Tamilnadu

🔴LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் - முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று மொத்தம் 9 சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதன்படி, 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு சட்ட மசோதா, 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் இரண்டாம் சட்ட மசோதா மற்றும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீர்வளங்கள் சட்ட மசோதா ஆகியவை அவையில் நிறைவேற்றப்பட்டன.

மேலும், 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை 2026 ஜூலை மாதம் வரை நீட்டிப்பதற்கான சட்ட மசோதாவும், திருச்சி, கடலூர், தேனி ஆகிய மூன்று சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பதற்கான சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பிச்சையெடுப்பதைத் தடுத்தல் சட்டத்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட அல்லது குணமடைந்த நபர்களை குறித்து பாகுபாடு காட்டும் சொற்களை நீக்கும் சட்ட மசோதாவும் அவையில் அனுமதி பெற்றது.

அத்துடன், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையச் சட்ட மசோதா, தமிழ்நாடு பள்ளிகள் கட்டண திருத்தச் சட்ட மசோதா மற்றும் 2026 ஆம் ஆண்டு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் குறிப்பிட்ட பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் சட்ட மசோதா ஆகியவையும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

Updated at: January 24, 2026 at 1:25 PM

மக்களுக்காக செய்த அனைத்தும் வரலாறாகப் பதிவு!

“திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று இன்றுடன் 1,724 நாட்கள் ஆகின்றன.

இதுவரை 8,655-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

15,117 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன்.

பிற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன்.

71 முறை மாவட்ட அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

44 லட்சத்து 44 ஆயிரத்தி 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன்.

மக்களுக்காக நான் செய்த அனைத்தும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது!”

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

Updated at: January 24, 2026 at 10:49 AM

அடுத்தும் திராவிட மாடல் ஆட்சிதான்!

எனக்கும் என் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு உழைத்திருக்கிறேன், இந்த ஐந்தாண்டு வளர்ச்சியை பார்த்து அடுத்த ஐந்தாண்டு இருக்கும் திராவிட மாடல் அரசு தான் தொடரும், என தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளார்கள். உறுதியாக கூறுகிறேன் நாங்கள்தான் மீண்டும் வருவோம், மீண்டும் வருவோம், மீண்டும் வெல்வோம்!

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Updated at: January 24, 2026 at 10:49 AM

மதச்சண்டை இல்லை. சாதிச்சண்டை இல்லை. குழு வன்முறை இல்லை. தொடர் வன்முறை இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை ஆகும். - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Updated at: January 24, 2026 at 10:49 AM

அந்த ஆளுநர்கள் இப்படி இல்லை!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேச வேண்டிய நான்

ஆளுநருக்கு விளக்கம் அளித்து பேசும் நிலையில் இருக்கிறேன். இது பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அம்மையார் ஜெயலலிதா அவர்களும் எதிர்கொள்ளாத நெருக்கடி ஆகும். அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள் கூட இப்படி இல்லை.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

Updated at: January 24, 2026 at 10:49 AM

மேலும் 1 லட்சம் வீடுகள் !

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3500 கோடி ரூபாய் செலவில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்!

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும்!

தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 3000 ஆக உயர்த்தி வழங்கப்படும்!

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Updated at: January 24, 2026 at 10:49 AM

தேச விரோதிகள் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்!

யாரும் எங்களுக்கு தேசபக்திப் பாடம் எடுக்கும் நிலைமையில் நாங்களும் இல்லை.

தேசபக்தி பாடம் எடுக்கும் அளவுக்கு இந்த தேசத்துக்காக அவர்கள் போராடியவர்களும் அல்ல. ஜனநாயக தேசத்தின் அரசமைப்பு மாண்பை, எதேச்சதிகாரத் தன்மையுடன் மாற்ற நினைப்பவர்கள் தான் இன்றைய காலக்கட்டத்தில் தேச விரோதிகள். அவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Updated at: January 24, 2026 at 10:49 AM

நாட்டுப் பற்றிலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள்!

