Tamilnadu

‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற்ற ‘தினத்தந்தி’ நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமார்! : முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2025) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமார் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமி அவர்களுக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களுக்கும்;

அதே ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பினமாக மகளிர் ஒருவருக்கும் 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து திருமதி.சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அவற்றின் தொடர்ச்சியாக, 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமார் அவர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

டி.இ.ஆர்.சுகுமார் அவர்கள் இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து நேர்முகமாகப் பேட்டிகண்டு சுவையான செய்திகளை மக்களுக்கு வழங்கியவர் ஆவார்.

தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும் அவர் எழுதி வரும் "தலையங்கம்", வாரம் ஒருமுறை "பேனா மன்னன்" என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்துவரும் பதில்களும் மக்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திரு.டி.இ.ஆர்.சுகுமார் அவர்கள், உலக அளவில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சிறப்பான நிகழ்வுகளின்போது, அந்தந்த நாடுகளுக்குச் சென்று, செய்திகளைத் திரட்டி, தினத்தந்தி வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள சிறப்பான இதழியல் துறை அனுபவங்களையும் கொண்டுள்ளார். அத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.

இதழியல் துறையில் 50 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நேர்மையுடனும் நெஞ்சுறுதியோடும் தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றிவரும் டி.இ.ஆர். சுகுமார் அவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் 2024-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பொற்கிழி ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.

Also Read: துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!