் அமித்ஷா போன்றவர்கள் கையாண்ட வித்தைகளும், வியூகங்களும் இங்கே செலாவணி ஆகாது!

அந்தக் கட்சித் தாவல் எம்.எல்.ஏ.,க்கள் ‘‘ஆயாராம் காயாராம்’’ பாடிக்கொண்டே முதலில் கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம், பிறகு கூடாரத்துக்காரர்களையே வெளியே துரத்திவிட்டு, கூடாரத்தைத் தனதாக்கிக் கொண்ட பழமொழி – தத்துவப்படி நடந்துகொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது இங்கே ஒருபோதும் பலிக்காது!

சென்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த 4 உறுப்பினர்களின் எண்ணிக்கையாவது, இம்முறை கிடைக்குமா? என்பதே சந்தேகந்தான்! கட்சிகளைப் பிளந்து, ‘‘விபீடணர்களையும், சுக்ரீவன்களையும்’’ தங்கள் வசம் – ஆசைகாட்டியோ, பயமுறுத்தியோ ‘‘திரிசூல’’ அரசியலை எல்லாம் பயன்படுத்தியோ, களம் காண ஆயத்தமாகிய நிலையில்தான், பா.ஜ.க.வின் தலைமைத் தேர்தல் பிரச்சாரகரையே முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, அரசியல் ஆலாபனக் கச்சேரி செய்துள்ளனர்!

ஆனால், அவரது அணியோ, பரிதாபத்திற்குரிய கூட்டணியாக மேடையை ‘‘அலங்கரித்தது!’’ மாநிலத் தலைவர் மீதே 4 கோடி ரூபாய் தேர்தல் வழக்கு நிலுவை!

பிரதமர் மோடி பேசிய கூட்ட மேடையில், கூனிக் குறுகி உட்கார்ந்தோர் எத்தகையவர்கள்?

வழக்கில் சிக்கிக்கொண்டோர், வெளியே வருவதற்கு வழி தேட முனைவோர், வழக்கில் சிக்கி விடக்கூடாதே என்று கவலையோடு, முகவரி இழந்து முகாரி பாடிய சிலர், தனது பேச்சுகள் தன்னையே வறுத்தெடுக்கும் என்ற நிலையில்,

‘‘ஆசை வெட்கமறியாது’

அச்சுறுத்தலால் பணிவு

வேறு வழியறியாது’’ என்பதால்,

‘சரணம்’, ‘சரணம்’, ‘காவிச் சரணம்’ என்று மேடையில், கூனிக் குறுகி, ‘தம் நெஞ்சே தம்மைச் சுடும்’ என்று அமர்ந்திருந்தனர் சிலர்.

சென்ற முறை இருந்த கட்சிகள்கூட, அந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முழுமையாகக் கூட இல்லை. வெடிப்புகள், சுவர் போல ஒன்று சேர்ந்து, மகிழ்ச்சியில்லாத ஒரு கூட்டணிக் காட்சியாகவே இருந்தது.

பேசிய பிரதமர் மோடி 45 நிமிடங்களில், முன்பு அரைத்த மாவையே அரைத்தார்; இதனால் அவர்களுக்கு எந்த உருப்படியான அரசியல் அறுவடையும் கிடைக்காது!

மழையிலே நனைந்து (‘சாவி’யான) நெற்கதிர்கள் மூலம் என்ன கிடைக்கும்? அதைத்தான் அவர்கள் தங்கள் அரசியல் களத்து மேட்டு அறுவடைப் பயனாகப் பெற முடியும்?

ஒரு என்ஜினால் இழுக்க முடியாதோ!

‘டபுள் என்ஜின்’ என்பதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தால், ஒரு எஞ்சினால் இழுக்க முடியாது போனதாலோ என்னவோ அப்படி ஒரு சொல்லாடல்!

ஆனால், தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள், கல்வி, மருத்துவம், அமைதி, வளர்ச்சி என்பன வட மாநிலங்களில் இருக்கும் ‘டபுள் என்ஜின்’கள் - பா.ஜ.க. அரசுகள் எட்ட முடியாத உயரத்திற்குச் சென்று, உலகப் பாராட்டைப் பெற்று வலம் வருகின்றன!

தமிழ்நாட்டு மக்கள் தெளிவும், உறுதியும் பெற்று, பலனடைந்தவர்கள், நன்றியை மறக்காதவர்கள் என்பதால்,

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் சுருக்கென்று சொன்ன ‘டப்பா என்ஜின்’களால் பிரச்சாரம் வெறும் பெருவெளிக் கூத்தாகவே முடிவது உறுதி!

எவ்வளவு ‘மத்தாப்பு – வாண வேடிக்கைகளை’க் காட்டினாலும், தெளிவான நிலைப்பாட்டை மேற்கொண்டு, தி.மு.க. கூட்டணி என்ற கொள்கைக் கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்ற முத்திரைப் பதிப்பார்கள் என்பது முக்காலும் உண்மையே!

Also Read: ஆளுநர் வெளிநடப்பு முதல் முதலமைச்சரின் பதிலடி வரை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது என்ன?