தேசிய கீதம் பாடவில்லை என்பதையே திரும்பத் திரும்ப குற்றச்சாட்டாக ஆளுநர் சொல்லி வருகிறார். இந்த நாட்டின்மீதும், நாட்டுப் பண் மீதும் அளவற்ற பெரும் மதிப்பை, மரியாதையைக் கொண்டுள்ளவர்கள் நாம். தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டுப் பற்றிலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள்!

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Updated at: January 24, 2026 at 10:49 AM

ஆளுநரின் பதவியை அவமானப்படுத்தும் ஆர்.என்.ரவி!

தமிழ்நாட்டின் நலனுக்காகச் செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழ்நாட்டுக்கு எதிராக, மக்களுக்காகச் செயல்படும் நமக்கு எதிராகச் செயல்படுவதுதான் வேதனையாக இருக்கிறது. தான் வகிக்கும் பதவியை தானே அவமானப்படுத்துவது போல இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே கேவலப்படுத்தும் செயலாக இருக்கிறது.

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Updated at: January 24, 2026 at 10:49 AM

இவை அனைத்தும் உண்மை, வெறும் புகழ்ச்சி அல்ல!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான். மக்களுக்காகத் திட்டங்களைத் தீட்டினான். மாநிலத்தை வளர்த்தெடுத்தான். இவை அனைத்தும் உண்மை, வெறும் புகழ்ச்சி அல்ல.

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Updated at: January 24, 2026 at 10:49 AM

எந்த சோதனைகளும் எனக்குப் புதிதல்ல!

அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவன் நான் தான். எந்த சோதனைகளும் எனக்குப் புதிதல்ல. என்னைச் சீண்டிப்பார்ப்பவர்கள் மனசுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என் மனதை எதுவும் செய்யாது!

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Updated at: January 24, 2026 at 10:49 AM

அண்ணனின் சீர் என்று பெருமையுடன் சொல்கிறார்கள்!

திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம் ஆகும். மாதம் தோறும் 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கிறார்கள்.

அதேபோல், 1 கோடியே 31 லட்சம் மகளிர் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இதுவரை ஒவ்வொரு மகளிரும் 29 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்கள். எங்க அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என்று மகளிர் பெருமையுடன் சொல்கிறார்கள்.

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

Updated at: January 24, 2026 at 10:49 AM
Updated at: January 24, 2026 at 10:10 AM

 “பிரதமரை வரவேற்கச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர், மக்கள்மேல் சிறிதேனும் அக்கறையோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்துவாரா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

Updated at: January 23, 2026 at 3:49 PM

முழு நீள கரும்பை நாங்கள் தான் வழங்கினோம்!

“அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு முழு நீள கரும்பை நான்கு துண்டுகளாக வெட்டி மக்களுக்கு வழங்கினீர்கள். ஆனால் முதலமைச்சரின் ஆட்சி காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழு நீள கரும்பை வழங்கினோம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.”

சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்.

Updated at: January 23, 2026 at 3:49 PM

இது இந்தியாவிற்கே பெருமையான தருணம்!

“தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட 69 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 48 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடாக மாறியுள்ளது. அந்த நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ளன. தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு தொழில் வளர்ச்சி தற்போது ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெருமை!”

- சட்டப்பேரவையில் அமைச்சர் டி.பி.ஆர்.ராஜா தகவல்.

Updated at: January 23, 2026 at 3:49 PM

கணினி வழங்கும் திட்டத்தை தாங்கள்தான் அறிமுகப்படுத்தியதாக அதிமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், கணினியைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு மாணவர்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான்!

- சட்டப்பேரவையில் அமைச்சர் டி.பி.ஆர்.ராஜா தகவல்.

Updated at: January 23, 2026 at 3:49 PM

நடப்பாண்டிலேயே 20 லட்சம் மடிக்கணினி!

தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு முதல்கட்டமாக தற்போது 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் மேலும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும். இந்த நிதியாண்டிலேயே மொத்தமாக 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்!

- சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

Updated at: January 23, 2026 at 3:49 PM

விலைவாசி உயர்வுக்கு ஜிஎஸ்டியே காரணம்!

விலைவாசி உயர்வுக்கு முதல் காரணம் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி சதவீதத்தை நிர்ணயிப்பது ஒன்றிய அரசுதான். 1967-ஆம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.100; இன்றைய விலை என்ன என்பதை எண்ணிப் பாருங்கள். எங்கள் ஆட்சி காலத்தில் தனிநபர் வருமானம் ரூ.3,15,000 வரை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி விதித்து பொருட்களின் விலை உயர்ந்தாலும், பணம் கொடுத்து வாங்கக்கூடிய அளவிற்கு மக்களின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. விலைவாசி தற்போது கட்டுக்குள் தான் உள்ளது!

- சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

Updated at: January 23, 2026 at 3:49 PM

கண்டன குரல் எழுப்பும் தமிழ்நாடு சட்டப்பேரவை!

ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது.

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மகாத்மா காந்தியின் பெயரை ஊரக வேலை திட்டத்தில் நீக்குவது கண்டிக்கத்தக்கது. மாநில அரசின் பங்கு 40% இருக்க வேண்டும் என்று கூறுவது, திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் செயலாகும்!

  • கொங்குநாடு மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஈஸ்வரன்.

VB-GRAMG திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிராக உள்ளது. இந்த திட்டம் ஒழிக்கப்பட வேண்டும்; திரும்பப் பெற வேண்டும்!

  • மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா.

கிராமப்புறங்களில் பொருளாதார வாழ்வாதாரத்தை உருவாக்கும் திட்டத்தை பாஜக அரசு அடித்து நொறுக்கியுள்ளது.

  • சி.பி.ஐ எம்.எல்.ஏ மாரிமுத்து.

தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடியின் காதுக்கு உரக்கச் சொல்கின்ற அளவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.

  • சி.பி.ஐ.(எம்) எம்.எல்.ஏ சின்னதுரை.

இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல; இது இந்தி திணிப்பின் மற்றொரு வடிவம். மாநிலத்தை நிதி நெருக்கடியில் சிக்க வைக்கும் சதியாகும்.

  • வி.சி.க எம்.எல்.ஏ பனையூர் பாபு.

காந்தி அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ள திட்டத்தை மாற்றி அமைப்பது, அனைவரின் மனதையும் புண்படுத்தும் நோக்கமாகும்.

  • பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி.

தமிழ்நாட்டு மக்கள் தன்மானம் மிக்கவர்கள். நிச்சயம் மோடி அரசின் மோசமான திட்டத்தை பின்வாங்க வைப்பார்கள்.

  • காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்லப் பெருந்தகை.

Updated at: January 23, 2026 at 12:34 PM

100 நாள் வேலை திட்டம் – தீர்மானம் நிறைவேற்றம்!

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன் படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டும்” என, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது!

Updated at: January 23, 2026 at 12:26 PM

மகாத்மா காந்தி பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்!

“மகாத்மா காந்தி அவர்கள் இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், அவர் வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்துகிறது.”

- சட்டப்பேரவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Updated at: January 23, 2026 at 12:26 PM

வேலைவாய்ப்பு உரிமை என்ற அடிப்படையே சிதைந்துள்ளது!

ஒன்றிய அரசு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை வேரறுக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி, அதற்குப் பதிலாக VB-G RAM G என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் மக்களின் தேவைகளுக்கு ஏற்றதாக இல்லை. VB-G RAM G திட்டத்தில் “வேலைவாய்ப்பு உரிமை” என்ற அடிப்படையே சிதைந்து போகும் சூழல் உருவாகியுள்ளது.

