Tamilnadu
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
இன்று கோவையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதன் விவரம் :
புதுமையும், புத்தொழிலும் நிறைந்து, வாய்ப்புகளும், வளங்களும் கொண்ட ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டரான’ கோவை மண்ணில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன்.தொடக்கத்தில் பேசிய மரியாதைக்குரிய LMW செயல் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு அவர்கள், நான் அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வருவதால் பல திட்டங்கள் வந்திருக்கிறது என்று சொன்னார்.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து 15-க்கு முறைக்கு மேல் நான் இந்த கோவைக்கு மட்டும் வந்திருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நான் அதிகமாக விசிட் செய்த மாவட்டம் இந்த கோயம்புத்தூர் தான். அதுமட்டுமல்ல, அவர் பேசுகின்றபோது இன்னொரு செய்தியை சொன்னார் – என்னுடைய தொடர் ஆதரவால் இந்த பகுதி நன்கு வளர்ச்சி அடைகிறது என்று பேசினார். அவருக்கு மட்டுமல்ல, இங்கே இருக்கக்கூடிய உங்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது, எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
அதேபோல, கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போல, வருங்காலத்தில் உங்கள் ஆதரவை எங்களுக்கு தரவேண்டும் என்பதுதான் முக்கியம். உங்களுக்காக தொடர்ந்து நானும், திராவிட மாடல் அரசும் உழைப்போம் என்பதை உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன். அந்த அடிப்படையில், பல்வேறு திட்டங்களை முதலீடு செய்ய ஆர்வத்துடன் வந்திருக்கின்ற உங்கள் எல்லோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் நான் வருக! வருக! என வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். மீண்டும் முதலீடுகளை செய்பவர்களுக்கு என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘இந்தியாவின் எடிசன்’ ஜி.டி.நாயுடு - ‘அருட்செல்வர்’ பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற ஏராளமான திறமைசாலிகளை தந்து, புதுமையான முயற்சிகளுக்கும், கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற இந்த கோவை மண்ணில், தமிழ்நாட்டின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு துணையாக இருக்கப்போகின்ற உங்களை எல்லாம் ஒன்றிணைத்து, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கின்ற நம்முடைய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர், தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் அந்தத் துறையின் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
இங்கே வந்திருக்கின்ற முதலீட்டாளர்களான நீங்கள் மற்றுமொரு மாநிலத்திற்கு வரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி, ஏராளமான முதலீட்டாளர்களின் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்று, இந்தியாவிலேயே அதிகமாக 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கின்ற தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறீர்கள்!
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும், தமிழ்நாட்டு வளர்ச்சியும் பிரிக்க முடியாதது! ஏனென்றால், இந்த தமிழ்நாடு, அறிவுத் தரத்திலும், உழைப்பிலும், சாதனைகள் படைப்பதிலும் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது எங்களின் இலட்சியம்! அந்த இலட்சியத்தை அடையவேண்டும் என்ற வேட்கை எங்களுக்குள்ளே இருப்பதால்தான் தொலைநோக்குப் பார்வையுடன் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் 25 ஆண்டுகள் Advance-ஆக சிந்தித்து, திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!
1971-லேயே சிப்காட் ஆரம்பித்த காரணத்தால்தான், உலகமயமாக்கல் அறிமுகமான பிறகு வந்த வாய்ப்புகளை தமிழ்நாடு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது! கம்ப்யூட்டர்தான் இனி எதிர்காலம் என்று பாடத்திட்டத்தில் சேர்த்தோம்; இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 1997-ல் ஐ.டி. பாலிசி கொண்டு வந்தோம்! டைடல் பார்க் உருவாக்கினோம்! இப்படி என்னால் லிஸ்ட் போட்டு சொல்லிக் கொண்டே போக முடியும்! இப்படியெல்லாம், அட்வான்சாக செயல்பட்ட காரணத்தால்தான், ஆட்சி மாற்றத்தால், இடையிடையே சிறு தொய்வு ஏற்பட்டாலும், தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக தலைநிமிர்ந்து நிற்கிறது!
