Tamilnadu

“எங்களது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : புதிய வீடு பெற்ற பயனாளர்கள் நெகிழ்ச்சி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.01.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், ரூ.147 கோடி செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட“முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்து, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் குடியிருப்புக்கான ஆணை பெற்ற பயனாளர் சித்ரா, "இப்படி ஒரு வீடு என்பது எங்கள் பல வருட கனவு, போராட்டம். தற்போது எங்கள் கனவு நிறைவேறியுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள்.

இப்படி ஒரு அடுக்குமாடி வீட்டை, என் அப்பா, அம்மா வீட்டு வேலைக்குச் செல்லும்போதுதான் முதன்முதலில் பார்த்தேன். இப்போது அப்படி ஒரு வீடு எனக்குக் கிடைத்துள்ளது. இந்த அரசு எங்களுக்கு வீடு வழங்கி மகுடம் சூட்டி அழகு பார்க்கிறது" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அதேபோல் சாந்தி என்ற பயனாளர், "நமது முதலமைச்சரை நான் அண்ணன் என்றுதான் கூறுவேன். ஏனென்றால், ஒரு தங்கைக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் எங்களுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்துவருகிறார்.

சாலையில் ஆபத்தான முறையில் நாங்கள் வசித்துவந்தோம். இப்போது எங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது. ஓர் அண்ணனாக இருந்து எங்களுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று தொடங்கும் T20 போட்டி… எங்கு? எப்போது? - முழு விவரம் உள்ளே!