Tamilnadu

சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (23.12.2025) பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சென்னையின் கலாச்சாரச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம் 32.62 கோடி ரூபாய் செலவில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு திறந்து வைத்தார்.

சென்னையின் கலாச்சாரச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம்

விக்டோரியா பொது அரங்கம், சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தின் பேரரசி விக்டோரியாவின் பெயரிடப்பட்ட சிறப்பு வாய்ந்த கட்டடமாகும். மேலும், சென்னை மாநகரின் கட்டடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூறும் வகையிலும் அமைக்கப்பட்டது. ராபர்ட் சிசோல்ம் என்பவரால் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் 1887-ஆம் ஆண்டு இந்த அரங்கம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடம் கட்ட திருவிதாங்கூர் மன்னர், மைசூர் மன்னர், புதுக்கோட்டை மன்னர், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முத்துசாமி, பி.ஆர். அண்டு சன்ஸ் கடிகார நிறுவனம், இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி, எட்டையபுரம் சமீன்தார் உள்ளிட்ட பலர் நன்கொடை வழங்கியுள்ளனர்.

மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், கோபால கிருஷ்ண கோகலே, சுப்பிரமணிய பாரதியார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற தேசியத் தலைவர்கள் விக்டோரியா பொது அரங்கிற்கு வருகை தந்து கூட்டங்களை நடத்திய சிறப்பு பெற்றது. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற தமிழ் நாடக முன்னோடிகள் தங்களது நாடகங்களை இங்கு நடத்தியுள்ளனர்.

சென்னையில் முதன்முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது இங்குதான். மெட்ராஸ் போட்டாகிராபிக் ஸ்டோரின் உரிமையாளரான டி. ஸ்டீவன்சன் என்பவர் பத்து குறும்படங்களைக் கொண்டு சில காட்சிகளை இங்கு திரையிட்டார்.

தொன்மைமாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கம்

வரலாற்று சிறப்புமிக்க, தொன்மை வாய்ந்த விக்டோரியா பொது அரங்கினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்தார். அதனடிப்படையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 32.62 கோடி ரூபாய் செலவில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணி 20.03.2023 அன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இரண்டு தளம் கொண்ட விக்டோரியா பொது அரங்க கட்டடத்தின் நீளம் 48 மீட்டர், அகலம் 24 மீட்டர் ஆகும், பிரதானக் கூரையின் உயரம் 19 மீட்டர் மற்றும் மொத்த கோபுரத்தின் உயரம் 37 மீட்டர் ஆகும். மேலும், இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் அருங்காட்சியகமும், முதல் தளத்தில் கலாச்சார கலை நிகழ்ச்சி நடைபெறும் இடமாகவும் உள்ளது.

விக்டோரியா பொது அரங்கத்தின் சிறப்பம்சங்கள்

தற்பொழுது இந்த விக்டோரியா பொது அரங்கின் முழுக் கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், முழு கூரையினையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், வெளிப்புறம் மற்றும் உட்புறம் மரத்தளம் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், ஏற்கனவே உள்ள கட்டடத்தை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல், கலைநயத்துடன் கூடிய முகப்பு விளக்குகள் அமைக்கும் பணி, புல் தரைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள இவ்வரங்கம், தற்போது அருங்காட்சியகமும் கலை மேடையும் கொண்ட ஒரு பொது பண்பாட்டு தளமாக மாற்றப்பட்டுள்ளது. தொன்மைமாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

விக்டோரியா பொது அரங்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் - அரங்கம் கட்டுவதற்கு உதவிய ஆதரவாளர்கள், கட்டடக் கலைஞர், ஒப்பந்ததாரர், இங்கு உரையாற்றிய தலைவர்கள், நீதிக்கட்சியின் எழுச்சி, நாடகமும் சினிமாவும், விளையாட்டுகளின் வரலாறு ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்கிறது. வெளிப்புறப் பகுதியில் டிராம் வண்டி, தொல்லியல் காட்சிப் பகுதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்கிங்காம் கால்வாயில் படகு, பழைய ஸ்கூட்டர், ரிக்க்ஷா போன்ற நினைவூட்டும் செல்ஃபி பாயிண்ட்கள் மூலம் பழைய சென்னை நகரின் நினைவுகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன.

புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் காட்சி, அங்கு வைக்கப்பட்டுள்ள சினிமா புகைப்படக் காட்சி, பயாஸ்கோப் உள்ளிட்டவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். தொடர்ந்து, முதல்தள கூட்ட அரங்கில் நீதிக்கட்சி வரலாறு குறித்த கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விக்டோரியா பொது அரங்க இணையதளத்தை தொடங்கி வைத்து, விக்டோரியா பொது அரங்க இலச்சினையையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, விக்டோரியா பொது அரங்கத்தின் முன்புறப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பழைய காலத்து ட்ராம்வே மாதிரி வடிவம், பண்டைய கால படகு, கீழடி கண்காட்சி அரங்கு ஆகியவற்றை பார்வையிட்டார்.

Also Read: “எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!