இந்த கோவை Capital City கிடையாது; டயர்-2 சிட்டிதான். ஆனால், நீங்கள் இங்கே வரும்போது பார்த்திருப்பீர்கள்… L&T - L.M.W. - C.R.I. பம்ப்ஸ் – காக்னிசன்ட் - பண்ணாரி அம்மன் குழுமம் - ரூட்ஸ் குழுமம் என்று ஏராளமான நிறுவனங்களும், 60-க்கும் மேற்பட்ட G.C.C. நிறுவனங்கள், ஆயிரத்து 702 புத்தொழில் நிறுவனங்கள், 22 இன்குபேட்டர்கள் என்று ஏராளமான நிறுவனங்களும் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இதே நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்க வேண்டும். தமிழ்நாடு வளர வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும்!
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான, சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதனால், தொழில்துறையைச் சேர்ந்த யாரை நான் சந்தித்தாலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வாருங்கள் என்று கோரிக்கை வைப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், சிறிய அளவிலும், பெரிய அளவிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, தமிழ்நாட்டில் இருக்கின்ற வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி, முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறோம்.
U.A.E. - சிங்கப்பூர் - ஜப்பான் - ஸ்பெயின் - அமெரிக்கா - ஜெர்மனி - இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் நானே நேரடியாக சென்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை எல்லாம் சந்தித்து, தமிழ்நாட்டில் Invest செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறேன்.
இப்படி நடத்தப்பட்ட 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக இதுவரைக்கும், ஆயிரத்து 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆட்சிக்காலத்தின் கடைசி நான்கு ஆண்டுகளைவிட இரண்டரை மடங்கு அதிகம்!
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, 11 இலட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 இலட்சம் பேருக்கும் மேல், வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்திருக்கிறோம்!
எத்தனையோ மாநிலங்கள் இருக்கிறது… எத்தனையோ அரசுகள் இருக்கிறது… அவர்களும் கூட, அவர்கள் மாநிலம் வளர வேண்டும் என்று முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகிறார்கள்… புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுகிறார்கள்… ஆனால், அதன் ‘கன்வெர்ஷன் ரேட்’ என்ன? எத்தனை ஒப்பந்தங்கள் தொழிற்சாலைகளாக மாறுகிறது? அதற்குள் நான் போக விரும்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், Conversion Rate 80 Percent! நம்முடைய திராவிட மாடல் அரசில் போடப்பட்டிருக்கின்ற ஆயிரத்து 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நிலம் வழங்குவது - வணிக உற்பத்தி - சோதனை உற்பத்தி - கட்டுமானம் தொடங்கப்பட்டது என்று 809 திட்டங்கள், பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது!
அதுமட்டுமல்ல, புது ஐடியாவோடு இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வந்தாலும், இந்த திராவிட மாடல் அரசு, அவர்களுக்கும் Support-ஆக இருக்கிறது! கடந்த மாதம் கூட இதே கோவைக்கு வந்து, உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தேன். அதில் பங்கேற்ற இளைஞர்கள், எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் சொல்லியிருந்தார்கள்.
45-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 30 ஆயிரம் பேருக்கு மேல், அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
அதுமட்டுமல்ல, சிறிய சிறிய நகரங்களுக்குக் கூட சென்று, StartUp TN மூலமாக இளைஞர்களை தொழில் தொடங்க ஊக்குவிக்கிறோம்! அதனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கின்ற StartUp நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரத்து 663... 2021 மே வரை, 2 ஆயிரத்து 146 நிறுவனங்கள்தான் இருந்தது. நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில், 12 ஆயிரத்து 663 என்ற வரலாற்று உயரத்தை தொட்டிருக்கிறோம்.
இத்தனை நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்குக் காரணம் என்ன? வெளிப்படைத் தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது! திறன் மிக்க, படித்த இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்! ‘பிசினஸ் ஃபிரண்ட்லி’ சூழல் இங்கே நிலவுகிறது! சட்டம் ஒழுங்கு இங்கு சரியாக இருக்கிறது!
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அரசியல் காரணங்களுக்காக தவறான டேட்டாவையும், தவறான நியூசையும் பரப்புகிறார்கள். ஆனால், உண்மையான டேட்டாவை சொல்கிறேன்… நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 62 ஆயிரத்து 413 நிறுவனங்கள் இருந்த தமிழ்நாட்டில், இப்போது, 79 ஆயிரத்து 185 நிறுவனங்கள் இருக்கிறது. அதாவது, 16 ஆயிரத்து 772 நிறுவனங்கள் அதிகரித்திருக்கிறது!
புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு P.F. கணக்கு தொடங்கி அதை பராமரிக்கின்றது ஒன்றிய அரசு! அதன்படி நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 29 இலட்சத்து 64 ஆயிரம் பணியாளர்கள் அதிகரித்திருப்பதாக டேட்டாவை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்! இதைவிட தொழில் வளர்ச்சியில், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு டேட்டா தேவையா?
அடுத்ததாக, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சில நிறுவனங்கள் வெளி மாநிலத்திற்குப் போவதாகவும் தொடர்ந்து செய்தியை உருவாக்குகிறார்கள். இந்த செய்திகளை உருவாக்குவது யார் என்று பார்த்தால், அவர்களுடைய நோக்கம் என்னவென்று புரியும். அதைவிட அவர்கள் ஏன் இந்த செய்திகளை பரப்புகிறார்கள் என்று யோசித்தபோதும் நமக்கு தெரிந்துவிடும். கடந்த நான்கரை ஆண்டு கால நம்முடைய ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகளை பார்த்து அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏன் வரவேற்புரை ஆற்றி பேசிய அமைச்சர் தம்பி டி.ஆர்.பி. ராஜா சொன்னாரே, இந்த மேற்கு மண்டலத்திற்கு மட்டும் எவ்வளவு முதலீடுகள் வந்திருக்கிறது என்று புள்ளிவிபரத்தோடு சொன்னார்.
இதனால் தான், அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் தெளிவாக சொல்கிறேன், தொழில் முதலீடுகளை கொண்டு வருவது என்பது சாதாரண விஷயமில்லை. பலத்த போட்டிகளிடையே இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்திய மாநிலங்களுக்கு மட்டுமல்ல, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுக்குக் கூட போட்டிப் போட்டு இந்த முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறோம். அதிலும், எந்த மாதிரியான முதலீடுகளை, எவ்வளவு சலுகைகளை கொடுத்து கொண்டு வருவது என்பதிலும் கவனம் செலுத்துகிறோம். எத்தனை கோடி முதலீடுகள் என்பதைவிட அது தமிழ்நாட்டிற்கு உகந்ததா? இங்கே இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடிகிறதா? என சிந்தித்துதான் கொண்டு வருகிறோம்.
அத்துடன், நம்முடைய நிதி நிலைமைக்கு ஏற்ப முறையான சலுகைகள் கொடுத்துத்தான் இந்த முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுகிறோம். முதலீட்டாளர்கள் கேட்கின்ற சலுகைகளையும், அந்த முதலீடுகளால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பலன்களையும் ஒப்பிட்டுத்தான் சரியான முடிவை எடுக்கிறோம். அதனால், தமிழ்நாடு இப்போது அடைந்திருக்கக்கூடிய வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! அப்படி, தூத்துக்குடி, ஓசூரைத் தொடர்ந்து இப்போது கோவையில் TN RISING மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்!
இந்த கோவையின் தொழில் சூழலை மேம்படுத்த செய்யப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சில பணிகளை மட்டும், இங்கே எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், வாரப்பட்டியில், ‘பாதுகாப்புத் துறை உபகரணங்கள் பூங்கா’ அமைத்திருக்கிறோம். ஏற்கனவே, 20 தொழிற்சாலைகள் - StartUp நிறுவனங்கள் - M.S.M.E.-க்களுக்கு 57 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவடைகின்ற நிலையில் இருக்கிறது.
சூலூரில், 200 ஏக்கர் பரப்பளவில், ‘வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் பூங்கா‘ அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஏரோ டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் - M.R.O. - ரோபோடிக்ஸ் - எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில், StartUp மற்றும் M.S.M.E. நிறுவனங்கள் பயனடைகின்ற வகையில், ‘டிட்கோ’ நிறுவனம் - Tata டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து, பொதுப் பொறியியல் வசதி மையத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது.
சூலூர் வட்டத்தில், கரவல்லி-மாதப்பூர், கனியூர் மற்றும் ராசிப்பாளையத்தில், ‘பன்முகப் போக்குவரத்து பூங்கா’வை அமைக்கப் போகிறோம்.
