Tamilnadu
பட்டா என்பது மக்களின் உரிமை- திராவிட மாடல் ஆட்சியில் 19 லட்சம் பயனாளிகள் பயன் : துணை முதலமைச்சர் உதயநிதி!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.10.2025) சென்னை காரம்பாக்கம் நவரத்தன்மல் ஜெயின் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-
இன்றைக்கு இந்த மதுரவாயில் பகுதிக்கு வருகை தந்து 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற இந்த விழாவில் உங்களையெல்லாம் சந்தித்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்,பெருமையடைகின்றேன்.
உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இது மூன்றும் தான் ஒவ்வொரு மனிதனுக்கு அடிப்படை தேவைகள். இதில் உடை, உணவு பெரும்பாலும் எல்லோருக்கும் கிடைத்திருக்கும் என்றே சொல்லலாம். ஆனால், குடியிருக்கின்ற இடம் பட்டாவுடன் வேண்டும் என்பது தான் இன்றைக்கு இருக்கும் மக்களுடைய மிகப்பெரிய பிரச்சனை, மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக வீட்டுக்கு பட்டா இல்லை என்றால், அதனால் ஏற்படுகின்ற வேதனையை பட்டியலிட முடியாது. மின் இணைப்பு வாங்க முடியாது. தண்ணீர் இணைப்பு அவ்வளவு ஈசியாக கிடைத்து விடாது. வங்கி கடன் கிடைப்பது கஷ்டம். எப்போது யார் வந்து இடத்தை காலி செய்ய சொல்வார்கள் என்ற பதட்டம் கூடுதலாக இருக்கும். இன்றைக்கு உங்களுடைய கஷ்டங்களையெல்லாம், உங்களுடைய பதட்டங்களையெல்லாம் போக்கி பட்டா கொடுப்பதற்காக நாங்கள் அத்தனைபேரும் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கின்றோம்.
இன்றைக்கு பட்டா கிடைப்பதினால், இன்று இரவு உங்களுடைய வீடுகளில் நிம்மதியாக, உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு நீங்கள் தூங்கப் போகலாம், பட்டா என்பது உங்களுடைய நெடுநாள் கோரிக்கை மட்டுமல்ல, அது உங்களுடைய உரிமை. இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுடைய அந்த உரிமையை நிலைநாட்டி இருக்கின்றது.
இந்த மதுரவாயலைப் பொறுத்தவரை, இது மிக வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு பகுதி, இந்த பகுதி எந்த அளவிற்கு வளருகின்றதோ, அதற்கு இணையாக உங்களுடைய வாழ்கை தரமும் உயர வேண்டும் என்பது தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய ஒரே இலட்சியம். மதுரவாயல் மட்டுமல்ல, சென்னை மற்றும் அதனைச் சுற்றி இருக்கக்கூடிய, அந்த பெல்ட் ஏரியாக்களில் குடியிருக்கக்கூடிய மக்களுக்கு உடனடியாக பட்டா கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டார்கள்.
சென்ற ஆண்டு நம்முடைய வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுடைய தலைமையில் ஒரு குழு இதற்காக அமைக்கப்பட்டது. நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அந்த குழுவினருடன் பல முறை ஆய்வுக்கூட்டங்களை நடத்தினார்கள். அந்த குழுவினுடைய பரிந்துரையின்படி நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கி இருக்கின்றோம் என்பதை இங்கே நான் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
சென்னை மட்டுமல்ல, பிற மாவட்டங்களிலும் புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்ற மக்களுக்கும் உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கின்றார். நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நம்முடைய அரசு அமைந்த நாள் முதல் இன்று வரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 19 லட்சம் பட்டாக்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நான் இங்கே பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இதற்கு துணையாக, வழிகாட்டியாக நின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும், அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும், வாழ்த்துகளையும் பயனாளிகளின் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்படி ஏழை, எளிய மக்களுடைய முன்னேற்றத்திற்காக டாக்டர் கலைஞர் வழியில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார். கழக அரசைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு நாளும் கழக அரசிற்கு மக்களுடைய அன்பும், ஆதரவும் பெருகிக்கொண்டிருக்கிறது.
அரசைத்தேடி மக்கள் வரவேண்டும் என்ற அந்த நிலைமையை மாற்றி, இன்றைக்கு மக்களைத்தேடி நம்முடைய அரசு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அந்த நிலைமையை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி இருக்கின்றார்.
குறிப்பாக, கடந்த இரண்டுமாத காலமாக, உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் மக்கள் குறைதீர்ப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றோம் என்பது உங்களுக்கு தெரியும். அந்த முகாம்களில் வருகின்ற மனுக்கள் அத்தனையும், உடனடியாக, முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் முடியமோ, அதை பரிசீலித்து அதையெல்லாம் முதலமைச்சர் அவர்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் அனைத்து அரசு அதிகாரிகளுடனும் ஆய்வுக்கூட்டம் நடத்தி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தனி கவனத்தோடு அந்த முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, பல்வேறு திட்டங்கள் குறிப்பாக சமீபத்தில் தொடங்கப்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று, ரேசன் பொருட்களைக் கொடுக்கின்ற முதலமைச்சருடைய தாயுமானவர் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியிருக்கின்றார்.
அதேமாதிரி, மகளிர் வளர்ச்சிக்காக மகளிர் விடியல் பயணத்திட்டம், மகளிருடைய கல்வி உயர்வுக்காக புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுடைய கல்விக்காக தமிழ்ப்புதல்வன் திட்டம், குழந்தைகளுடைய கல்விக்காக முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம், மகளிருடைய பொருளாதார உரிமைக்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி காட்டியிருக்கின்றார்.
இன்றைக்கு பல முற்போக்கான திட்டங்களின் காரணமாக, இந்தியாவிலேயே நம்முடைய மாநிலம் 11.19 சதவீதம் வளர்ச்சியோடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் நம்முடைய தமிழ்நாடு சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஆகவே, உங்களுக்கு இன்னும் அதிகமாக உழைக்க நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நாங்களும் காத்திருக்கின்றோம். இந்த அரசு என்றைக்கும் மக்களோடு, உங்களோடு பக்கபலமாக உங்களுக்கு துணையாக இருக்கும். எனவே இந்த அரசுக்கு துணையாக நீங்கள் என்றைக்கும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, பட்டாக்களை பெற வந்துள்ள உங்கள் அத்தனைபேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்தையும் தெரிவித்து, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்