Tamilnadu

“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.12.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற, இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவில், ஆற்றிய உரை:-

இந்த நூற்றாண்டு விழா அழைப்பிதழை பார்த்தபோது, எனக்கு ஒரு புகைப்படம் நினைவிற்கு வந்தது. ஒரு பக்கம் தலைவர் கலைஞரும் – மற்றொரு பக்கம் இனமானப் பேராசிரியரும் இருக்கும் நடுவில் நின்று அவர்கள் இரண்டு பேரின் தோள்களிலும் உரிமையோபடு கை போட்டு கம்பீரமாக நிற்பார் நாகூர் ஹனிபா அவர்கள். இப்படி ஒரு படம் யாருக்கும் கிடைக்காது. அந்த இருபெரும் ஆளுமைகளின் தோளில் கைபோட்டு நிற்கும் துணிச்சலும், நட்புரிமையும் யாருக்கும் இருக்காது. அத்தகைய கம்பீரத்தின் அடையாளம்தான் நம் மரியாதைக்குரிய நாகூர் ஹனீபா அவர்கள். அவரின் நூற்றாண்டு விழாவைத்தான் கொண்டாடிகொண்டு இருக்கிறோம்.

உடலால் அவர் மறைந்தாலும், அவரின் குரல் நம்முடைய உள்ளத்திலும் உணர்விலும் ஒலித்துகொண்டேதான் இருக்கிறது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னதை, என்னுடைய அன்பிற்கிய லியோனி அவர்கள் நினைவுபடுத்தினார். “ஹனி என்றால் தேன். பா என்றால் பாட்டு. தேனாக இனிக்கும் பாட்டை பாடும் அவருக்கு ஹனிபா என்ற பெயர் பொருத்தமானது'' என்றார். அதேபோல, “ஹனிபாவுக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். அப்படி ஒரு குரல் வளம் ஹனிபா அவர்களுக்கு. இறுதிவரை அந்த குரல் அதே உறுதியோடு இருந்தது அவருக்கே உரிய சிறப்பு!

இசைமுரசு அவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை திராவிட இயக்கத்தில் பங்கெடுத்து, கலையை வளர்த்து, இயக்கத்தையும் கொள்கையையும் வளர்த்தார். தலைவர் கலைஞருக்கும், ஹனிபா அவர்களுக்கும் வயதில்தான் ஓராண்டு இடைவெளி; இது தவிர, அவர்கள் இரண்டு பேருக்கும் இடைவெளி என்பதே கிடையாது! அந்தளவிற்கு, நகமும் சதையுமாக நட்புடன் பழகியவர்கள் அவர்கள் இரண்டு பேரும்.

ஓடி வருகிறான் உதயசூரியன் என்று ஹனிபா அவர்களின் குரல் ஒலிக்காமல் - கழகத்தின் நிகழ்ச்சிகள் தொடங்கியது கிடையாது! தலைவர் கலைஞரின் வாழ்க்கையில், எத்தனையோ முக்கியமான தருணங்கள் இருந்தாலும், கல்லக்குடி போராட்டத்திற்கு என்று தனியிடம் இருக்கிறது! தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞரின் தீரத்தை, “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே! மக்கள் உள்ளம் குடி கொண்ட உண்மைத் தலைவர் வாழ்கவே” என்று பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சென்று சேர்த்தது, ஹனிபா அவர்களுடைய குரல்தான்!

ஒரு கலைஞன், ஒரு இயக்கத்தின் மேல் எவ்வளவு பற்றுடன் இருந்து, அந்த இயக்கத்திற்காக எந்தளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட்டார் என்பதற்கு, அய்யா ஹனிபா அவர்களுடைய வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு!

11 வயதில் பள்ளிக்கூடத்தில் பாட தொடங்கி, 15 வயதில் மேடைகளில் பாட ஆரம்பித்து, மக்கள் பாடகராக தன் வாழ்நாள் முழுவதும் வலம் வந்தவர் ஹனிபா அவர்கள்! அய்யா நாகூர் ஹனிபா அவர்களுடைய போராட்ட வாழ்வை இன்றைய இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சுருக்கமாக நான் சொல்ல விரும்புகிறேன்…

சிறிய வயதிலேயே நீதிக்கட்சி தொண்டராக இருந்த ஹனிபா அவர்கள், நீதிக்கட்சியின் கூட்டம் - மாநாடுகள் எங்கு நடந்தாலும் சென்று பாடுவார்! இந்த உணர்வுப் பயணம் - நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக பரிணமித்து, திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பிறகும் தொடர்ந்தது! கழகத்தின் வளர்ச்சிக்கு ஹனிபா அவர்களுடைய குரல் துணை நின்றது!

