Tamilnadu

“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (23.10.2025) வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அடையாறு மண்டலம், வார்டு-174, பெசன்ட் நகர், ஊர்குப்பம் பகுதியில் உள்ள முகத்துவாரப் பகுதியில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாகவும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

அந்தவகையில் தான் பருவ மழை காலங்களில் மிகப் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளோ, நோய் பாதிப்புகளோ இல்லாத நிலை என்பது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் முக்கிய சேவை துறைகளுடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒரு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டு, 10க்கும் மேற்பட்ட துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட உயரலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கடந்த 3 நாட்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று கடந்த 4.5 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மழைநீர் வடிகால்வாய்கள், குறிப்பாக நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி என்று அனைத்து துறைகளின் சார்பிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தான ஆய்வினை நேரடியாக  சென்று கடந்த 3 நாட்களாக செய்து வருகிறார்கள்.

நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர் பெருமக்கள் என்று ஒரு கூட்டத்தை நடத்தி மழைக்காலத்தில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, சென்னையில் மிகப் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கும், பெரிய அளவிலான பாதிப்புகளிலிருந்து சென்னையை காப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக என்று சொல்லக்கூடிய பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, ரெட்ஹில்ஸ் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஏரி ஆகியவைகளாகும்.

சென்னையின் ஒட்டுமொத்த நீர் ஆதாரத்திற்கு 13,222 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைத்துக் கொள்ளவதற்கு இந்த 6 ஏரிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது  10,028 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இன்று அனைத்து நீர் நிலைகளும் நிறையும் தருவாயில் உள்ளது. குறிப்பாக சென்னை அடையார் செம்பரம்பாக்கம் ஏரி என்பது 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட  மிகப் பெரிய ஏரியாகும்.

அந்த ஏரியின் நீர்மட்ட உயரம் என்பது 24 அடி. தற்போது 21.27 அடி அளவில் நீர்மட்டம் இருப்பில் உள்ளது. ஒட்டுமொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு படிப்படியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நேற்று காலை 100 கன அடி அளவில் நீர் திறந்து விடப்பட்டது. மதியத்திற்கு பிறகு 500 கனஅடி நீராக திறந்து விடப்பட்டது. இன்று காலை 750 கன அடி அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5,300 கனஅடி நீர் கடலில் கலந்து வருகிறது. அடையாற்றைப் பொறுத்தவரை இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 25,000 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தாங்கும்.

இதற்கு மேல் அதிகமாக நீர் வந்தால் அடையாற்று ஓரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் பாதிப்பு ஏற்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடையார் ஆற்றங்கரையோரம் பகுதிகளில் நிலம் ஆர்ஜிதம் செய்து அகலப்படுத்தி, ஆழப்படுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அடையாற்றில் எங்கெயெல்லாம் குறுகலாக பகுதிகள் இருக்கின்றதோ அந்தப் பகுதிகள் எல்லாம் அகலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் அடையாற்றில் ஒரே நேரத்தில் 40,000 கன அடி அளவிற்கு உபரி நீர் வந்தால் கூட குடியிருப்புகளை பாதிக்காது என்கின்ற வகையில் இந்த அரசால் மாண்புமிகு முதல்வர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்று தற்போது அடையார் முகத்துவாரத்தை நேரிடையாக சென்று அலுவலர்களுடன் ஆய்வு செய்திருக்கிறோம்.

40,000 கன அடி உபரிநீர் வந்தாலும் கடலில் உட்புகுவதற்கு ஏற்ப ஏற்கெனவே 150 மீட்டர் அளவிற்கு மட்டுமே கடலில் நீர் கலக்கும் பகுதிகள் இருக்கின்றது. இன்னமும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 250 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்துவதற்கு 3 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த 3 இயந்திரங்களும் வடகிழக்கு பருவமழை முடிவடையும் வரையில் அகலப்படுத்திக் கொண்டே இருக்கும். 

தற்போது சென்னையில் பெய்திருக்கும் சராசரி மழையின் அளவு 16.93 செ.மீ. என்று பதிவாகி இருக்கின்றது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 22 சுரங்கப் பாதைகள் இருக்கின்றது. இதில் ஒன்று கூட மழைநீரால் சூழ்ந்து பாதிக்கப்படவில்லை. எந்தவித போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை. கடந்த ஆட்சிக் காலங்களில் 4 அல்லது 5 செ.மீ அளவிற்கு மழை பெய்தாலே நாள் கணக்கில் வாரக்கணக்கில் கூட தெருக்களில் மழை நீர் தேங்கி இருக்கும்.

