Tamilnadu

சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பொதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (02-12-2025) காலை 0530 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, காலை 0830 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக - புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 25 கிலோ மீட்டராக இருந்தது.

இது தென்மேற்கு திசையில் மெதுவாக வடதமிழக – புதுவை களோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து, அதற்கடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும்.

02-12-2025: வடதமிழக கடலோரப்பகுதிகளில் அநேக இடங்களிலும், ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யக்கூடும்.

வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

03-12-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

04-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

05-12-2025 முதல் 08-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (02-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (03-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Also Read: ”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!