”அழைக்கின்றார் அண்ணா, அருமை மிகும் திராவிடத்தின் துயர் துடைக்க இன்றே” என்று ஹனிபா பாடுவதை கேட்டால் உணர்ச்சி பொங்காமல் ஒரு தமிழரால் இருக்க முடியாது. அவர், முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான மேடைகளை, கோடிக்கணக்கான மக்களை தன்னுடைய குரல் வளத்தால் தன்வசப்படுத்தியவர்! வறுமையின் காரணமாக, ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்ட அவர், தன்னுடைய கலைப்பயணத்தை - கழகப் பயணத்தை தொடர்ந்தார்!

அய்யா நாகூர் ஹனிபா அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்த ஊர், எந்த ஊர் தெரியுமா? திருவாரூர்! படிப்பை பாதியில் நிறுத்திய அவரை, அவரின் தாயார் திருவாரூருக்கு அனுப்பி வைத்தார்கள்! அப்போது, திருவாரூரில் நீதிக்கட்சி கூட்டங்கள் நடக்கும். அவற்றை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர்தான், பள்ளிக்கூட மாணவராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! அப்போதே, கூட்டம் தொடங்கி, தலைவர் பேச வரும் வரைக்கும் ஹனிபா அவர்கள் பாடுவார்! இந்த நிலையில், சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த பிறகு, 1940-இல், திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், அவரைப்பற்றி ஹனிபா அவர்கள் பாடினார். அப்போது, அந்த மாநாட்டில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், ஹனிபா அவர்களின் பாடலை கேட்டு நெஞ்சுருகி போய்விட்டார்.

1949-இல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது, அந்த தொடக்க விழாவில் பாடிய அவர், அதற்கு பிறகு, திராவிட முன்னேற்றக் கழக தொண்டராக, தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.

நாகூரில் தி.மு.க. கிளையை தோற்றுவித்ததும் அய்யா ஹனிபா அவர்கள்தான்! இப்படி, கழகத்தோடும், தலைவர் கலைஞரோடும் ஹனிபா அவர்களின் பற்றும் பாசமும் வளர்ந்துகொண்டே போனது!

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நாகூரில் ஹனிபா அவர்கள் கட்டிய இல்லத்திற்கு, “கலைஞர் இல்லம்” என்று பெயர் வைத்தார். அதை கலைஞர் தான் திறந்து வைத்தார். இப்படி கழக மேடைகளில் பாட்டு பாடியதால் மட்டுமா ஹனிபா அவர்களை கொண்டாடுகிறோம்? பாடுவது, அவரின் திறன்! கொண்ட கொள்கைக்காக சிறைக்கு போகவும் தயங்காதவர் தான் ஹனிபா அவர்களின் குணம்!

1939-இல் 13 வயது சிறுவனாக இந்தித் திணிப்புக்கு எதிராக, ராஜாஜிக்கு கறுப்புக் கொடி காண்பித்து முதல்முறையாக கைதானார். பிறகு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் கோ.சி.மணி, அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி ஆகியோருடன், திருச்சி சிறையில் 32 நாள் இருந்திருக்கிறார். 1952-இல் கலைஞருடன் ஹனிபா அவர்களும் கைது செய்யப்பட்டார். 1956-இல் காஞ்சிபுரத்தில் தெருவில் பாடிக்கொண்டு போகும்போதே கைதானார். இப்படி, கழகத்திற்காக போராட்டங்களில் பங்கெடுத்து, 10 முறைக்கு மேல் சிறைக்கு சென்றிருக்கிறார்!

அய்யா ஹனிபா அவர்களுடைய தமிழுணர்வு பற்றி தலைவர் கலைஞர் என்ன சொன்னார் என்றால், “தமிழுக்கு ஒரு தீங்கென்றால், அந்த தீங்கினை தடுத்து நிறுத்திட, தமிழர் நலம் காத்திட, தமிழ்மொழி காத்திட தோள்தட்டி தன்னை ஒப்படைத்துக் கொள்ளக்கூடிய தியாகச் சீலர்தான், நாகூர் ஹனிபா” என்று சொல்வார்!

