Tamilnadu
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய பாஜக அரசின் ஆதரவோடு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பீகாரில் மேற்கொள்ளப்பட்ட SIR காரணமாக பல லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதோடு தற்போது பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் SIR பணியின் நம்பகத்தன்மை மீதான சந்தேகம் தற்போது நாடு முழுவதும் வலுத்துள்ள சூழலில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த 19-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் மட்டும் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 15.2 சதவீதம் பேர் அதாவது 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SIR பணி தொடக்கத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள், 90 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்தது. தற்போது அதே போல் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கைப்பாவையாக செய்லபடும் தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :-
தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே எச்சரித்தது போல சுமார் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் கைப்பாவை ஆகிவிட்டத் தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பதே வாக்குரிமையைப் பறிப்பதற்கான சதிதான் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தோம். அது இப்போது உண்மையாகி உள்ளது.
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமைப் பறிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை SIR நடத்தப்படும் 12 மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகம். இதிலிருந்தே சனாதனவாதிகள் தமிழ்நாட்டைக் குறிவைத்து களம் இறங்கியிருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் நீக்கம் செய்யப்பட்டுள்ள 97.37 இலட்சம் வாக்காளர்களில் இதில் இறந்து போனவர்கள், இரு முறை பதிவானவர்கள் என்பதைத் தவிர்த்து 66 லட்சம் பேர் அவரவர் முகவரியில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அவர்கள் தகுதியுள்ள வாக்காளர்களே ஆவர். அவர்களுடைய வாக்குகளைப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்வது சட்டத்துக்குப் புறம்பானதாகும். எனவே, இடமாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்ட முகவரியில் இல்லையென நீக்கம் செய்யப்பட்டுள்ள 66 இலட்சம் வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.
மோடி அரசாங்கம் 2021 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டன. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் அல்ல என்று அந்நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால் அந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே ஒட்டுமொத்த வாக்காளர்களுடைய அடையாள அட்டைகளும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டு விட்டன. எனவே, இப்போது முகவரி மாறிச் சென்றிருக்கிறவர்கள் என்று நீக்கம் செய்யப்பட்டுள்ள 66 இலட்சம் பேர்களின் வாக்காளர் அட்டைகளும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் அவர்களது ஆதார் அட்டைகளும் ரத்தாகும் ஆபத்து உள்ளது. இது வாக்குரிமையோடு சேர்த்துக் குடியுரிமையையும் ரத்து செய்வதாகும். இதைப்பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும்.
இறந்து போனவர்களெனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளவர்களில், பலர் உயிரோடிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுபோலவே ஒரு வாக்குச் சாவடியில் பதிவு செய்திருப்பவர்களைத் தேர்தல் அதிகாரிகள் நீக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. மாஞ்சோலையில் பதிவு செய்திருந்த 1857 வாக்குகள் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என்ற தவறான காரணம் கூறி அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்களாவர்.
தகுதி வாய்ந்த வாக்காளர்களை நீக்குவது, பாஜகவுக்கு சாதகமாகப் போலி வாக்காளர்களை சேர்ப்பது என்ற தந்திரத்தின் மூலம்தான் பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதே தந்திரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டிலும் ஆட்சியைப் பிடிக்கலாமென பாஜக நினைத்துக்கொண்டுள்ளது. இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இன்னபிற சனநாயக சக்திகளும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
Also Read
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
நெல்லையில் 33 திட்டப்பணிகள் திறப்பு; 45,447 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! : முழு விவரம் உள்ளே!
-
“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!