Tamilnadu

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர் : வீரபாண்டியன் கடும் கண்டனம்!

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படாதது கடும் கண்டனத்திற்குரியது. சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளித்து கடந்த 2022 ஏப்ரல் 25-ம் தேதி சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறை வேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்திட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. ஆளுநர் ஆர்.என்.ரவி அவற்றை கிடப்பில் போட்டார்.

ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. ஆளுநர்கள் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் போட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் தெரிவித்தது.

இதையடுத்து மசோதாக்களை, தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் மசோதாக்கள் மீண்டும் நிறை வேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை கடந்த 2023-ல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த சென்னை பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர், தற்போது தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படவில்லை என்பதே இதற்குக் காரணம். இது ஒன்றிய பாஜக அரசின் பாசிச இந்துத்துவா அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ஆளுநர்கள் மூலமாக பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில், அன்றாட செயல்பாடுகளில், பாடத்திட்டங்கள் வகுத்தலில், நேரடியாக ஒன்றிய அரசு தலையிடுகிறது.

அதைச் செய்வதற்கு, பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த ஆதரவாளர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறது. இது நாட்டின் மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

ஆளுநர்கள் மூலமும், அவர்களின் தலையீட்டால் நியமனம் செய்யப்படும் துணைவேந்தர்கள் மூலமும், பிற்போக்கான தேசியக் கல்விக் கொள்கை - 2020 யை நடைமுறைப்படுத்திட ஒன்றிய அரசு முயல்கிறது. அதை ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழ்நாட்டில் செய்துவருகிறார்.

கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க வேண்டும் என்ற தனது அரசியல் உள்நோக்கத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்பதற்காகவே, சென்னை பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒன்றிய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தரவில்லை. தற்பொழுது அந்த மசோதா திருப்பி அனுப்பப் பட்டுள்ளது.

கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இச்செயலுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: 2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!