Tamilnadu

”மரணங்களை வைத்து பா.ஜ.க நடத்தும் மலிவான அரசியல்” : மு.வீரபாண்டியன் ஆவேசம்!

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் மாநில அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைத்திருப்பதும், அந்தக் குழு உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்தும் ஆழ்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு விஜய் கடந்த 27.09.2025 நடத்திய பரப்புரை நிகழ்வில் கூட்ட நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுமான துயரச் சம்பவம் நெஞ்சை விட்டு அகலாமல் வேதனைப்படுத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவரும், நிர்வாகிகளும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், காவல்துறையின் பொதுவான கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் நடந்து கொண்டதே பேரபாய விளைவுக்கு காரணமாகி விட்டது.

துயரச் செய்தி தமிழ்நாடு அரசின் முதலமைச்சருக்கு எட்டிய ஆரம்ப நிலையில் இருந்தே அவரும், அரசும் போர்க்கால வேகத்தில் செயல்பட்டதின் காரணமாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பெரும் எண்ணிக்கையில் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும், உயர் அலுவலர்களும், இரவோடு இரவாக சம்பவ இடத்துக்கு சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையும், உயிர் பலி கொடுத்து கதறி அழுதபடி நின்றிருந்த குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறி, ஆற்றுப்படுத்தியது நாடு முழுவதும் வரவேற்கப்படுகிறது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பரிசோதனைப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சேவை மகத்தானது. இந்த உண்மை நிலைகளை மறைத்தும், மறுத்தும் வன்மம் வழியும் வஞ்சக நெஞ்சு கொண்டோர் சமூக ஊடகங்களில் அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

இந்த விஷமத்தனத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சக்திகளை தமிழக மக்கள் நன்கறிவார்கள். அவைகளை வரும் காலத்தில் முற்றாக துடைத்தெறிந்து பாடம் புகட்டுவார்கள் என்பதில் எள் நுனியும் சந்தேகமில்லை. ஆனால், அரசியல் களத்துக்கு புதிதாக வந்துள்ள கட்சியை சுற்றி வளைக்கும் அரசியல் சதிவலையை பாஜக விரித்திருக்கிறது.

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் மாநில அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைத்திருப்பதும், அந்தக் குழு உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்தும் ஆழ்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. கொள்கை எதிரியாக பாஜகவை அடையாளப் படுத்துவது நெஞ்சறிந்த உண்மையா? பூசிக் கழுவும் அரிதாராப் பூச்சா? என்ற வினாக்களும் எழுகின்றன.

பேரிடர் துயரங்களில் ஏற்படும் மரணங்களை மையமாக வைத்து ஆதாயம் தேடும் மலிவான அரசியலை தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தொண்டர்களை தூண்டி விடும் விஜய் - மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” : பெ. சண்முகம் கடும் கண்டனம்!