Tamilnadu
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து 01.12.2025 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (03.12.2025) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இவ்வாண்டு 16.10.2025 அன்று துவங்கி அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருவதுடன், அக்டோபர் மாதம் நிலவிய மோந்தா புயல் மற்றும் தற்போதைய டித்வா புயல் காரணமாக கனமழை மற்றும் அதி கனமழையாக இதுவரை 10 சதவீதம் கூடுதலாக மொத்தம் 401.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 68,226 எக்டர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
அதிக அளவில் அடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் தேங்குவதற்குக் காரணமாக உள்ள வாய்க்கால்களைக் கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று அடைப்பினை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், வேளாண்மை மற்றும் சகோதரத்துறைகளின் மாவட்ட அலுவலர் முதல் கள அலுவலர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பயிர்சேத நிலைகளுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரிய பயிர் மேலாண்மை ஆலோசனைகள் வழங்கவேண்டும் என்றும் உடனடியாக, வருவாய்த் துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்திற்கு மேல் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து டிசம்பர் மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் மாவட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட எடுக்கப்படவேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயிர் வாரியான தெளிவான அறிவுரைகளை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவதுடன் பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விவசாயிகளுக்கு தெரிவித்திட வேண்டும் என்றும், பூச்சி, நோய் தாக்குதலைத் தொடர்ந்து கண்காணித்து, பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இது போன்ற இயற்கை இடற்பாடுகள் நிகழும் நேரங்களில் விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் உறுதுணையாக இருந்து அவர்களுக்கு உதவிடவும் கேட்டுக்கொண்டார்.
விதைகள், உரங்கள், பயிர்ப்பாதுகாப்பு மருந்துகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும், குறிப்பாக, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதுமான அளவு யூரியா இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும், மறு பயிர் செய்வதற்குத் தேவையான விதைகள், பூச்சி, நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்றிட பயிர் பாதுகாப்பு மருந்துகளை இருப்பு வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அவர்கள் மாவட்ட அலுலவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதம் குறித்த ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள வேளாண் விஞ்ஞானிகள் துறை அலுவலர்களுடன் இணைந்து பயிர் வாரியான பொதுவான பயிர் மேலாண்மைக்கான தொழில்நுட்ப அறிவுரைகளை தத்தம் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், சமுதாய வானொலி (FM - ரெயின்போ வானொலி பண்பலை) மூலம் தொடர்ந்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அன்றாடம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்கிடவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண் அலுவர்களுக்குத் தெரிவித்து உரிய ஆலோசனைகளைப் பெற்று பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று விவசாயிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஏற்கனவே முதமைச்சர் அவர்கள் 01.12.2025 ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தியவாறு, அக்டோபர், 2025 மாதத்தில் பெய்த கனமழையால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணம் பெறுவதற்கான கருத்துருவை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு உரிய படிவத்தில் உடன் அரசுக்கு அனுப்பிட வேண்டும் என்று கள அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Also Read
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!
-
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் ஆ.மணி MP வலியுறுத்தல்!