Tamilnadu
“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனும் கல்வித் திருவிழா! : நாடே திரும்பி பார்த்த விழாவில் நடந்தது என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலங்கானா முதலமைச்சர் அ. ரேவந்த் ரெட்டி அவர்களும் நேற்று (25.9.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியினை கொண்டாடும் விழாவில், 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான “புதுமைப்பெண்” மற்றும் “தமிழ்ப் புதல்வன்” திட்டங்களை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்க்கு வங்கி பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார்கள்.
இந்த ஆண்டு, 2.57 இலட்சம் மாணவ, மாணவியர் “புதுமைப் பெண்” மற்றும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள்.
சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தை கல்வி, விளையாட்டு, கலைகள் வாயிலாக கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக தமிழ்நாடு தன் பாதையில் முன்னேறி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. கல்வி எழுச்சியால் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தைக் கொண்டாடும் விதமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நேற்று (செப்.25) நடைபெற்றது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வரவும், மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்திடவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்திடும் நோக்கிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படத் தொடங்கிய பின் மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளது. மலைப் பகுதிகளில் தொலைவில் இருந்து வரும் குழந்தைகள், அடித்தட்டு மக்களின் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது 37,416 பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 20 இலட்சத்து 59 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள்.
இத்திட்டத்தால் முன்பைவிட மாணவர்களின் கவனிக்கும் திறன் கூடியுள்ளதையும், எழுதும்-வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளதையும். மாணவர்கள் முன்பைவிட நல்ல உடல்நலத்தோடு ஆரோக்கியமாக இருப்பதையும் மாநில திட்டக் குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது.
2023 டிசம்பர் தொடங்கி 2024 டிசம்பர் வரை மருத்துமனைகளுக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையும் 60 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘நான் முதல்வன்’ திட்டம்
தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம் 1.3.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக வகுப்பறைகளுக்கும் வேலைவாய்ப்புச் சந்தைக்கும் இருந்த இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம்; அவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டறிந்து அவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுவதோடு அவர்களின் வேலைவாய்ப்பையும் உறுதி செய்கிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை மேலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் நேர்முகத் தேர்வுகளுக்கும் தயாராகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் 14,63,764 மாணவர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.
தொழில்துறையில் முக்கியமான நிறுவனங்களில் பணியிலமர்த்துவதோடு, UPSC தேர்வுகளுக்கு தயார்செய்வதில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2021ல் 27 பேர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். “நான் முதல்வன்” கல்வி உதவித்தொகை (Scholarship) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபின் ஆண்டுதோறும் 1,000 பேர் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதல்கட்டத் தேர்வில் வெற்றிபெற்றதன் பின்னர் நேர்முகத் தேர்வுக்கு தில்லி செல்லும் வரையிலான செலவுகளையும் அரசே ஏற்கிறது. இத்திட்டத்தின் மூலம், 2023-24ல் 39 பேர், 2024-25ல் 50 பேர் என தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ளனர்.
‘புதுமைப் பெண்’ திட்டம்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தினை 5.9.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பட்டம், பட்டயம் அல்லது ஐ.டி.ஐ. பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதால் அரசுப் பள்ளி மாணவியர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 5 லட்சத்து 29 ஆயிரம் மாணவியர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கையில், முதல் ஆண்டு மட்டும் வழக்கமான எண்ணிக்கையைவிட 13,681 பெண்கள் அதிகமாக கல்லூரிகளில் உயர்கல்வி பயில சேர்ந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2025-ல் இத்திட்டத்தில் திருநங்கையரையும், பால்புதுமையினரையும் தமிழ்நாடு அரசு இணைத்திருக்கிறது.
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 9.8.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தற்போது 3.92 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
‘புதுமைப் பெண்’ மற்றும் ’தமிழ்ப் புதல்வன்’ திட்டங்கள் தமிழ்நாட்டின் உயர்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வறிய குடும்பங்களில் பொருளாதாரச் சூழல் காரணமாக குழந்தைகளை படிக்கவைக்காமல் வேலைக்கு அனுப்பிக்கொண்டிருந்த நிலையை இத்திட்டங்கள் மாற்றி அமைத்திருக்கின்றன.