தற்போது 16.93 செ.மீ அளவிற்கு மழை பெய்திருந்தும் கூட மக்களை பாதிக்கவில்லை. இன்று அடையார் முகத்துவாரம் பணி சீர் படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஏதோ இன்று ஒரு நாள் மட்டும் செய்யும் பணி கிடையாது, தொடர்ந்து 4.5 ஆண்டுகளாக ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாகவும் இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் சீனுவாசபுரம் பகுதியில் மணல் திட்டுக்கள் மூலம் மண் அரிப்பு இல்லாமல் தடுக்கப்பட்டு அப்பகுதி மக்களை பாதுகாக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அனைத்து துறைகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டு குடியிருப்புகளுக்கு நீர் புகாத நிலையில் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் போன்ற பேரிடர் காலங்களில் இந்த முகத்துவாரத்தில் உபரிநீர் உள்வாங்காமல் இருப்பது இயற்கை ஆகும். ஏனெனில்  கடல் கொந்தளிப்பின்போது ஆறுகளிலிருந்து உட்புகும் நிலையில் நீர் கடலில் உள்ளே போக முடியாது.

அந்த நேரத்தில் தடைபடும். அப்படி தடைபடும்போது அடையாற்றில் நீர் பெருக்கம் அதிகரித்து அடையாற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் நீர் புகும். தற்போது உபரிநீர் கடலில் எந்தவித பிரச்சினை இல்லாமல்  கலந்து கொண்டு வருகிறது. 

வெள்ளத்தடுப்புச்சுவர் அமைப்பது தொடர்பான கேள்விக்கு

1984-85 ஆம் ஆண்டுகளில் அடையாற்றோரம் வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு சைதாப்பேட்டை சாரதிநகர் என்கின்ற பகுதி வரை கட்டப்பட்டது. நேற்றுக் கூட சாரதிநகர் மணித் தெருவில் சுவர் இடிந்து விட்டது. பொதுப்பணித்துறை அலுவலர்கள் விரைந்து வந்து 1500 மணல் மூட்டைகள் வரை கொண்டு மேடு படுத்தி இருக்கிறார்கள். இன்னும் 1000 மூட்டைகள் அடுக்க போகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடி செலவில் மிகப்பெரிய திட்டத்தை கொடுத்து தற்போது டெண்டர் விடும் பணிகள் எல்லாம் விட்டு தயார் செய்து இருக்கிறார்கள்.

அடையாற்றிலிருந்து சைதாப்பேட்டை வரை அடையாற்றின் இரு வழிகளிலும் கரைகள் எழுப்பி பலப்படுத்தி சுற்றுலா மையமாக மாற்ற உள்ளார்கள். இதில் ஒரு சில குடியிருப்புகள் இடமாற்றம் செய்யப்படவிருக்கிறது. திடீர் நகர், ஜோதியம்மாள் நகர் போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவதற்கும் டெண்டர் விடப்பட்டு 1701 குடியிருப்புகள் நாகிநகர் ரெட்டி தோட்டம் பகுதியில் கட்டுவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

மலர் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கின்ற மல்லிகை பூ நகர் பகுதி மக்கள் பாதிக்காத வகையில் அருகில் Administraive Block கட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் அதனை அருகில் கட்டிக் கொள்வதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடையாற்றங்கரையோரம் உள்ள பொதுமக்கள் எந்தவித பாதிப்புகளுக்கும் உள்ளாக கூடாது என்கின்ற வகையில் திட்டம் வகுத்திருக்கிறார்கள்.

மிக விரைவில் அந்தப் பணிகள் நடைபெற தொடங்கினால் 1.5 ஆண்டுகளுக்குள் அடையாற்றிலிருந்து சைதாப்பேட்டை வரை வரை உள்ள பகுதிகள் அழகுப்படுத்தப்படும். பலப்படுத்தப்படும், சுற்றுலா மையமாகவே மாறி மக்களுக்கு பாதுகாப்பான அமைப்பாக உருவாகும்.

Also Read: வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!