- சட்டப்பேரவையில் 100 நாள் வேலை திட்டம் குறித்த தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Updated at: January 23, 2026 at 12:26 PM

தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிப்பது ஏன்?

ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கும் நிதியை உடனடியாக விடுவிக்க மறுக்கிறது ஒன்றிய அரசு. வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் உயிர் நீர் திட்டத்திற்கு ரூ.3,112 கோடி நிதியை இதுவரை விடுவிக்கவில்லை. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் ரூ.516 கோடி நிதியையும் இன்னும் விடுவிக்கவில்லை. இதனால் எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டை இந்த அளவிற்கு ஒன்றிய பாஜக அரசு வஞ்சிப்பது ஏன்?

- சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Updated at: January 23, 2026 at 12:26 PM

ரூ.1,026 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை!

ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது. எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டத்திற்கும் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத் தொகை இன்று வரை விடுவிக்கப்படாமல் உள்ளது.

- சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Updated at: January 23, 2026 at 12:26 PM

பாகுபாடு இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றம்!

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் எந்த திட்டமாக இருந்தாலும், இது மாநில அரசின் திட்டம்; இது ஒன்றிய அரசின் திட்டம் எனப் பிரித்து பார்க்க முடியாத வகையில், பாகுபாடு இன்றி திறம்பட செயல்படுத்தி வருகிறோம். ஒன்றிய அரசின் பல முன்னோடி திட்டங்களில் இந்திய அளவில் தமிழ்நாட்டின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர்களே பாராட்டியுள்ளனர்.

- சட்டப்பேரவையில் 100 நாள் வேலை திட்டம் குறித்த தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Updated at: January 23, 2026 at 12:26 PM

மின்சார பேருந்துகள் லாபகரமாக இயங்கி வருகின்றன!


சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த மின்சார பேருந்துகள் சிறப்பாகவும் லாபகரமாகவும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை.

- சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தகவல்!

Updated at: January 23, 2026 at 10:42 AM

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிக்கொடுக்கப்படும்!

“மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஒன்றிய அரசின் அனுமதி கேட்டிருக்கிறோம். குறிப்பாக இதுவரை 100 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும்,
100 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், 100 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், 500 துணை சுகாதார நிலையங்களுக்கும்
அனுமதி தரவேண்டி ஒன்றிய அரசிடம் கடிதம் எழுதியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிக்கொடுக்கப்படும்!

  • சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

Updated at: January 23, 2026 at 10:42 AM

8 மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் கூடங்கள்!

திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் கூடங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், மண் அள்ளுவதற்காக முறையான மனு அளிக்கப்பட்டால், அதற்கான உரிய நடவடிக்கை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.

- சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

Updated at: January 23, 2026 at 10:42 AM

ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை!

“தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களை ஒன்றிய அரசு அடையாளம் கண்டு ஆய்வு செய்து வருகிறது. அந்தப் பட்டியலில் மேலூர்–கொட்டாம்பட்டி மதுரை–சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியும் இடம்பெற்றுள்ளது.

அந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என ஒன்றிய அரசிற்கு இதுவரை இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலூர்–கொட்டாம்பட்டி மதுரை–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.”

- சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு.

Updated at: January 23, 2026 at 10:42 AM

அதிமுக ஆட்சியில்தான் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்டது!

“அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்டதற்கு காரணம், அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுத்த முடிவே. ‘தமிழ்நாடு’ என்று பெயர் இடம்பெற்றால், அந்த பேருந்து எந்தக் கோட்டத்தைச் சேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியாமல் போகும் என்பதால்தான் அந்தப் பெயர் நீக்கப்பட்டது. இந்தியாவிலேயே சிறந்த போக்குவரத்துக் கழகம் தமிழ்நாட்டில்தான் செயல்பட்டு வருகிறது.”

– சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தகவல்.

