Tamilnadu
மீண்டும்... மீண்டும்... இந்தியில் பதில் கடிதம் : ஒன்றிய அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பதை தனது ஒரே குறிக்கோளாக வைத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்பப்படுவது தொடர் கதையாக இருக்கிறது.
இதற்கு, இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும் தொடர்ந்து அலுவல் கடிதங்களை இந்தி மொழியிலேயே ஒன்றிய பா.ஜ.க அரசு அனுப்பி வருகிறது.
இந்நிலையில், கடந்த 2025 டிசம்பர் 11 ஆம் தேதி மக்களவையில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நேரமில்லா நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு, 2026 ஜனவரி 8 ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அளித்த பதில் ஆங்கில மொழிபெயர்ப்பின்றி இந்தியில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு, தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தன்னைப் போன்றவர்களுக்கு, இத்தகைய பதில்கள் புரிதலில் சிக்கலை ஏற்படுத்துவதோடு, மொழி அடிப்படையிலான சமத்துவம் மற்றும் உள்ளடக்கத் தன்மைக்கு எதிரானதாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற மரபுப்படி, நேரமில்லா நேரக் கேள்விகள் உள்ளிட்ட அவை நடவடிக்கைகளுக்கான பதில்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என்பதே நடைமுறை எனவும், இது அரசியலமைப்பின் மொழிச் சமத்துவக் கோட்பாட்டுடன் ஒத்ததாகவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், ஏன் இந்தியில் மட்டும் பதில் அளிக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தையும், உடனடியாக ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய பதிலை வழங்குமாறும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மொழி அடிப்படையில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ள தமிழச்சி தங்கபாண்டியன், இந்த விவகாரத்தை ஒன்றிய அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா… உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் - பின்னணி?
-
பரந்த விரிந்த மனப்பான்மையாளர் : முதலமைச்சரின் செம்மொழி இலக்கிய விருது அறிவிப்பிற்கு கி.வீரமணி வரவேற்பு!
-
“திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லையா?” - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முதலமைச்சர்.. - விவரம் உள்ளே!
-
“எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம்... எத்தனை படையெடுப்புகள் வந்தாலும்...” - அமைச்சர் சேகர்பாபு தாக்கு!