Tamilnadu
”அறிவுத்திருவிழா - இது கொள்கைக்கு கிடைத்த வெற்றி” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
அறிவுத்திருவிழா - இது கொள்கைக்கு கிடைத்த வெற்றி என திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கழக இளைஞர் அணியின் சார்பில் நடத்தப்படும் 'அறிவுத்திருவிழா'வில், 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூல் வெளியீட்டு விழாவையும் 'இருவண்ணக்கொடிக்கு வயது 75' கருத்தரங்கத்தையும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம்.
எழுத்தாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள். மூத்த ஊடகவியலாளர்கள் பலரும், தனிப்பட்ட முறையிலும் செய்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இளைஞர் அணியின் 'அறிவுத்திருவிழா'வைப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.
நம் கழகத் தலைவர் அவர்களது சீரிய தலைமையின் வழிகாட்டலில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைப் பாதையில்தான் நம் பயணம் தொடர்கிறது என்பதற்கான உரைகல்லே இந்த அறிவுத்திருவிழா.
தி.மு.கழகம், வெறுமனே தேர்தலை நோக்கி மட்டும் சிந்திக்கும் அரசியல் கட்சியல்ல. தந்தை பெரியாரின் கொள்கைகளைச் சட்டவடிவமாக்க, சமத்துவத்தையும் சமூகநீதியையும் நிலைநாட்ட, தேர்தல் ஜனநாயகத்தின்மூலம் மக்கள்பணி செய்யும் இயக்கம்.
அதனால்தான், தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணிகூட அமைக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளை இணைத்து, நம் கழகத் தலைவர் அவர்கள் உருவாக்கியிருக்கும் வலிமையான கூட்டணி, உறுதியுடன் தொடர்வதுடன், தேர்தல் பணிகளுக்கான குழுக்களை அமைத்து. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டங்களை நடத்தி, தலைமைக் கழகத்தைப் போலவே இளைஞர் அணிக்கும் வாக்குச்சாவடி வரை நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை ஆற்றுகிறோம்; அதே நேரம் கொள்கைப் பணிகளை முன்னெடுக்கும் அறிவுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக 'அறிவுத்திருவிழா'வையும் நடத்தியிருக்கிறோம்.
'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூல், நம் கழகத் தலைவர் வெளியிட்ட இரண்டே நாட்களில் 6,000 பிரதிகள் விற்றிருக்கின்றன. முன்வெளியீட்டுத் திட்டம் மகத்தான வெற்றியடைந்திருக்கிறது. மேலும், நம் அறிவுத்திருவிழாவின் ஒரு பகுதியான 'முற்போக்கு புத்தகக் காட்சி'யில் அமைந்திருக்கும் நம் 'முத்தமிழறிஞர் பதிப்பகம்' அரங்கத்திலும் 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பலரும் வாங்கிச்சென்றிருக்கின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இப்படியொரு புத்தகத்தை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டவுடன் கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டலின்படி, இதற்கென என் தலைமையில் திராவிட இயக்க ஆய்வாளர் திரு க.திருநாவுக்கரசு, மூத்த ஊடகவியலாளர்கள் ப.திருமாவேலன், ஆர்.விஜயசங்கர், கழகத் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது.
தி.மு.க.வின் பங்களிப்புகள் குறித்த கட்டுரைகளை அரசியல், சமூகம். பண்பாடு, பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பகுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நான்கு தளங்களிலும் கழகம் ஏற்படுத்திய தாக்கங்கள், செலுத்திய பங்களிப்புகள் குறித்த கட்டுரைகளின் உள்ளடக்கங்களை முடிவு செய்து, பொருத்தமான 80 கட்டுரையாளர்களிடம் கட்டுரைகளைக் கேட்டுப்பெற்றோம்.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கும் பயணம்செய்து, அன்னை சோனியா காந்தி, ராகுல் காந்தி, லாலு பிரசாத் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களான இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் கட்டுரைகளைப் பெற்றுத்தந்தனர். தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நம் இளைஞர் அணி மாநிலத் துணைச்செயலாளர்கள் கட்டுரைகளைப் பெற்றுத்தந்தனர்.
