Tamilnadu

மதுரையில் மதி கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (22.11.2025) மதுரை, தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும்  உணவுத் திருவிழாவினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக 1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி வைத்தார். அன்று அவர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுக்களை முதலமைச்சர் அவர்கள், துணை முதலமைச்சராக இருந்த போது வங்கிகளின் முக்கியமான மற்றும் மரியாதைக்குரிய வாடிக்கையாளர்களாக முன்னேற்றம் அடையும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களை அடுத்த நிலைக்கு உயர்த்தினார். 

மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வளப்படுத்தும் நோக்கத்துடன் துணை முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட, மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் மற்றும் விற்பனைக் கண்காட்சிகள் என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் வாயிலாக இன்று சுய உதவிக் குழுக்கள் பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.  

மதி கண்காட்சி 

மதுரை, தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி கண்காட்சியில் 200 அரங்குகளில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழு மகளிரின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்திட 171 அரங்குகளும், குஜராத், ஆந்திரா, மேற்கு வங்காளம், கேரளா, பாண்டிச்சேரி, ஒரிசா, தெலுங்கானா, அரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட 29 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், கோயம்புத்தூர் ஐம்பொன் நகைகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டு சேலைகள், திருவண்ணாமலை ஆரணி பட்டு, நாமக்கல் கொல்லிமலை மிளகு, நீலகிரி உல்லன் ஆடைகள், கடலூர் சுடுமண் பொம்மைகள், திருப்பூர் பருத்தி ஆயத்த ஆடைகள், கரூர் கைத்தறி துண்டுகள், திருநெல்வேலி பத்தமடை பாய்கள், திருப்பத்தூர் தோல் பைகள் உள்பட பல்வேறு மாவட்டங்களின் சிறப்பு வாய்ந்த நூல் வளையல்கள், மரச் சிற்பங்கள், எம்ப்ராய்டரி ஆடைகள், கைவினைப் பொருட்கள், கண்ணாடி ஓவியங்கள், கைத்தறிப் புடவைகள், உலர் மீன்கள், மரச்செக்கு எண்ணை, பருத்தி ஆடைகள், சங்குகள் மற்றும் சிப்பி நகைகள், ஆயத்த ஆடைகள், வெட்டிவேர் பொருட்கள், பிரம்பு பொருட்கள், மூலிகைப் பொருட்கள், சணல் பொருட்கள், பனை பொருட்கள், கலம்காரி பைகள், கண்ணாடி மாலைகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

குஜராத்தின் அகர் பத்திகள் மற்றும் வாசனை திரவியங்கள், ஆந்திராவின் அழகிய மரச் சிற்பங்கள்,  மேற்கு வங்காளத்தின் கையால் செய்யப்படும் ஆபரணங்கள், ஒரிசாவின் கைவினைப் பொருட்கள், தெலுங்கானாவின் கைத்தறி ஆடைகள், மகாராஷ்டிராவின் மூங்கில் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட  கலைநயம் மிகுந்த கைவினைப் பொருட்கள் விற்பனை செய்திட 29 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

உணவுத் திருவிழா 

மிகப்பெரிய உணவகங்களில் சமைக்கப்படும் எவ்வளவு உயர்ந்த உணவு என்றாலும், வீட்டில் பெண்களின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு ருசியிலும், தரத்திலும் ஈடுசெய்ய முடியாது. அத்தகைய பெண்கள் இணைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு வகைகளாக சாமை, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் உள்ளிட்ட நவதானியங்களை அன்றாட உணவில் பயன்படுத்தியதாலும், அதற்கேற்ப உடல் உழைப்பை மேற்கொண்டதினாலும் அவர்களுக்கு நோய் தாக்குதல் என்பது அரிதாகவே இருந்தது. 

நாம் ஆரோக்கியமான வாழ்வு வாழ சத்தான உணவுகளை  உட்கொள்ள  வேண்டும் என்ற கருத்தினை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் தரமான, சத்தான, பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் துணை முதலமைச்சர் அவர்களால், இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ள உணவுத் திருவிழாவில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சென்னை அத்தோ, வடை மசாலா போன்ற பர்மா வகை உணவுகள், கடலூர்  - மீன் கட்லெட், மீன் பொடிமாஸ், சுறா புட்டு, மீன் 65, திண்டுக்கல்  - மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, புட்டு அரிசி, கன்னியாகுமரி  - மீன் பிரியாணி, நீலகிரி   - தினை உருண்டை, சிவகங்கை  - செட்டிநாடு ஸ்நாக்ஸ், திருநெல்வேலி  - பணியாரம், கடலைக்கறி, தினை புட்டு, விருதுநகர்  - ரொட்டி ஆம்லெட், எண்ணெய் பரோட்டா, மதுரை -  பனைமில்க் ஷேக்ஸ், ஐஸ் கிரீம்கள், கறி தோசை, கோலா உருண்டை, நாமக்கல்  - பள்ளிபாளையம் சிக்கன், புதுக்கோட்டை  - கார பணியாரம், இனிப்பு பணியாரம், ராகி அடை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 23 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உடனடியாக உண்ணுவதற்கும் ஏற்ற (Ready to Eat) ஆயத்த உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் (FSSAI)  பெற்ற  குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையில் தயாரித்து,  தகுந்த முறையில் கட்டுமானம் (Packaging) செய்து விற்பனை செய்திட 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

உணவுத் திருவிழா நடைபெறும் நாட்களில் மாலை நேரங்களில் காய்கறிகள் மற்றும் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்தல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு, மின்னணு வணிகம், பேக்கிங் மற்றும் லேபிளிங்கின் முக்கியத்துவம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் உரிய சான்றுகள் பெறுவது குறித்த விபரங்கள்,  புதிய நிறுவனங்களை உருவாக்குதல், ஸ்டார்ட்அப் TN துவக்குதல், EDII ஆதரவுடன் நிறுவனங்களை உருவாக்குதல் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.  

மாலை நேரங்களில் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், மாடாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தெருக்கூத்து, பரதநாட்டியம், கருப்பசாமி ஆட்டம், கும்மிப்பாட்டு, குழு நடனம், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், கிராமியப் பாடல்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாதஸ்வரம், ராஜ மேளம், நையாண்டி மேளம் போன்ற இசை நிகழ்ச்சிகளும், பேச்சுப் போட்டி, நாடகம் போன்றவையும் நடைபெறுகின்றன. 

2025 நவம்பர் 22ஆம் தேதி முதல் 2025 டிசம்பர் 3ஆம் தேதி வரை மதுரை, தமுக்கம் மைதானத்தில் நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவிற்கு அனுமதி இலவசமாகும்.

Also Read: மெட்ரோ ரயில் : உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!