Tamilnadu

வெப்ப அலை... காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ள தனிகவனம்: இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு புதிய முயற்சி!

தமிழ்நாடு அரசு மற்றும் ஐக்கிய பேரரசு இணைந்து மாநிலத்திற்கான வெப்ப மீள்தன்மைத் திறன் மையத்தை தொடங்கியுள்ளனர். அதிகரித்து வரும் கடுமையானவெப்ப உயர்வைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் திறனை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) மற்றும் ஐக்கிய பேரரசு இடையே புரிந்துணர்வு கடிதம் (Letter of Intent) கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு கடிதத்தை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு,அவர்கள் மற்றும் ஐக்கிய பேரரசின் பாராளுமன்ற துணை செயலாளர் சீமா மல்ஹோத்ரா எம்பி ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

இந்த முயற்சிக்கு ஐக்கிய பேரரசின் மீள்தன்மை கொண்ட ஆசியாவிற்கான காலநிலை நடவடிக்கை (Climate Action for a Resilient Asia (CARA)) எனும்முன்னணி திட்டம் மூலம் ஆதரவு வழங்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் 2026 வரை இயங்கும் இத்திட்டமானது, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு (UNEP) மற்றும் உலக வளங்கள் நிறுவனம் (WRI) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

வெப்பத் தடுப்புத் திறன் மையத்தின் பங்கு இந்த மையம், தமிழ்நாட்டில் துறைவாரியாக உள்ள வெப்ப ஆபத்து மேலாண்மையை ஒருங்கிணைக்கும் முதன்மை நிறுவனமாக செயல்படும். மையம் மேற்கொள்ளும் முக்கிய செயல்பாடுகள்:

* அறிவியல் மற்றும் நிறுவன அடிப்படையிலான நிர்வாகச் சூழலை உருவாக்கல்

* சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, திட்டமிடல் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தல்

* ஆதாரங்கள், காலநிலைத் தரவுகள், கொள்கைக்கான கருவிகளை உருவாக்கல்

* நகர மற்றும் மாவட்ட அளவிலான வெப்பத்தைக் குறைக்கும் செயல் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கல்

* வளர்ச்சி வங்கிகள், நன்கொடை அமைப்புகள், சர்வதேச காலநிலை நிதி வட்டாரங்களிலிருந்து நிதி பெறக் கூடிய திட்டங்களை உருவாக்கல்

இந்தியாவில் முதல் முறையாகக் கடுமையான வெப்ப அலைகளை சமாளிக்கச் சிறப்பு வாய்ந்த நிறுவன அமைப்பை உருவாக்கும் முதல்மாநிலம் என்ற பெருமையைத் தமிழ்நாடு பெறுகிறது.

வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஐக்கிய பேரரசின் இந்தோ-பசிபிக் அமைச்சர் சீமா மல்ஹோத்ரா உரையில் குறிப்பிடுகையில்:-

“கடும் வெப்பம் நாம் எதிர்கொள்ளும் மிக அவசரமான காலநிலை சவால்களில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் இல்லையெனில், அதன் தாக்கங்கள் அதிகரித்து, மக்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். இந்த முன்னோடி முயற்சியில் தமிழ்நாட்டுடன் இணைந்து செயல்படுவதில் ஐக்கிய பேரரசு பெருமை கொள்கிறது.

இந்தியாவில் பசுமை காலநிலை நிதியத்தை தொடங்கிய முதல் மாநிலமாகவும், வெப்ப அலைகளை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவித்த முன்னோடியுமான தமிழ்நாட்டின் முயற்சிகள் கவனத்துக்குரியது. இன்று தொடங்கப்பட்ட இந்த வெப்ப மீள்தன்மைத் திறன் மையம், மாநிலத்தின் காலநிலைத் தலைமையின் முக்கிய மைல்கல்லாகும்” என்றார்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, அவர்கள் உரையாற்றுகையில்:-