‘செமிகண்டக்டர் மிஷன் - 2030’ என்ற இலக்குப்படி, சூலூர் மற்றும் பல்லடத்தில், ‘செமிகண்டக்டர் பூங்கா’ அமைக்கப் போகிறோம்.
இத்துடன், ஆவாரம்பாளையத்தில் உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்திக்கான திறன்மிகு மையத்துக்கும், மூப்பேரிபாளையத்தில் வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்கான திறன்மிகு மையத்துக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
தொழிலும், கல்வித்துறையும் சேர்ந்து அறிவுப் பொருளாதாரம் உருவாக வேண்டும். அதற்காகத்தான், "தமிழ்நாடு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பூங்கா அறக்கட்டளை" என்கிற புதிய நிறுவனத்தை அமைத்திருக்கிறோம்.
புதுமைக்குப் பெயர்பெற்ற கோவை மண்டலத்தில், இந்த நிறுவனம்
2 கோடியே 58 இலட்சம் ரூபாய் மானியத்துடன் பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இந்தத் திட்டங்களுக்கான முதல் தவணையாக 78 இலட்சம் ரூபாயை ஆராய்ச்சியாளர்களிடம் இந்த நிகழ்ச்சியில் வழங்கி இருக்கிறோம்.
இதுபோன்று, உங்களுக்கு என்ன தேவை என்று பார்த்து, பார்த்து செய்து தந்த காரணத்தால் தான், சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட “Ease of doing Business” தரவரிசையில், நான்கு பிரிவுகளில், தமிழ்நாட்டிற்கு சாதனையாளர் என்ற அங்கீகாரத்தைக் வழங்கியிருக்கிறார்கள். எனவே, இன்றைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிறுவனங்கள், அடிக்கல் நாட்டி - திறப்பு விழாவுக்கு தயாராகிவிடலாம் என்று உறுதியாக சொல்ல முடியும்! மற்ற முதலீட்டாளர்கள் மாநாடுகளைவிட இந்த மாநாட்டிற்கு ஒரு தனி சிறப்பு இருக்கிறது. அது என்னவென்றால், மொத்த முதலீடுகளில், உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்களிப்பு என்பது இந்த மாநாட்டில் தான் மிக அதிகமாக இருக்கிறது. இந்த மேற்கு பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முனைவோர் நிறுவனத்திற்கும் இதைவிட வேறு சாட்சி வேண்டுமா!
இங்கே கூடியிருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதியாக சொல்கிறேன்… தமிழ்நாட்டில் முதலீடு செய்கின்ற உங்கள் திட்டங்களுக்கு, எந்தவித தாமதமும் ஏற்படாது; எந்தவித தலையீடுகளும் இருக்காது!
இங்கே அனைத்தும் வேகமாக, தெளிவாக, வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும்! இந்த அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் மக்களுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறோம்!
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு வேகமாக நடைபோடுகிறது! தமிழ்நாட்டு இளைஞர்களைப் பற்றி நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது இல்லை… கடுமையாக - நேர்மையாக உழைப்பவர்கள் – Innovative-ஆக சிந்திக்க கூடியவர்கள்!
அப்படிப்பட்ட எங்களுடைய இளைஞர்களை இன்னும் Up-skill செய்யத்தான், “நான் முதல்வன்” போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்குத் தேவையான மனிதவள ஆற்றல், இங்கே குறைவில்லாமல் கிடைக்கும்!
தமிழ்நாட்டில் முதலீடு செய்தீர்கள் என்றால், தமிழ்நாடு மட்டுமல்ல, உங்கள் பிசினசும் பல மடங்கு வளரும்! இந்த சந்திப்பு, நம்முடைய வளர்ச்சிக்கான ஒரு தொடக்கம் மட்டும்தான்! நீங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும்! நீங்கள் மட்டுமல்ல, உங்கள் நண்பர்களுக்கும் இங்கே இருக்கின்ற வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி, முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் எண்ணங்கள் செயலாகும் - உங்கள் வெற்றிகள் தொடங்கும் இன்று, 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட, 170 திட்டங்கள் - 43 ஆயிரத்து 844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக,
1 இலட்சத்து 709 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ள உங்கள் அனைவரையும், மீண்டும் “வருக! வருக! வருக! வருக!” என வரவேற்று நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்!
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!