Tamilnadu

UPSC முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு : தொடர்ந்து சாதிக்கும் ’நான் முதல்வன்’ திட்ட மாணவர்கள்!

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற UPSC முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 155 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 77.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று கடந்த 35.29% மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 54.84%ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், UPSC முதன்மை தேர்வு முடிவில் தமிழ்நாடு பிரகாசிக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு திட்டமான ’நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்ற 87 பேர் UPSC முதன்மை தேர்வில் வெற்றி வெற்றி பெற்றுள்ளது மிகுந்த பெருமையாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் இருந்து 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் நமது இலக்கை நோக்கிய பயணம் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: “பயிற்சிக்கும், முயற்சிக்கும் வயது வரம்பே கிடையாது.. அதற்கு உதாரணம்தான் கலைஞர்...” - துணை முதலமைச்சர்!