“மாநிலத்தின் காலநிலைத் தயார்நிலைக்குத் துல்லியமான வெப்ப வரைபடங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்ட வெப்ப ஆபத்து மண்டலங்களும் அடிப்படையான கூறுகளாக இருக்க வேண்டும். தமிழ்நாடு, அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையில் அனைத்து நகரங்களிலும் வெப்ப அலைகள் ஆபத்து பகுதிகளை அடையாளம் காண முயலுகிறது. உயர்தர செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் தரை உணரிகள் மூலம், வெள்ளம் அல்லது காற்று மாசு வரைபடங்களைப் போலவே, வெப்பத்தையும் துல்லியமாக வரைபடம் செய்ய முடியும். இது நமது நகரங்களை மறுவடிவமைக்கவும், கட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை மேம்படுத்தவும், காற்றோட்ட வழிகளை வலுப்படுத்தவும், வெப்ப பாதுகாப்பு பகுதிகளை உருவாக்கவும் உதவும்” என்றார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் (UNEP) இந்தியத் தலைமை இயக்குநர் டாக்டர் பாலகிருஷ்ணா உரையில், “காலநிலை மாற்றத்தையும், குறிப்பாக கடும் வெப்பத்தையும் எதிர்கொள்வதில் தமிழ்நாட்டின் முன்னோடி தலைமைபங்கு பாராட்டத்தக்கது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் தலைமையின் கீழ், மாநிலத்துடன் இணைந்து காலநிலை தழுவல், தடுப்பு முயற்சிகள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் மேலாண்மை சவால்களில் பணிபுரிவதில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு (UNEP) மகிழ்ச்சி கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, நிலையான எதிர்காலத்தை நோக்கிய தனது காலநிலை உறுதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், 11 நவம்பர் 2025 அன்று பிரேசிலின் பெலெம் நகரில் COP30-ல் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் (UNEP) ‘Beat the Heat’ செயலாக்க இயக்கத்தில் இணைந்துள்ளது.

இந்த முயற்சியில் 185க்கும் கூடுதலான நகரங்கள் மற்றும் 83 நிறுவனங்கள் இணைந்துள்ளன. இந்தியாவின் 15 நகரங்கள் இதில் இணைந்துள்ளன; அவற்றில் 11 நகரங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை — அவை: ஆவடி, சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், தாம்பரம், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மற்றும்வேலூர். மேலும் இந்த முயற்சியில் இணைவதன் மூலம், நகரங்களுக்கு துல்லியமான உலகளாவிய வளங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.

இதன்மூலம் கடும் வெப்பத்துக்கான செயல்திட்டங்களை வடிவமைத்தல், இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை விரிவாக்குதல் மற்றும் வெப்பத் தணிப்புத் திறனை நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களில் ஒருங்கிணைத்தல் ஆகியவை சாத்தியமாகின்றன.

Cool Coalition என்பது அரசுகள், நகரங்கள், தொழில்நுட்ப மற்றும் நிதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடிமக்களை இணைக்கும் சர்வதேச பலதரப்பு கூட்டமைப்பாகும். இந்த வலையமைப்பு நிலையான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட வெப்பத் தணிப்புத் தீர்வுகளை விரைவாக உலகளவில் விரிவாக்க உதவுகிறது.

கடும் வெப்பத்திற்கெதிரான தீர்வுகள் மற்றும் நிலையான வெப்பத் தணிப்புத் திறன் முன்னெடுப்புகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பிற்கான சுவிஸ் நிறுவனத்தின் (Swiss Agency for Development and Cooperation) ஆதரவுடன் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் (UNEP) மூலம் செயல்படுத்தப்படும் BeCool திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 197 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிதாக கட்டப்படும் கட்டடங்களிலும் குறைந்தபட்ச பாசிவ் கூலிங் தரநிலைகளை அறிமுகப்படுத்தவுள்ள இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது.

மாவட்ட அளவிலான நிலையான வெப்பத் தணிப்புத் திட்டங்கள் நகர மற்றும் மாநில திட்டங்களில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. கடும் வெப்பத்தையும், நிலையான வெப்பத் தணிப்பு தீர்வுகளையும் சமாளிக்கும் தமிழ்நாட்டின் முன்னோடி நடவடிக்கைகளில் பள்ளிகள் மற்றும் குறைந்த செலவிலான வீட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உட்பட அனைத்தும், COP30 மாநாட்டில் வெளியிடப்பட்ட UNEP Global Cooling Watch 2025 அறிக்கையில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Also Read: மொட்ரோ ரயில் : உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!