Updated at: January 23, 2026 at 10:42 AM

தமிழக சட்டப்பேரையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 125 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த திட்டமே இல்லாமல் போய்விடும் போன்று ஆளுநர் உரையில் உள்ளது என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்த திட்டத்தை நிறுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுகிறது. அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்கள். 100 சதவீதம் அளித்த நிதியை 60 சதவீத தான் தருவோம் என்று மாற்றி உள்ளார்கள். காந்தி பெயரை மாற்றி உள்ளார்கள். 125 நாட்கள் கொடுப்போம் என்பது ஏமாற்று வேலை. வேலை நாட்களை ஒன்றிய அரசே நிர்ணயம் செய்யும் என்று கூறுகிறார்கள் என்றார்.

குறுக்கிட்ட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 100 நாளை 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்த திமுக, தற்போதுவரை அதனை நிறைவேற்றவில்லை. ஆனால் ஒன்றிய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளது. அதனை தான் நாங்கள் வரவேற்றுள்ளோம். பெயரை மாற்றக்கூடாது என நாங்களும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கள் ஆட்சிக்காலத்தில் தான் இத்திட்டமே தொடங்கப்பட்டது என்றும், இன்றைய பாஜக அரசு இந்த திட்டத்தை மாற்ற முயற்சிக்கிறது. காந்தி பெயரை மாற்றி ராம்ஜி என பெயர் வைத்தது ஏன் ? ஜி ஜி ராம்ஜிக்கு எல்லாம் இந்தியாவில் வேலை கிடையாது என்றார்.

பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்வது உண்மை. ஆனால் அதனை செய்ய வேண்டியது மத்திய அரசு தானே. மத்தியில் நாங்கள் தான் ஆட்சிக்கு வரவில்லையே எப்படி செய்ய முடியும் ? உங்கள் கூட்டணியில் இருக்கும் பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் குரல் கொடுக்கலாமே என்றார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பித்தானே வாக்களித்தார்கள். நிறைவேற்ற வேண்டியது உங்களின் கடமை. எந்த அடிப்படையில இந்த வாக்குறுதியை கொடுத்தீங்க. இது தந்திரமான அறிக்கை தானே, என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ பெரியசாமி, இந்த திட்டத்தை கொண்டு வரும் போது மத்திய அரசு இயற்றும் போது மத்திய அரசு தான் நூறு சதவிகிதம் மானியம் கொடுத்தது. ஆனால் தற்போது 60-40 ஆக்கிவிட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா ? என்ற கேள்வி எழுப்பினார்.

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தீர்கள்? ஏதாவது அழுத்தம் கொடுத்து ஒரு நாளாவது அவையை ஒத்திவைக்க முடிந்தததா ? நாங்கள் காவிரி பிரச்னைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க அழுத்தம் கொடுத்தோம், என்றார். அமைச்சர் ரகுபதி கூறுகையில், பாஜக அரசை காப்பாற்றுவதற்காக தான் அதிமுகவினர் அவையை நடைபெற முடியாமல் முடக்கியதாக தெரிவித்தார். இறுதியாக பேசியஅதிமுக உறுப்பினர் தங்கமணி, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்த பின்பு 150 நாட்களாக வேலைவாய்ப்பு உயர்த்தப்படும், என்றார்

Updated at: January 22, 2026 at 3:34 PM

பழனிசாமியால் முடியுமா?

தமிழ்நாட்டிற்கு நாளை பிரதமர் மோடி வர உள்ளார். அவருக்கு அருகில்தான் எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்திருப்பார். பழனிசாமியால் முடிந்தால், 100 நாள் வேலைத் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடியுமா?

– சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ. சுந்தர் கேள்வி.

Updated at: January 22, 2026 at 3:34 PM

மனநலம் குன்றியவர்களுக்கான தனி வாரியம்!

“தமிழ்நாடு அரசு சார்பில், குழந்தைகள் மையங்களை சீர்மிகு குழந்தைகள் மையங்களாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழ்நாட்டிலுள்ள 10,972 குழந்தைகள் மையங்கள் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கான தனி வாரியம் அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்.”

– சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தகவல்.

Updated at: January 22, 2026 at 3:34 PM

அதிமுகவுக்கு பாராட்ட மனமில்லையா?

அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளில் மோனோ ரயில் திட்டம், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள், இலவச செல்போன், வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம், பழைய ஓய்வூதியத் திட்டம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் திமுக ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் செய்து காட்டியுள்ளோம். திமுக ஆட்சியை மக்கள் பாராட்டி வருகின்றனர். அதிமுகவுக்குத்தான் பாராட்ட மனமில்லை.

– சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு பதிலடி.

Updated at: January 22, 2026 at 3:34 PM

பழைய கதைகளை அரைக்கிறது அதிமுக!

“ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளதாக ஒன்றிய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. இந்திய அளவில் எந்த மாநிலமும் கண்டிராத வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. முதலீட்டு நிறுவனங்களின் வசதிக்காக அவர்களின் தலைமையகங்கள் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் அமைந்திருக்கும். ஆனால் தொழிற்சாலைகள் மட்டுமே தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இதெல்லாம் தெரியாமல் அதிமுகவினர் பழைய கதைகளைத் தொடர்ந்து அரைத்துக் கொண்டே உள்ளனர்!”

– சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி.

Updated at: January 22, 2026 at 3:34 PM

இப்போதாவது குரல் கொடுங்கள்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாக நீங்கள் வாக்குறுதி அளித்தீர்களே?

– எடப்பாடி பழனிசாமி.

ஆமாம், நாங்கள் அதை மறுக்கவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால், அதனை நிச்சயமாக நிறைவேற்றியிருப்போம். தற்போது ஒன்றியத்தில் உங்கள் கூட்டணி கட்சிதானே ஆட்சியில் இருக்கிறது? இதற்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டியதுதானே? இப்போதாவது குரல் கொடுங்கள்!

– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Updated at: January 22, 2026 at 3:34 PM

அடுத்த ஆட்சியும் திராவிட மாடல் ஆட்சியே!

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் இன்னும் சில கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்த கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அடுத்த ஆட்சியும் திராவிட மாடல் ஆட்சியே.

– சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி.

Updated at: January 22, 2026 at 3:34 PM

அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை!

உரிமையோடு போராடிய அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகளை அமைச்சர்கள் நடத்தினர். அரசு ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து மிகுந்த அக்கறை இருப்பதுபோல் அதிமுகவினர் தற்போது பேசி வருகின்றனர். ஆனால், இந்த அக்கறையெல்லாம் அதிமுக ஆட்சிக் காலத்தில் இல்லாமல் போனது ஏன்? டெஸ்மா (TESMA) சட்டத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. போராடிய அரசு ஊழியர்களை இரவோடு இரவாக நாங்கள் கைது செய்யவில்லை. யாரையும் சிறையில் அடைக்கவில்லை.

அரசு ஊழியர்கள் எந்தந்த வகையில் சம்பளம் வாக்குகிறார்கள் என கொச்சையாக அப்பதைய முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அதையெல்லாம் நாட்டுமக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை பழனிசாமிக்கு நினைவூட்டுகிறேன்!

“23 ஆண்டுகால பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். வரலாற்றில் இல்லாத வகையில், அரசு ஊழியர் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறைக்கே வந்து இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். அரசு ஊழியர்களின் அந்த மகிழ்ச்சியான தருணங்கள் பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் எதையாவது சொல்லி குறைகூறி வருகிறார்.”

- அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணிக்கு முதலமைச்சர் பதிலடி!

Updated at: January 22, 2026 at 3:34 PM

சட்டமன்றத்தில் குழப்பத்தை உண்டாக்க அதிமுக முயற்சி!

சட்டப்பேரவையின் நடைமுறைகளை மாற்றி, அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். நேரத்தை வீணடிப்பதற்காகவே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி, அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய சபாநாயகர் தனபால், ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும் போது கவன ஈர்ப்பு மற்றும் ஒத்திவைப்பு தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

– சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு.