1957 தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்த அய்யா ஹனிபா அவர்களை, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரான பிறகு, M.L.C.-யாக மேலவையில் அமர வைத்து அழகு பார்த்தார். கலைமாமணி விருது கொடுத்தார். வக்ஃபு வாரியத் தலைவராக நியமித்தார். 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் “கலைஞர் விருது” வழங்கினார்.

இப்படி, அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி - தந்தை பெரியார் - கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - இனமானப் பேராசிரியர் என்று அனைத்து தலைவர்களுடனும் பழகி - பயணித்து, தன் வாழ்நாளை, கொண்ட கொள்கைகளுக்காக ஒப்படைத்துகொண்ட ஒப்பற்ற ஒளிச்சுடர்தான் இசை முரசு அய்யா ஹனிபா அவர்கள்!

ஒருமுறை ஹனிபா அவர்கள் என்ன சொன்னார் என்றால், ”கழக நிகழ்ச்சிகளுக்கு, கலைஞர் என்னிடம் தேதிகூட கேட்காமல், என்னுடைய இசைக் கச்சேரியை வைத்துவிடுவார். ஏன் என்றால், நான் கச்சேரிக்காரன் கிடையாது; கட்சிக்காரன்” என்று சொன்னார்.

மற்றொரு பேட்டியில், “என்னுடைய இரத்தத்தை எடுத்து சோதித்தால்கூட அதில் வேறு கட்சியின் கலப்பு இருக்காது” என்று சொன்னார். அதனால்தான், அய்யா ஹனிபா அவர்கள் நிறைவுற்றபோது, மறைந்தபோது, தலைவர் கலைஞரும், நானும் ஓடோடி சென்றோம். அதைத்தொடர்ந்து, நாகூரில் நடைபெற்ற, அவரது படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்து புகழஞ்சலி செலுத்தினேன்.

அப்படிப்பட்ட எங்கள் இசைமுரசுக்கு நான் முன்னின்று நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதை என்னுடைய வாழ்நாள் பேறாக நான் நினைக்கிறேன். அய்யா நாகூர் ஹனிபா அவர்கள் கழகத்திற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சொத்து அவர்! எல்லோரும் சொன்னார்கள், அவர் பாடிய “இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” என்ற பாடல், தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோருடைய வீட்டிலும் ஒலிக்கும் பாடல்! அதுதான், அய்யா ஹனிபா அவர்களின், அவரது இசையின் வலிமை!

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பலரும் மதங்களைக் கடந்து, இசை முரசு அவர்களின் பாடலை பாடுவது, மிகவும் வைரலாக போனது! இந்த உணர்வுதான் தமிழ்நாடு! அதனால்தான், நம்முடைய இசைமுரசு அய்யா நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு தொடங்கியதும், நாகூரில் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா தெரு” என்று பெயர் சூட்டினோம்! சில்லடி கடற்கரைக்கு செல்லும் சாலையில் “இசை முரசு நாகூர்

E.M. ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா”வை சில தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்திருக்கிறார்!

‘தமிழரசு’ இதழின் சார்பில் ஹனீபா நூற்றாண்டு மலரை சிறப்பாக தயாரித்து வெளியிட்டிருக்கிறோம். அய்யா நாகூர் ஹனிபா போல் இன்னும் ஏராளமானவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை வலுப்படுத்த வர வேண்டும்! உங்களின் திறமையை - உங்களின் அறிவுக்கூர்மையை பயன்படுத்திக்கொள்ள, சமூகத்தை வளர்த்தெடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தயாராக இருக்கிறது!

திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மண்ணில் உள்ள வரை, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞரின் புகழ் தமிழர் நெஞ்சங்களில் உள்ள வரை - அய்யா நாகூர் ஹனிபா அவர்களும் நம்முடன் புகழுருவில் வாழ்வார்! கம்பீரக் குரலெடுத்து கானமழை பொழிந்து, தமிழர்களின் மனங்களில் நிறைந்த, அய்யா நாகூர் ஹனிபா அவர்களின் புகழ் வாழ்க! அய்யா நாகூர் ஹனிபா அவர்களின் புகழ் வாழ்க!

Also Read: “எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!