Tamilnadu
“அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் பீகார். பா.ஜ.கவின் வெற்றிக்காகவே SIR கொண்டு வரப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இவர்களது குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையிலேயே பீகார் தேர்தல் முடிவு வந்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட, தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எப்படி என? எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்:
பெரும் வெற்றியைப் பெற்றுள்ள மூத்த தலைவர் திரு. நிதிஷ் குமார் அவர்களுக்கு எனது பாராட்டுகள். பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓயாமல் பரப்புரை மேற்கொண்ட இளந்தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.
நலத்திட்ட விநியோகம், சமூக & கொள்கைக் கூட்டணிகள், நாம் சொல்ல வேண்டிய அரசியல்ரீதியான செய்தியைத் தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி வாக்கு பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது எனப் பலவற்றையும் ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள் இத்தகைய செய்தியை உணரவும், இனி எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவுமான ஆற்றலைப் பெற்றவர்கள்.
அதேவேளையில், இத்தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளையும் பொறுப்பற்ற செயல்களையும் இல்லாமல் ஆக்கிவிடாது. தேர்தல் ஆணையத்தின் மீதான மரியாதை இதுவரை இல்லாத அளவுக்குக் கீழிறங்கியுள்ளது. வலுவான, நடுநிலையான தேர்தல் ஆணையத்தைக் கோருவது நம் நாட்டு மக்களின் உரிமை. தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்திட முன்வர வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிவகங்கை மாவட்டம் : 8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!
-
”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
CSK அணியின் அடுத்த கேப்டன் யார் ? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் !
-
”எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுப்போம்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !
-
நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் இதுதான் - முதலமைச்சர் கூறியது என்ன ?