Updated at: January 22, 2026 at 3:34 PM

கிராமங்களின் பெயர்கள் தமிழிலேயே தொடர நடவடிக்கை!

“தமிழ்நாடெங்கும் கிராமங்களின் பெயர்கள் தமிழிலேயே தொடர நடவடிக்கை எடுக்கப்படும்!”

சட்டப்பேரவையில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ் மொழியில் இருந்த கிராமப் பெயர்கள் மாற்றப்பட்டு வருவதாக பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில்!

Updated at: January 22, 2026 at 3:34 PM

சட்டப்பேரவையின் நேரத்தை அதிமுகவினர் வீணடிக்க வேண்டாம்!

சட்டப்பேரவையில் அதிமுகவினர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நாளைய தினம் உரிய பதில் அளிக்கப்படும். சட்டப்பேரவையின் நேரத்தை அதிமுகவினர் வீணடிக்க வேண்டாம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Updated at: January 22, 2026 at 3:34 PM

திருப்பூர் மேம்பாட்டிற்கு தனிகவனம்!

திருப்பூரில் குப்பை கொட்டுவதற்காக அதிமுக ஆட்சியில் எந்த தொலைநோக்கு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் தான், நெருப்பெரிச்சல் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள குப்பைகளை பிரித்து திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரின் ஒவ்வொரு பிரச்சனையும் தனித்தனியாக கவனித்து தீர்வு காண திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாயப் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, ரயில்வே பிரச்சனை என அனைத்து முக்கியமான விஷயங்களுக்கும் தனிகவனம் செலுத்தி, நகரத்தை முற்றிலும் மேம்படுத்தி வருகின்றோம்.

- அதிமுக எம்.எல்.ஏ கே.என். விஜயகுமாருக்கு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில்!

Updated at: January 22, 2026 at 10:55 AM

குப்பையில் இருந்து மின்சாரம்!


சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூரிலும் இத்திட்டத்தை தொடங்க அரசு தயாராக உள்ளது. – சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு தகவல்!

Updated at: January 22, 2026 at 10:55 AM

22 லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளோம்!

“திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 22 லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சீறிய முயற்சியால் சென்னையையொட்டிய பகுதிகளில் உள்ள 8,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. விரைவில் விடுபட்ட மக்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்!”

– சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்!

Updated at: January 22, 2026 at 10:55 AM

குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை!

“தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திராவிட மாடல் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குற்றங்களை குறைத்து சிறைச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சிறைச்சாலைகளை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, குற்றம் இழைத்தவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை வழங்கி நல்வழிப்படுத்தும் முயற்சியை சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது. எனவே கலசப்பாக்கத்தில் உள்ள சிறைச்சாலை தற்போது அவசியமில்லை.”

– சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தகவல்!

Updated at: January 22, 2026 at 10:55 AM

கோவில்பட்டியில் ஆய்வு மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

Updated at: January 22, 2026 at 10:10 AM

ஊத்துக்கோட்டை பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்!

ஊத்துக்கோட்டை பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு

Updated at: January 22, 2026 at 9:46 AM

கும்மிடிப்பூண்டி தொகுதி ஊத்துக்கோட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. - அமைச்சர் கே.என்.நேரு

Updated at: January 22, 2026 at 9:46 AM

தமிழ்நாடு சட்டமன்றம் 3வது நாள் அமர்வு தொடக்கம்!


தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

Updated at: January 22, 2026 at 9:36 AM

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வில், ஆளுநர் ஆர்.என். ரவி, வழக்கமான மரபின்படி ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்குகிறது.

Also Read: 🔴#LIVE : சட்டப்பேரவை கூட்டத்தொடர் : “இனி ஆளுநர் உரை இருக்காது” - முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம்!

Updated at: January 22, 2026 at 9:46 AM