தொகுப்பாசிரியர்கள் அன்பகம் செந்தில், சுகுணா திவாகர், நீரை மகேந்திரன், பிரகாஷ், கௌதம்ராஜ், பன்னீர் பெருமாள் ஆகியோர் இந்த நூலாக்கப் பணியில் உதவிய ஊடகவியலாளர்கள் கவின்மலர், விஜய் ஆனந்த். ஆய்வு மாணவர் பாரத், விக்ளேஷ் ஆனந்த்,விக்னேஷ், பிரவீன், மிக அழகாக அட்டை வடிவமைப்பு செய்த ஆரிஃப் முகமது. பக்க வடிவமைப்புப் பாணிகளைச் செய்துகொடுத்த இராதமிழரசு, ராஜா, கோபி, மெய்ப்பு திருத்தம் செய்த ராஜமாணிக்கம், கட்டுரைகளுக்குத் தேவையான படங்களை 'தி இந்து' குழுமத்தில் இருந்து பெற உதவிய மூத்த பத்திரிகையாளர் என்.ராம், ஞானம், கலைஞர் கருவூலம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் மற்றும் அச்சுப் பணிகளை மேற்கொண்ட அரசு ஆர்ட்ஸ் என்று பலரின் உழைப்பினால்தான் இந்த 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' என்னும் அறிவார்ந்த ஆவணம் உருவாகியிருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த நூலில் எப்படி 75 ஆண்டுக்கால தி.மு.க.வின் பல்வேறு பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறோமோ அதேபோல் தி.மு.க.வின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் வகையில் இருவண்ணக்கொடிக்கு வயது 75' இருநாள் கருத்தரங்கத்திற்கான தலைப்புகளையும் திட்டமிட்டோம். இனம் பேச்சாளர்கள் முதல் அனுபவம் வாய்ந்த ஆளுமைகள் வார உரை நிகழ்த்தும் பன்முகத்தன்மையும் இந்தக் கருத்தரங்கத்தில் வெளிப்பட்டது.
ஒவ்வொரு தலைப்பின்கீழும் பேசிய அந்தனைபெரும் விரிவான வாசிப்பும் அனுபவமும் அவரவர் துறைகளில் மேதைமையும் கொண்டவர்கள். இந்த இருநாள் கருத்தரங்கத்தை முழுமையாகக் கேட்டாலே இன்றைய இளைஞர்கள் தி.மு.க என்னும் மகத்தான பேரியக்கத்தின் ஆற்றலை உணர முடியும். இருநாள் கருத்தரங்கத்தில் 10 அமர்வுகளில் பேசிய 44 பேச்சாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகத்தின் 75 ஆண்டுக்கால வரலாற்றை எடுத்துச்சொல்லும் 'காலத்தின் நிறம் கருப்பு -சிவப்பு நூலை' உருவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இளைஞர் அணிக்கு வழங்கி, நூலையும் வெளியிட்ட கழகத் தலைவர்- முதலமைச்சர் அவர்களுக்கும், நூலைப் பெற்றுக்கொண்டு தி.மு.75 வரலாற்றுக் கண்காட்சியைத் தொடங்கிவைத்த, கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கும், கட்டுரைகளை வழங்கியதுடன் நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள்அமைச்சர் பெருமக்கள்.
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சகோதரர் சிற்றரசு உள்ளிட்ட சென்னை மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றிகள்.
இந்த அறிவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஓவியக் கண்காட்சிக்கு ஓவியங்கள் வழங்கிய ரவி பேலட் அவர்களுக்கும், முற்போக்கு புத்தகக் காட்சிக்கான பந்தல், அரங்குகளை அழகான முறையில் அமைத்துக் கொடுத்த அண்ணன் பழவி, முற்போக்கு புத்தகக் காட்சியில் பங்கேற்று சிறப்பித்துக்கொண்டிருக்கும் பதிப்பாளர்கள், இந்த அறிவுத் திருவிழாவுக்கு ஒலி வசதிகள் செய்துகொடுத்த ஆனந்தா ஆடியோஸ், எல்.இ.டி ஒளித்திரை அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், இருநாள் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுப் பணிகளை ஒருங்கிணைத்த வேங்கடராஜ், ஞானசாஸ்தா, 'இருவண்ணக்கொடிக்கு வயது 75' இருநாள் கருத்தரங்கைத் தொகுத்து வழங்கிய சகோதரி சுமைய சுகோதரர் மகிழவன் 'தன்மானம் காக்கும் கழகம்' நாடகத்தை நடத்திய திணை நில வாசிகள் குழுவினார், வள்ளுவர் கோட்ட மேலாளர் மற்றும் பணியாளர்கள், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள். உள்ளிட்ட அனைவருக்கும் கழக இளைஞர் அணி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த 'அறிவுத்திருவிழா' வெற்றிகரமாக நடைபெறக் காரணமாக இருந்த இளைஞர் அணி மாநிலத் துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் அவர்களுக்கும். அவருக்கு உறுதுணையாக இருந்து உழைத்த மற்ற துணைச் செயலாளர்கள் இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக் , கே.இ.பிரகாஷ், உ.பிரபு, பி.எஸ்.சீனிவாசன்,ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் சகோதரர் வழக்கறிஞர் பிரகாஷ். இருநாள் கருத்தரங்கத்தில் ஒவ்வோர் அமர்வுக்கும் பொறுப்பேற்ற அறிவுத்திருவிழா பணிகளில் முழுமையாக ஈடுபட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இரண்டு நாள் கருத்தரங்கிற்காக வருகைதந்த கழகத்தில் இளம் பேச்சாளர்கள் அனைவருக்கும் 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' என்னும் மகத்தான நூலை உருவாக்கித் தந்ததுடன் 'அறிவுத்திருவிழா'வின் ஒவ்வொரு பணியிலும் முழுமையான ஈடுபாட்டையும் உழைப்பையும் வழங்கிய 'அன்பகம்' பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் புரட்டிப் பார்த்தவர்களும் சரி (1120 பக்கங்கள் கொண்ட புத்தகம் என்பதால், முழுமையாகப் படித்து முடிக்க சில வாரங்களாவது ஆகும்) 'இருவண்ணக்கொடிக்கு வயது 75' கருத்தரங்கத்தின் பேசப்பட்ட உரைகளைக் கேட்டவர்களும் சரி, 75 ஆண்டுக்கால தி.மு.க. இத்தனை தளங்களில் இத்தனை பங்களிப்புகளைச் செய்திருக்கிறதா? என்று வியந்துபோகின்றனர்.
