Tamilnadu

கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ள மெக்னடோ மாலில் (Magneto Mall), கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களை இந்துத்துவ கும்பல் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

மேலும், பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலம், நல்பாரியில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் நுழைந்து, கிறிஸ்துமஸ் விழாவிற்கு உபயோகித்த பொருட்களை பஜ்ரங் தள் குண்டர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கும் இந்துத்துவ கும்பலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ”பண்டிகைக் காலங்களில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வன்முறைச் செயல்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த மதச்சார்பின்மை, மத சுதந்திரம், சமத்துவம் ஆகிய அடிப்படை மதிப்புகளுக்கு நேரான சவாலாகும்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளவர்களை உடனடியாகக் கண்டறிந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத வெறுப்பையும் அச்சத்தையும் விதைக்கும் சக்திகளுக்கு எதிராக ஜனநாயகமும் மனிதநேயமும் கொண்ட அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நேரம் இது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ”சக மனிதர்களையும் நேசியுங்கள் என்று அன்பையும், காருண்யத்தையும் போதித்த மனிதகுல ரட்சகர் இயேசுநாதரின் பிறந்தநாள் விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும், சதீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறித்துவ தேவாலயங்களை தாங்கி, கிறித்தவ மக்களையும் தாக்கிய இந்துத்துவ வெறிக் கும்பலுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அந்த வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்