பள்ளிக்கல்வியிலிருந்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 75 சதவிகிதமாக உயர்ந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த உதவித்தொகை என்பது வெறுமனே பண உதவி அல்ல. கண்ணியம், வெற்றி பெறும் கனவு, சமத்துவம் ஆகியவற்றிற்கான முதலீடு ஆகும்.
மாதிரிப் பள்ளிகள்
2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகளில் JEE, NEET, CLAT, CUET போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு முறையாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்படும் பள்ளிகளில் விடுதி வசதி, பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், கணினி வசதி, விளையாட்டு வசதிகள் போன்றவற்றோடு கலைத் திறனையும் தனித்திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையிலான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
கடந்த நான்காண்டுகளில் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு முதன்முறையாக 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப்புற அடித்தட்டு மாணவர்கள் மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் அறிவியல் புலத்தில் உயர்கல்வி பயிலச் சென்றிருக்கின்றனர். சிலர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்விக்காகச் சென்றிருக்கின்றனர். இவர்களுக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்று கொண்டிருக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அளிக்கும் கல்வி உதவித்தொகை அச்சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரிதும் உதவுகின்றது. முதல் வகுப்பு தொடங்கி பி.எச்டி வரையிலான அவர்களுடைய ஒட்டுமொத்தக் கல்விக்கும் இத்தொகை உதவிகரமாக உள்ளது.
உயர்கல்வி வழிகாட்டித் திட்டம், ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான கல்வி உதவித்தொகை இவை இரண்டும் உயர்கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்து சமூக மாற்றத்திற்கு மாபெரும் பங்களித்திருக்கின்றன.
மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக வேறுபாடுகளை களைந்து, நல்லிணக்கத்தை வளர்ந்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளுக்கு ‘சமூக நீதி விடுதிகள்’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.
விளையாட்டுத் துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு
கல்வியில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு விளையாட்டுத் துறையிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு அரசால் ரூ.548 கோடி செலவில் விளையாட்டிற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.150 கோடி அளவில் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு மினி விளையாட்டரங்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட விளையாட்டு வளாகங்கள், ஒலிம்பிக் அகடமிகள், தடகள மைதானங்கள், ஹாக்கி மைதானம், உள்விளையாட்டு அரங்கங்கள், சிறப்பு அகடமிக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்டார் அகடமிக்கள் 38 மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. உள்ளூர் விளையாட்டு வீரர்களின் திறமைகளை அடையாளங்கண்டு ஊக்குவிப்பதற்கான பயிற்சிகள், ரூ.86 கோடியில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்குதல், ரூ.100 கோடியில் நகர்ப்புற விளையாட்டு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக விளையாடுவதற்கும் பயிற்சி எடுத்துக்கொள்வதற்கும் நகர்ப்புறங்களை மட்டும் நம்பியிராமல் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களும் இளைஞர்களும் பயன்பெறுகின்றனர்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேஷன் ரூ.29.63 கோடியில் விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரரீதியாகவும் பொருள் வடிவிலும் உதவி இருக்கிறது. மரபார்ந்த தடகளத்தைப் போலவே பாரா-ஒலிம்பிக் தடகளமும் அதே அளவு முக்கியத்துவத்தை பெற்றிருப்பது எல்லோரையும் உள்ளடக்கிய தன்மைக்குச் சான்றாக உள்ளது.
தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்
‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் வாயிலாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கான எண்ணறிவும் எழுத்தறிவும் உறுதிசெய்யப்படுகிறது. எட்டு வயதிற்குள் குழந்தைக்கு இந்த அறிவை ஊட்டுவதை ஆசிரியர்கள் நிகழ்த்திக்காட்டுகின்றனர்.
‘மணற்கேணி’ என்கிற டிஜிட்டல் கற்றல் தளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக மாணவர்கள் வீடியோ விளக்கங்களுடன் தங்கள் பாடங்களைப் பயில முடியும். உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி வாயிலாக ஆசிரியர்கள் கற்பிக்கும்பொழுது மாணவர்களுக்கு அது காட்சிரீதியான அனுபவத்தை வழங்குவதால் பாடப்பொருளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்கின்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் மணற்கேணியை பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.
மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் கலைத் திருவிழா பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர்வதிலும் ஆசிரியர் – மாணவர் உறவை மேம்படுத்துவதிலும் கலைத் திருவிழாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதற்காக வாசிப்பு இயக்கம், சிறார் இலக்கியத் திருவிழா, வினாடி வினா போட்டிகள் என மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்து அவர்களை முழுமையான மனிதர்களாக இச்சமூகத்திற்கு ஒப்படைப்பதை தமிழ்நாடு அரசு தன் கடமையாகக் கொண்டுள்ளது.
வேளாண்குடியிலிருந்தும், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களிலிருந்தும் தினக்கூலிக் குடும்பங்களில் இருந்தும் வந்த முதல் தலைமுறை குழந்தைகள் மெல்ல மெல்ல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நுழைந்து, சமூகநீதி காத்த பெருமைமிகு வரலாறு கொண்ட தமிழ்நாடு, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு 2021 முதல் கல்வியில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் செயலூக்கத்தோடு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இத்தகைய நடவடிக்கைகளும் செயல்படுத்தி வரும் திட்டங்களும் மாபெரும் கல்வி எழுச்சிக்கு வழிகோலியுள்ளன.
தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்
தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டமாக இவ்விழாவில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெற்று வரும் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்து வருவது குறித்தும், உடல் ஆரோக்கிய மேம்பாடு குறித்தும் புள்ளி விவரங்களோடு காணொலி மூலம் விளக்கப்பட்டது.
டாக்டர் அருண் குமார் அவர்கள் காலை உணவு திட்டத்தின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்தும், திரைப்பட இயக்குநர்கள் பிரேம் குமார், தமிழரசன் பச்சைமுத்து ஆகியோர் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து உரையாற்றினார்.
கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது குறித்து திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் பாராட்டி உரையாற்றினார்கள்.
“நான் முதல்வன்” திட்டத்தில் இணைந்துள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டதுடன், “நான் முதல்வன்” திட்ட இயக்குநர் சாந்தி அவர்கள் திட்டத்தின் பயன்கள் குறித்தும், அதனால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், “நான் முதல்வன்” திட்டத்தால் பயனடைந்த மாணவ, மாணவியர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் பணியின் சேர்ந்த மாணவி தான் பெற்ற முதல் மாத சம்பளத்தை மேடையிலே தனது தந்தையிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பாலா, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் “நான் முதல்வன்” திட்டம் மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து பாராட்டி உரையாற்றினார்.
“விளையாட்டுச் சாதனையாளர்கள்” பிரிவில் தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வருவது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மனோஜ், வீராங்கனை ரோசி ஆகியோர் தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதன்மூலம் தாங்கள் பெற்ற பயன்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். கிரிக்கெட் வீரர் நடராஜன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை திட்டங்கள் குறித்து உரையாற்றினர்.
“புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்” திட்டத்தால் பயன்பெற்ற மாணவியர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் “புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்” திட்டம் குறித்து உரையாற்றினார்.
“அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்” பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இத்திட்டத்தால் பயன்பெற்றவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோரது சேவைகளை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் அ. ரேவந்த் ரெட்டி ஆகியோர் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.
Also Read
-
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது எப்போது ? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு... விவரம் உள்ளே !
-
“கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு - “எலைட் மக்களுக்கு இது கிரிஞ்சாகத்தான் தெரியும்” : இயக்குநர் கவிதாபாரதி !
-
ஆகம விதியை பின்பற்றும், பின்பற்றாத கோவில்கள் என்ன ? - 6 பேர் கொண்ட குழுவை அமைத்த உச்சநீதிமன்றம் !
-
"விளையாட்டு வீரர்களை கொண்டாடுவதில் முதல் மாநிலம் தமிழ்நாடுதான்" - துணை முதலமைச்சர் உதயநிதி !