மேலும், கருத்தரங்கத்தில் பேசிய அத்தனை பேச்சாளர்களும் 'தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இப்படி ஓர் அறிவுத்திருவிழாவை நடத்தும் துணிச்சல் தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு' என்று பாராட்டினர்.
இதை அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றதுடன் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுதான் நம் பணிகளுக்குக் கிடைத்திருக்கும் நற்சான்றிதழ் என்று நான் கருதுகிறேன். தி.மு.க. என்பது கொள்கையை அடித்தளமாகக் கொண்ட இயக்கம் என்பதை 'அறிவுத்திருவிழா" அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது.
'முற்போக்கு புத்தகக் காட்சியை நடத்துவது என்று திட்டமிட்டபோது. 'திராவிட இயக்க நூல்கள் மட்டுமல்லாது எல்லா முற்போக்குப் புத்தகங்களும் பதிப்பகங்களும் இடம்பெற வேண்டும்' என்று நம் கழகத் தலைவர் அவர்கள் அறிவுரைத்தார், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், சாக்ரமஸ், பெர்னாட்ஷா. வால்டேர், ரூசோ, ரஸ்ஸல், அம்பேத்கர், பகத் சிங் என்று உலகளவிலான அத்தனை முற்போக்குச் சிந்தனையாளர்களையும் தத்துவங்களையும் அறிமுகப்படுத்திய இயக்கம் அல்லவா நம் திராவிட இயக்கம். எனவே மார்க்சியம். பெரியாரியம். அம்பேத்கரியம், பெண்ணியம் என எல்லா முற்போக்குச் சிந்தனை கொண்ட புத்தகங்களும் இந்த 'முற்போக்கு புத்தகக் காட்சி'யில் இடம்பெற்றுள்ளன.
'ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல்' என்று கூக்குரலிடும் பாரி சக்தி களுக்கு எதிராகப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், 'நூறு பூக்கள் மலரட்டும்' என்று மா சே துங் சொன்னதைப் போல் இந்த 'முற்போக்கு புத்தகக் காட்சி"யில் திராவிட இயக்க நூல்கள் மட்டுமல்லாது பன்முக முற்போக்குப் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. பாசிசத்தை எதிர்ப்பதற்கான வழிகளில் இதுவும் ஒன்று
முற்போக்கு புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்கள். 'அரசியல் நூல்கள் மட்டுமே இடம்பெறும் இதுபோன்ற ஒரு முயற்சியை இதற்கு முன்பு சிலர் முயன்றும் அது வெற்றியடையவில்லை. ஆனால், இப்படி ஒரு மகத்தான முன்னெடுப்பைச் சாத்தியப்படுத்தும் ஆற்றல், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உண்டு' என்று நம்மை மனமாரப் பாராட்டுகின்றனர்.
நம் இளைஞர் அணிச் செயல்வீரர்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை வாங்கிப் படியுங்கள்: பரப்புங்கள்: நூல் அறிமுகக் கூட்டங்களைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வியாதியுங்கள்.
'முற்போக்கு புத்தகக் காட்சிக்குச் சென்று எல்லா முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட புத்தகங்களையும் வாங்கிப் படியுங்கள். நவம்பர் 16 வரை நடைபெலும் 'முற்போக்கு புத்தகக் காட்சியில் தினம்தோறும் கலைநிகழ்ச்சிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சும் இடம்பெறுகின்றன. பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கேட்பதற்குமான மகத்தான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
2026 தேர்தலில் மட்டுமல்ல, 2000 ஆண்டுகல ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டத்திலும் நாம்தான் வெல்வோம் என்பதை நிரூபிக்கட்டும் இந்த அறிவுத்திருவிழா.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொடர்ச்சியாக 5-வது முறை... நீலக்கொடி சான்றிதழைப் பெறும் கோவளம் கடற்கரை...
-
இதழியல், ஊடகவியல் துறையில் விருப்பமுள்ளவர்களுக்காக.. 9 நாட்கள் பயிற்சி.. முன்னணி ஊடகத்திலும் வேலை -விவரம்
-
“பயிற்சிக்கும், முயற்சிக்கும் வயது வரம்பே கிடையாது.. அதற்கு உதாரணம்தான் கலைஞர்...” - துணை முதலமைச்சர்!
-
வெற்றி நிச்சயம் திட்டம் : 170 இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை, பணி நியமன ஆணைகள்... வழங்கினார் துணை முதலமைச்சர்!
-
6 திருக்கோயில்களை சேர்ந்த 16 அர்ச்சகர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர் !