Tamilnadu
ரூ.118.42 கோடி மதிப்பீல் புதிய கட்டடங்கள் : 126 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.1.2026) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 16 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன உறை விந்து வங்கி, கால்நடை மருத்துவமனை, 4 கால்நடை மருந்தகங்கள், 2 கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையம், இணை இயக்குநர் அலுவலகம், 2 ஒருங்கிணைந்த பண்ணைகள் மற்றும் தெருநாய்களுக்கான சிறப்பு கால்நடை மருத்துவ வளாகம் ஆகிய 12 கட்டடங்களை திறந்து வைத்து, 118 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 31 ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் மற்றும் நவீன ஒருங்கிணைந்த இறைச்சி உற்பத்தி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 126 இளநிலை உதவியாளர் மற்றும் 96 தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரிப்பதற்காகவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளித்திடவும் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள், உறை விந்து வங்கி மற்றும் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி போன்ற பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி, கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கால்நடைகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் 6 கோடியே 6 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன உறை விந்து வங்கி கட்டடம் (Frozen Semen Lab);
தஞ்சாவூரில் 1 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம்; மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனைக் கட்டடம்;
நீலகிரி மாவட்டம், தலைகுந்தாவில் 67 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் அதிகரட்டியில் 67 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் 58 இலட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஓசனுத்தில் 48 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 4 கால்நடை மருந்தகக் கட்டடங்கள்;
தூத்துக்குடியில் 58 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் பெரம்பலூரில் 50 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 2 கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி (CBFD) நிலையங்கள்;
திருவள்ளூர் மாவட்டம், பண்டிக்காவனூரில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 2 ஒருங்கிணைந்த பண்ணைகள்;
இராணிப்பேட்டை மாவட்டம், கனியனூரில் 52 இலட்சம் ரூபாய் செலவில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய சிறப்புக் கால்நடை மருத்துவ வளாகம்;
என மொத்தம் 16 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்
மாநிலத்தின் 31 மாவட்டங்களில் 88 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 31 ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள்;
செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன ஒருங்கிணைந்த இறைச்சி உற்பத்தி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் வளாகம்;
என மொத்தம் 118 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 32 கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
பணி நியமன ஆணைகள் வழங்குதல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கால்நடை பராமரிப்புத் துறையில் 126 இளநிலை உதவியாளர் மற்றும் 96 தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Also Read
-
“ஆளுநர் உரைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் ஒரே தீர்வு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1,503.78 கோடி செலவில் மறுசீரமைக்கும் பணிகளுக்காக அனுமதி! : முழு விவரம் உள்ளே!
-
“அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்! எந்த கவலையும் பட வேண்டாம்!” : முதலமைச்சர் உறுதி!
-
வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு : 10 சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி உதவித் தொகை!
-
“விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!