Tamilnadu
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (25-11-2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்களை மறுத்து விரிவான விளக்கத்தை அளித்தார்.
அது குறித்த செய்தி குறிப்பு:
தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்கென்றே அனுப்பப்பட்டவர் ஆளுநர் ரவி. கமலாலயத்துக்கு அனுப்பப்படவேண்டியவர் ராஜ் பவனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் நேற்று தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ரவி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கம் போல தன்னுடைய பாணியில் பேசியிருக்கின்றார். தமிழ் கலாச்சாரம், நம்முடைய பண்பாடு, மொழி இவற்றை பற்றி எல்லாம் பேசுகின்ற ஆளுநர் ரவி அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை நாம் பார்த்தாக வேண்டும்.
தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதையே தன்னுடைய தொழிலாக கொண்டிருக்கின்ற ஆளுநர் அவர்கள் அளித்த பேட்டியில் பாஜகவின் ஊதுகுழலாக முழங்கி இருக்கின்றார்.
திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என பேட்டியில் கூறியிருக்கிறார். திராவிடம் என்பது கற்பனை என்று சொன்னால் நம்முடைய தேசிய கீதத்தில் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது என்பது ஆளுநர் ரவிக்கு தெரியாதா? அல்லது வங்க மொழியிலே இருக்கிறது என்கின்ற காரணத்தால் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லையா?
அடுத்து அவர் சொல்லுகிற குற்றச்சாட்டு பீகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். இப்படித்தான் ஒரிசாவிலே தேர்தல் நடந்தது. ஒடிசாவில் தேர்தல் நடந்த நேரத்தில் அமித்ஷாவும் மோடியும் அங்கு பிரச்சாரம் செய்கின்ற பொழுது ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசாவின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று தமிழர்களை திருடர்களை போல ஒரு குற்றச்சாட்டு சுமத்தினார்கள்.
தமிழர்கள் என்ன திருடர்களா? குற்றவாளிகளா? தமிழ்நாடு என்ன குற்றவாளிகள் பிறப்பிடமா? தமிழ்நாட்டிலே ஒடிசாவினுடைய சாவி இருக்கிறது என்று சொன்னால் இங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதா? இப்படி மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை பற்றி பேசிவிட்டு பீகார் தேர்தலில் என்ன சொன்னார்கள்? தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பீகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுற வகையில் இருக்கிறது என்றெல்லாம் பொய்யான கட்டுக்கதைகளை அவர்கள் அவிழ்த்து விட்டார்கள்.”
வடமாநிலத்திலிருந்து அதிகாரிகள் குழு வந்து இங்கிருக்கும் பீகாரிகளிடம் ஆய்வு நடத்திய போது கூட,”பீகாரிகள் தாக்கப்படுவதாக வீடியோக்களில் வந்ததெல்லாம் வதந்தி, நாங்கள் இங்கே நன்றாக இருக்கிறோம். நாங்கள் நன்றாக நடத்தப்படுகிறோம், எங்களுக்கு நல்ல பொருளாதாரம் கிடைக்கிறது. அதன் மூலமாக எங்கள் குடும்பத்தையே நாங்கள் காப்பாற்றக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்கள்.
எனவே எங்கு போனாலும் தமிழனுக்கு எதிராக பேசுவதை இன்றைக்கு கொள்கையாக கொண்டிருக்கக்கூடியவர்கள்தான் நம்முடைய ஆளுநரும் ஒன்றிய பாஜாகவும். உடனே என்னுடைய தமிழ் பற்று தெரியாதா என்பார்கள். ஆனால் தமிழ் மொழிக்காக அவர்கள் ஒதுக்கியது 150 கோடி சமஸ்கிருதத்துக்காக அவர்கள் ஒதுக்கியது 2500 கோடி. இதுதான் தமிழ் பற்றா? இதை எல்லாம் இன்றைக்கு மக்கள் புரிந்து கொண்டாக வேண்டும் என்பதற்காகதான் நாங்கள் சொல்ல வந்திருக்கின்றோம்.
திராவிட மாடல் அரசு யாருக்கும் எதிரான அரசு கிடையாது. ஆளுநர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறேன் என்பதை மறந்துவிட்டார். தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைப் பேசும் சிறுபான்மை மக்கள் 2024-25 கல்வி ஆண்டிலும் தங்கள் தாய்மொழியிலேயே தேர்வுகளை எழுதலாம் என்ற அனுமதியை அரசு வழங்கியது. இந்த உத்தரவு பள்ளி கல்வித்துறையினுடைய செயலாளர் குமரகுருவால் பிறப்பிக்கப்படது. முன்னர், 2023 ஆம் ஆண்டு வரை இந்த அனுமதி இருந்தாலும், சிறுபான்மையினர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி வாங்கிய பின்னரே அது தொடர்ந்தது.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும்போது, பிரதமர், உள்துறை அமைச்சர் அல்லது ஆளுநர் ஏதாவது ஓர் அறிக்கை வெளியிட்டிருப்பார்களா? ஆளுநர், தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்று கூறி, இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்கள் ஒற்றுமையாக இருப்பது போலவும், தமிழ்நாடு மட்டும் துண்டிக்கப்பட்டுவிட்டது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை தன்னுடைய பேட்டியின் மூலமாக உருவாக்க முயற்சிக்கிறார்.
இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களோடும் நல்ல உறவோடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், பஞ்சாப் முதல்வர், மேற்குவங்க முதல்வர், கேரளா முதல்வர், தெலுங்கானா முதல்வர் போன்ற பல மாநில முதல்வர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்திய மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், ராணுவ அமைச்சர் போன்றவர்களையும் அழைத்து வந்து இங்கே நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவோடு இணைந்து இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
=> மேலும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்...
இந்திய - சீன போர் வந்தபோது, திராவிட நாடு கொள்கை முக்கியமல்ல, இந்தியாதான் முக்கியம் என்று கொள்கையை விட்டுக்கொடுத்து இந்திய நலனைப் பெரிதாக மதித்த ஒரே அரசியல் கட்சி திமுக தான். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் நாங்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு பெயர்மாற்ற தீர்மானத்தின் போது ஆற்றிய உரையை நினைவுகூர்ந்த அமைச்சர், 'தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால் நீங்கள் எதை இழக்கப் போகிறீர்கள்? வங்கத்துக்கோ குஜராத்துக்கோ யாருக்கும் இழப்பு கிடையாது. நாங்கள் எங்கள் தமிழ் மண்ணுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்துக் கொள்கிறோம்' என்று சொன்ன உரிமையை சட்டமாக நிறைவேற்றித் தந்தார்கள்.
ஆளுநரின் அதிகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், ஆட்சி அதிகார மையம் ஒன்றுதான் இருக்க வேண்டும் என்றும், அது மாநில சட்டமன்றம் தான் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆளுநர் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு நபர் என்றும், ராஜ் பவனுக்கு ஆட்சி அதிகாரம் கிடையாது என்றும் கூறினார். ஆளுநர் மாநில அரசின் அமைச்சரவை முடிவுகளை ஒன்று ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்; நிறுத்தி வைக்கின்ற உரிமை அவருக்கு கிடையாது, என்றார்.
துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்ட மசோதாவில் உச்ச நீதிமன்றம் கருத்து மட்டுமே சொல்லி இருக்கிறது, ஏப்ரல் எட்டாம் தேதி கொடுத்த தீர்ப்பிலே அவர்கள் எந்த தலையீடும் இடவில்லை. ஆளுநர் இனிவரும் காலங்களில் ஒப்புதல் அளிக்காமல் தாமதித்தால் சட்டத்தின் அவசியத்தைக் கருதி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடி, மசோதாவின் மீது ஒப்புதலைத் தர வேண்டும் என்று கேட்கின்ற உரிமை மாநில அரசுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. நீண்ட காலம் காலம் தாழ்த்தினால் நீதிமன்றத்தை நாடலாம் என்கின்ற கருத்து இருக்கிறதே தவிர, நிறுத்தி வைக்கலாம் என்கின்ற கருத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தி அரசியல் குறித்துப் பேசுகையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியை வைத்து மலிவான அரசியல் செய்ய வேண்டிய அவசியமே திமுகவுக்குக் கிடையாது. 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டின் கொள்கை இருமொழிக் கொள்கைதான்; இங்கே யாரும் இந்தி படிக்க விரும்பவில்லை; விரும்புகிறவர்கள் எங்கே வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம், தடை இல்லை.
ஆளுநர், தமிழ் மொழியைத் தவிர மற்ற மொழிகள் எல்லாம் இங்கு வெறுக்கப்படுகின்றன என்றும், மொழி சிறுபான்மையினர் வீடுகளில் பேசுவதற்கே பயப்படுகிறார்கள் என்றும் கூறிய கருத்தை அமைச்சர் முற்றிலுமாக மறுத்தார். தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் என்பது கிடையாது. அது ஆளுநரின் கற்பனை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அதிவேகமாக நடைபெறுவது குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், இந்த அவசர கதியிலான வேலைப்பளுவால் மன உளைச்சலுக்கு ஆளாகி பல்வேறு மாநிலங்களில் பல பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். 30 நாட்கள் போதாது, போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய வாக்குரிமையை இழக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.
நிரந்தர டிஜிபி நியமனம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், பொறுப்பு டிஜிபி என்பதை அறிமுகப்படுத்தியவர்களே அதிமுகவினர் தான் என்றும், திரு ராமானுஜம் மற்றும் திரு ராஜேந்திரன் போன்றோர் அதிமுக ஆட்சியில் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்ட உதாரணங்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். நிரந்தர டிஜிபி நியமனத்திற்கான பட்டியல் வரும்போது, வேண்டப்படாத பெயர்கள் அனுப்பப்படுகின்ற பொழுது, அதில் சில மாற்றங்களைச் செய்து தாருங்கள் என்று கேட்கின்ற உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. தேர்தல் ஆணையம் எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு ஆணையம், தேர்தல் காலத்திலே நிரந்தர டிஜிபி, தலைமைச் செயலாளர், அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோரை மாற்றுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்றும் அமைச்சர் விளக்கினார்.
தங்கள் மீது எத்தனை கல்லடி பட்டாலும், அந்தக் கல்லடிகளை எல்லாம் வெற்றிப்படிகளாக மாற்றக்கூடிய சக்தி திமுகழகத்துக்கு உண்டு என்றும் பதிலளித்தார்.
Also Read
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!