Tamilnadu

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஆங்காங்கே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் எல்லாம் வாகன ஓட்டிகள் நேரடியாக பணம் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் நேரடியாக பணம் கொடுப்பதால் சில நேரம் சில்லறை கொடுப்பது போன்ற விஷயங்களின் காரணமாக சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதில் வாகனங்கள் கால தாமதத்தை சந்தித்து வந்தன.

இதனால் இந்த நிகழ்வை தவிர்ப்பதற்காக Fastag என்ற முறை கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை மூலம் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், சுங்கச்சாவடியை கடந்து செல்ல எளிதாக இருந்து வருகிறது. எனினும் இந்த Fastag நடைமுறை பலமுறை சிக்கலை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக Fastag முறையை பலரும் பயன்படுத்துவதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. எனவே பலரும் தற்போதும் சுங்கக்கட்டணத்தை நேரடியாக பணம் மூலம் செலுத்தி வருகின்றனர். இதனால் இந்த Fastag முறையை முழுமையாக்கவும், நேரடியாக பணம் கொடுக்கும் நடைமுறையை தவிர்த்து, டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி சுங்கக்கட்டண விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது Fastag மூலம் சுங்கச்சாவடிக்குள் நுழையும் வாகனங்கள் உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், அப்படி Fastag மூலம் இல்லாமல் நேரடியாக பணம் செலுத்தினால், செலுத்த வேண்டிய கட்டணத்தை இருமடங்கு செலுத்த வேண்டும் என்றும் புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் உடனடியாக தங்கள் வாகனங்களுக்கு Fastag பொருத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது நாட்டை டிஜிட்டல்மயமாக்கும் முயற்சிக்கும் உறுதுணையாக இருப்பதோடு, அவரவர் நேரத்தையும் பணத்தையும் சேமிக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Also Read: ”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!