Tamilnadu

10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்? : த.வெ.கவுக்கு கரூர் நீதிமன்ற சரமாரி கேள்வி!

கரூரில் 41 உயிர்களை பலிகொண்ட பெரும் துயரம் தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட நடுவர் நீதிமன்ற 2-வது நீதிபதி பரத்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், விஜயின் பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தன என தெரிவித்தார்.

எனினும் காவல்துறை அறிவுறுத்திய பாதையில் விஜய் செல்லாமல் தவறான ரூட்டில் சென்றார் என்றும் கேரவனுக்குள்ளேயே விஜய் இருந்ததால் அந்த இடத்தில் அசாதாரண சூழல் இருந்தது என்றும் தெரிவித்தார்.

புஸ்ஸி ஆனந்த் வாகனங்களை நிறுத்தி வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தினார் என்றும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தபோது விஜயின் வாகனத்தை மேலும் முன்னோக்கி செல்ல ஆதவ் அர்ஜூனா கூறினார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழலுக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட த.வெ.க., நிர்வாகிகளே முக்கிய காரணம் என்றும் பிரச்சாரம் நடைபெறும் இடத்துக்கு விஜய் குறித்த நேரத்தில் வராமல் வேண்டுமென்றே தாமதமாக வந்தார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதி, த.வெ.க தரப்பினரை நோக்கி எந்தெந்த இடங்களை தேர்வு செய்து பிரச்சார கூட்டத்திற்கு கேட்டீர்கள், மைதானம் போன்ற இடத்தை ஏன் கேட்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். விடுமுறை நாளில் பத்தாயிரம் பேர் தான் வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள், கூட்டம் அளவுக்கதிகமாக கூடி விட்ட நிலையில் நிகழ்ச்சியை ஏன் நிறுத்தவில்லை என்றும் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை தவெக தரப்பிடம் எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில் இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் இருப்பதால் இந்த வழக்கில் தவெக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் முழு உண்மையும் தெரிய வரும் என்றும் காவல்துறை தரப்பில் டிஎஸ்பி செல்வராஜ் தெரிவித்தார்.

Also Read: ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் 3 ஆம் கட்டத் திட்டம் : 38.81 லட்சம் மக்களுக்கு குடிநீர்!