Tamilnadu
“விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் க.பரமத்தி, சின்னதாராபுரம், கார்வழி, புன்னம், விஸ்வநாதபுரி, தும்பிவாடி மற்றும் காசிப்பாளையம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. தென்னிலை கிராமத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையமும் மற்றும் 11 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. தற்போது தென்னிலை கிராமத்தில் ரூ.45 இலட்சம் செலவில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிச்சயம் கூடுதலான ஆரம்ப சுகாதார நிலையம் வரும் பட்சத்தில் அமைத்து தரப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஏற்கெனவே ஒன்றிய அமைச்சகத்தில் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான அறிவிப்புகள் வரும்பட்சத்தில் நிச்சயம் மன்ற உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும்.
இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஏற்கெனவே அவருடைய அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், கோவிலூர், பெரிய மஞ்சவெளி, மன்வாரி, கோட்டப்பட்டி, நந்தனூர், பன்னப்பட்டி, ஓதாம்பட்டி மற்றும் ஈசநத்தம் ஆகிய 8 இடங்களில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டித் தரப்பட்டுள்ளது. காசிப்பாளையம், சின்னதாராபுரம் ஆகிய 2 இடங்களில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. மாலைக்கோவிலூர், ஈசநத்தம், சின்னதாராபுரம், குரும்பட்டி, கே.பாரமதி, பவித்ரம் ஆகிய 6 இடங்களில் ஆயுஷ் நலவாழ்வு மையங்கள் சீரமைத்து தரப்பட்டிருக்கிறது. மலைக்கோவிலூர், சின்னதாராபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பணிகள் செய்து தரப்பட்டுள்ள நிலையில் அவருடைய கோரிக்கைகளும் ஏற்கெனவே நான் சொன்னதுபோல ஒன்றிய அரசிடம் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்கின்ற வகையில் தரம் உயர்த்தும் பணிகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அவருடைய கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
மன்ற உறுப்பினர் அவர்கள் சொன்னதுபோல பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே ரூ.5 கோடி செலவில் கட்டிடப் பணிகள் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருந்துக் கொண்டிருக்கிறது. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவிருக்கிறது. அவர் கோரியிருப்பதை போல நிதி ஆதாரம் தந்து கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
20 ஆண்டுகளுக்கு முன்னாள் குடும்ப மருத்துவமனை என்கின்ற இந்த மருத்துவக் கட்டமைப்பு அகற்றப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூடுதலாக்கப்பட்டிருக்கிறது. 1990களுக்கு முன்னாளில் சுகாதார நிலைய அமைப்புகள் என்று கிராம வாரியாக 8,713 இடங்களில் அமைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் பல்வேறு வகைகளிலான கோரிக்கைகள் வரப்பெற்றதை தொடர்ந்து, இப்போது ஒரு துணை சுகாதார நிலையத்திற்கு 5000 மக்கள் தொகை என்கின்ற வகையில் அமையப் பெற்று வருகிறது. இப்போது துணை சுகாதார நிலையங்கள் கடந்த நிதிநிலை அறிக்கையில் 642 இடங்களில் அமையும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தப் பணிகள் முடிவுற்று மிக விரைவில் அமையும்பட்சத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்னும் 10 நாட்களில் 642 இடங்களில் துணை சுகாதார நிலையத்தினை திறந்து வைக்கிறார்கள். அவர் கோரிய இடத்தில் புதிய துணை சுகாதார மையம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதற்குரிய விளக்கங்கள் பல்வேறு முறை இந்த மன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. புதிய அமைப்புகள் வரும்போது அங்கு இருக்கின்ற மக்கள் தொகை, மருத்துவமனைகளுக்கு இடையே இருக்கின்ற இடைவெளி போன்ற பல்வேறு காரணங்களை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பாபநாசம் வட்டம், வீரமாங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 25KV மின்மாற்றி மற்றும் இதர உபகரணங்கள் அமைத்து தர வேண்டும் என்கின்ற கேள்விக்கு அமைச்சர் அவர்கள் இன்றோ நாளையோ மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களை அனுப்பி அவர் கேட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்தார்கள்.
Also Read
-
“ஆளுநர் உரைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் ஒரே தீர்வு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1,503.78 கோடி செலவில் மறுசீரமைக்கும் பணிகளுக்காக அனுமதி! : முழு விவரம் உள்ளே!
-
“அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்! எந்த கவலையும் பட வேண்டாம்!” : முதலமைச்சர் உறுதி!
-
வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு : 10 சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி உதவித் தொகை!
-
ரூ.118.42 கோடி மதிப்பீல் புதிய கட்டடங்கள் : 126 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர்!