Tamilnadu

“இதில் எனக்கு கூடுதல் பெருமை!” : சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்து துணை முதலமைச்சர் உரை!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (15.1.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் – ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்து, வாடிவாசலில் கோவில் காளைகளை கொடியைசைத்து வழியனுப்பினார்.

முன்னதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜமால் முகமது கல்லூரியில் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான பூப்பந்தாட்ட போட்டியைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.       

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை 

பெருமை வாய்ந்த இந்த சூரியூர் மண்ணில் நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கத்தில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை உங்களுடன் சேர்ந்து திறந்து வைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, பெருமை.

முதலில் வந்திருக்கக்கூடிய  உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே உங்கள் அமைச்சர் அவர்கள் தெரிவித்ததுபோல் பொங்கல் திருவிழாவை அனைவரும் குடும்பத்தோடும், உற்றார் - உறவினர்களோடும், நண்பர்களோடும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

அப்படி என்னுடைய குடும்பத்தினரோடு, உற்றார் உறவினர்களோடு கொண்டாடுவதற்காக உங்களைத் தேடி உங்களோடு கொண்டாடுவதற்காக இந்த பொங்கல் திருவிழாவிற்கு நான் வருகை தந்திருக்கின்றேன். அதுவும் நம்முடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்க்கான அரங்கத்தை, இந்த பொங்கல் நாளில் திறந்து வைத்து இருக்கிறோம். 

சூரியூர்னா ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மண் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தெரியும். திருச்சிக்கு எப்படி மலைக்கோட்டை ஓர் அடையாளமோ, திருச்சிக்கு எப்படி காவிரி ஆறு ஓர் அடையாளமோ, அதே மாதிரி, சூரியூர் ஜல்லிக்கட்டும் திருச்சிக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.

இந்த சிறப்பான ஜல்லிக்கட்டு அரங்கத்தைப் பார்க்கும்போது, சூரியூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் உங்களுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கின்றதோ, அதே அளவு பெருமை நானும் அடைகின்றேன். இந்த ஜல்லிக்கட்டு, முதலில், ஊர் தெருக்களில் நடைபெற்று வந்தது. அதற்கு பிறகு ஊர் மந்தையில் நடைபெற்றது. அதன்பிறகு ஊர் குளக்கரையில் வாடிவாசல் அமைத்து நடத்தப்பட்டது.

இப்படி படிப்படியாக வளர்ந்து, இந்த சூரியூர் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டு நம் ஆட்சியில் கட்டப்பட்டுள்ள இந்த நிரந்தர அரங்கத்த்தில் நடக்க இருக்கின்றது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இது உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை.

உங்கள் கோரிக்கையை உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் அவர்களிடம் நீங்கள் தெரிவித்தீர்கள். அவர் என்னிடத்திலும், முதலமைச்சர் அவர்களிடமும் தெரிவித்து, முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஒப்புக் கொண்டார். 

இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும், முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட்டு வருகின்றது. 

முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் பலவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது. பலவற்றை நானே திறந்து வைத்தேன். எல்லா அரங்கத்தையும் விட, முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்த, நான் திறந்து வைத்த எல்லா அரங்கங்களை விட இந்த அரங்கம் மிகவும் அழகாக, நம்முடைய தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில், பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

இதில் எனக்கு என்ன கூடுதல் பெருமை என்றால்,
என்னுடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்திருக்கின்றோம். 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான், இந்த ஜல்லிக்கட்டு மைதானப் பணிகளுக்கு நானே இங்கு வந்து அடிக்கல் நாட்டினேன். இந்த பணிகளை நான்தான் தொடங்கி வைத்தேன். பத்தே மாதங்களில் அனைத்து பணிகளும் நடந்து முடிந்து, இன்றைக்கு, இந்த மைதானம், போட்டிக்கு தயாராகியுள்ளது. 

எனவே, இந்த மைதானத்தை கிராம மக்கள் உங்களிடத்தில் நான் ஒப்படைக்கின்றேன். நம்முடைய அரசு எந்த அளவிற்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்தான் இந்த சூரியூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த சூரியூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களும் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இங்கு வந்திருக்கக் கூடிய கிராம மக்கள் உங்களுக்கே தெரியும். இங்கே பக்கத்தில்தான், நம்முடைய விளையாட்டு துறையின் சார்பில் 150 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான ஒலிம்பிக் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகின்றது.

கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த ரிங்ரோடு பணிகளை நாம் முடித்து காட்டியிருக்கின்றோம். அதேபோல, அமைச்சர் அண்ணன் நேரு அவர்கள் கட்டியிருக்கக் கூடிய பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பார்த்து தமிழ்நாடே புகழ்ந்து பேசிக்கொண்டுள்ளது.  

இப்படி அமைச்சர் அண்ணன் நேரு அவர்களும், அமைச்சர் அன்பில் மகேஸ்  அவர்களும் இன்றைக்கு திருச்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். இன்றைக்கு மதுரை அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 2-ஆவது ஜல்லிக்கட்டு மைதானம் என்ற பெருமையை இந்த சூரியூர் பெற்றிருக்கின்றது. 

இனிமேல், ஜல்லிக்கட்டு போட்டிக்காக நீங்கள் தனியாக கேலரி அமைக்க வேண்டாம். வாடிவாசல் அமைக்க வேண்டாம். பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகமாக செய்ய வேண்டாம். அனைத்தையும் அரசே இன்று செய்து உங்கள் கையில் ஒப்படைத்து உள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கான எல்லா அடிப்படை வசதிகளும் கொண்ட 
அரங்கமாக இந்த அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. பக்கத்தில் இருக்கின்ற புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சிவகங்கை, மதுரையில இருந்தும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் இங்கே வந்து போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

அதனால், திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, இந்த மண்டலத்துக்கே பயன்படக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே உங்களுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, நம்முடைய திராவிட மாடல் அரசு இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உங்களுக்கு தருவதற்கு தயாராக இருக்கின்றார். 

எனவே அடுத்த வருட ஜல்லிக்கட்டிலேயும் உங்களை எல்லாம் நேரில் சந்தித்து, உங்களோடு சேர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்கு நான் காத்துக் கொண்டுள்ளேன் என்பதை தெரிவித்து, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் மகேஸ் அவர்கள் பொங்கல் பரிசாக காளை மாடு ஒன்றை எனக்கு பரிசாக அளித்து இருக்கின்றார். அதற்கு நானே பெயர் வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார். 

அந்த மாட்டிற்கு உங்களுடைய ஞாபகமாக, சூரியூர் என்ற பெயரை வைத்து, இந்த மாட்டை வழங்கியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்து, இந்த சிறப்பான வாய்ப்பை அளித்த, அமைச்சர் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து, வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து, நன்றி கூறி விடைபெறுகின்றேன் நன்றி, வணக்கம். 

Also Read: “வாடிவாசலில் சீறி வரும் காளைகள்; வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி!