Tamilnadu
“வணிகர்களின் தோழன் திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 28.12.2025 அன்று சென்னை, கலைவாணர் அரங்கில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இயங்கி வரும் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-
இன்றைக்கு திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் முப்பெரும் விழாவில், பங்கேற்று உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். மே 5-ஆம் தேதியை வணிகர் தினமாக அறிவித்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கப் பொன்விழா மற்றும் இந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா என, மூன்று விழாக்களையும் இணைத்து முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விழாவிற்கு நீங்களெல்லாம் எழுச்சியோடு வருகை தந்துள்ளீர்கள்.
இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள சங்கத்தின் தலைவர் அண்ணன் வி.பி.மணி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகள் மற்றும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டாவது முறையாக உங்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை, எனக்கு அளித்துள்ளீர்கள். இந்த விழாவில், எனக்கு முன்னால் பேசிய சிற்றரசு அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார், பொதுவாக சிறிய அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த முறை பிரம்மாண்டமாக, கலைவாணர் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் சங்கத்தின் தலைவர் வி.பி.மணி அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார். பொதுவாக ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டுத் தாமதமாகச் சென்றால், ஏன் தாமதமாக வந்தீர்கள்?’ என்று வருத்தப்படுவார்கள். ஆனால், அண்ணன் வி.பி.மணி அவர்கள், ஏன் சீக்கிரம் வந்துவிட்டீர்கள், கொஞ்சம் தாமதமாக வந்திருக்கலாமே’’ என்று இங்கு பேசும்போது குறிப்பிட்டார்.
எனக்கு முன்பு பேசியவர்கள், சிறப்பு விருந்தினராகத் துணை முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று என்னை அந்நியப்படுத்திப் பேசினார்கள். பொதுவாக, வெளியிலிருந்து வருபவர்கள்தான் விருந்தினர்கள். நான் வெளி ஆள் கிடையாது. எப்போதுமே உங்களுடன் இருக்கவேண்டும் என்று நினைப்பவன். அதனால்தான் என் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வது போல கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டேன். ஏனெனில், இங்கு இருக்கின்ற அத்தனை பேருமே நம்முடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்தவர்கள். உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக, உங்கள் வீட்டில் ஒருவனாக, சகோதர உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இங்கு வந்துள்ள பல பேரை எனக்கு நேரடியாகத் தெரியும்.
ஒரு சங்கத்தைத் தொடங்குவது எளிது, ஆனால், அதனைத் தொடர்ந்து நடத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. எனினும், இந்தத் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தை 50 ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டோடும் ஒற்றுமையோடும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறீர்கள். அதற்காக இந்த நேரத்தில், இந்தச் சங்கத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக வணிகர்கள் என்று சொன்னாலே, எல்லோருக்குமே ஒரு முன்னுதாரணம்தான். ஏனெனில், நீங்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். நீங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; உங்களுக்கு நீங்கள்தான் ராஜா. ஆனாலும், அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் அன்போடும் பண்போடும் பழகுபவர்கள் நீங்கள்தான். உங்களுடைய வேலை நேரத்தை நீங்களே தீர்மானிக்கிறீர்கள், மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது. இருந்தாலும் அஜாக்கிரதையாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில், உங்களுடைய கடையைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். அதனால்தான் வெற்றிகரமான சங்கமாக 50-வது ஆண்டைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.
வணிகர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதுடன், வாழ்க்கையில் பலருக்குத் தன்னம்பிக்கையையும் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இத்தகைய வணிகர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. திராவிட இயக்கத்தின் தந்தையாக விளங்கும் தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் ஒரு வணிகர் குடும்பத்தில் பிறந்தவர்தான். பேரறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க-வைத் தொடங்கிய பிறகு, இந்த இயக்கம் வளர்ந்ததே கடைகளில்தான்.
தேநீர்க் கடை, மிதிவண்டிக் கடை, சலூன் கடை எனப் பல்வேறு கடைகளில்தான் தி.மு.க வளர்ச்சி அடைந்தது. அக்காலத்தில் கடைகளில் அரசியல் பேசி வளர்ந்த இயக்கம் என்பதால்தான், தி.மு.க மீது வணிகர்களுக்கும், வணிகர்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எப்போதுமே தனிப்பாசம் உண்டு. இந்தப் பாசத்திற்கும் பந்தத்திற்கும் இந்த அரங்கமே ஒரு சிறந்த உதாரணம்.
குறிப்பாக, இந்தத் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அண்ணன் சேப்பாக்கம் வி.பி.மணி அவர்களையும் மற்ற நிர்வாகிகளையும் நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன். தொகுதியின் தேவைகள் மற்றும் வணிகர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் என்னிடம் சொல்வார்கள். வணிகர்களுடைய வளர்ச்சியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக இந்தத் தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட சங்கம்தான் இந்தத் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கம்.
இந்தச் சங்கம் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே, அரசாங்கத்திற்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறது. அதோடு சேர்த்து, சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் எனக்கும் தொகுதியில் உள்ள வணிகர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறது. மொத்தத்தில், திருவல்லிக்கேணியில் ஒரு மூன்றடுக்குப் பாலம் போல இந்த வியாபாரிகள் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தங்களுக்குப் பயன்படுவதோடு சமூகத்திற்கும் பயன்படுகின்ற தொழில்தான் இந்த வணிகத் தொழில். உள்ளூரில் தொடங்கி உலகம் முழுவதும் உற்பத்தியாகின்ற பொருட்களை எல்லாம் பொதுமக்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பவர்கள் வணிகர்களாகிய நீங்கள்தான். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்குவதும் நீங்கள்தான். அப்படிப்பட்ட உங்களுக்கு எல்லா வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட மாடல் அரசும் என்றைக்கும் துணை நிற்கும்.
ஆனால், இன்றைக்கு ஒன்றிய அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது? ஒன்றிய அரசு உங்கள் வாழ்க்கையைச் சிரமப்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி-யைக் (GST) கொண்டு வந்து வாட்டி வதைக்கிறது. ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசும், நம் முதலமைச்சர் அவர்களும் வணிகர்களின் நலனைப் பேணிக் காக்கின்ற அரசாக, பேணிக் காக்கின்ற முதலமைச்சராகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
முந்தைய பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் வணிகர்கள் எவ்வளவு சிரமப்பட்டீர்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், நம்முடைய அரசு அப்படி இல்லை. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எப்போதுமே வணிகர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கின்ற முதலமைச்சராக இருந்து வருகிறார். அண்ணன் விக்கிரமராஜா அவர்கள் முதலமைச்சர் அவர்கள் என்னென்ன செய்தாரோ அதையெல்லாம் உங்களுக்குச் சுட்டிக் காட்டினார்.
கடந்த மே மாதம் வண்டலூரில் ஏற்பாடு செய்திருந்த வணிகர்கள் மாநாட்டில், மே 5-ஆம் தேதியை வணிகர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். உடனடியாக நம்முடைய ுதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய வணிகர் நல வாரியத்தை முந்தைய ஆட்சியாளர்கள் முடக்கி வைத்திருந்தார்கள். அந்த நல வாரியத்தைச் சீரமைத்து, அதன் நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20-லிருந்து 30-ஆக உயர்த்தியவர் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
அதேபோல, வணிகர் நல வாரியத்தில் சேருவதற்கான உறுப்பினர் ஆயுள் சேர்க்கைக் கட்டணத்தை நீக்கி, பலரும் உறுப்பினராகச் சேர வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது நம்முடைய அரசு. மிக முக்கியமாக, வணிகர் நல வாரிய உறுப்பினர் குடும்ப நல நிதி உதவித்தொகை முன்பு ஒரு இலட்சம் ரூபாயாக இருந்தது. அதனை முதலில் மூன்று இலட்சமாகவும், மீண்டும் ஐந்து இலட்சமாகவும் உயர்த்தி, வணிகர்களுடைய குடும்பங்களைப் பாதுகாத்து வருபவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
வணிக உரிமங்களைப் புதுப்பிக்கும் முறைகளை, திராவிட மாடல் அரசு எளிமையாக்கி இருக்கிறது. வரி நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யச் சிறப்புச் சமாதானத் திட்டத்தை நம்முடைய அரசு அறிவித்தது. அதன்படி சுமார் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு வரி தள்ளுபடி செய்யப்பட்டு, வணிகர்கள் நலன் பாதுகாக்கப்பட்டது.
மாநகராட்சி மற்றும் நகராட்சி கடைகளின் குத்தகை காலம் 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. முக்கியமாக, 24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைக்கலாம் என்று நம் முதலமைச்சர் அவர்கள்தான் உத்தரவிட்டார்கள். இப்படி, வணிகர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்ற வகையில் பல அறிவிப்புகளையும் திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்துள்ளது.
இங்கு வந்துள்ள வணிகர்கள் எதையும் சரியாக எடை போட்டுப் பார்ப்பீர்கள். அதேமாதிரி, நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் சரியாக எடை போட்டுப் பாருங்கள். குறிப்பாக, வணிகத்தில் வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதிலும் நிலையான வெற்றி பெற வேண்டுமானால், அந்த நம்பிக்கையைத் தக்க வைக்க வேண்டும். அந்த வகையில், திருவல்லிக்கேணி வியாபாரிகள் அனைவரும் பொதுமக்களின் நம்பிக்கையை நீண்டகாலமாகப் பெற்றவர்கள். அப்படிப்பட்ட வியாபாரிகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றவராக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார். வியாபாரிகளின் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றக்கூடிய வகையில் திராவிட மாடல் அரசு என்றைக்கும் வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக இருக்கும்.
உங்களுடைய ஆதரவை எப்போதும் போலத் தொடர்ந்து நம் திராவிட மாடல் அரசுக்கும், நம் முதலமைச்சருக்கும் வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இங்கு விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் பணிகள் மென்மேலும் வளரட்டும், பெருகட்டும். பொன்விழா காணும் இந்தச் சங்கம், நூற்றாண்டு காண என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
Also Read
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?
-
பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
-
“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
பிராட்வேயில் ரூ.23 கோடியில் “முதல்வர் படைப்பகம் & நவீன நூலகம்”... அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்!
-
‘நான் இந்தியன்’ : சீனர் என நினைத்து திரிபுரா இளைஞர் அடித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்!