Tamilnadu
”திராவிட கருத்தியல்தான் நம்மை படிக்க வைத்தது” : இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேச்சு!
’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாக நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருங்கமான திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், விளையாட்டுச் சாதனையாளர்கள், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் மற்றும் அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற சாதனையாளர்கள் ஆகிய பகுதிகளாக நடைபெற்றது.
இதன் ஒவ்வொரு பகுதியிலும் அரசின் திட்டம் மூலம் பயனடைந்த மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைந்த மாணவர்களின் குரல்களை கேட்டபோது அரங்கமே கண்ணீரில் நெகிழ்ந்தது.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, "துரோணாச்சாரியார் முதல் ராஜகோபாலாச்சாரியார் வரை நாம் படிக்கக்கூடாது என்று தடுத்தார்கள். அதுதான் ஆரிய கருத்தியல். ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும், எல்லோரும் அறிவாளியாக இருக்க வேண்டும் என்று நம்மை படிக்க வைத்தது திராவிட கருத்தியல். அதனை தடுக்கும் வகையில் இன்றும் புதிய கல்விக் கொள்கை மூலம் நம் கல்வியை தடுக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
தன்னுடைய கை, கால்களை கட்டி தண்ணீரில் தூக்கிப் போட்ட பிறகும் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நீந்தாமல், தமிழ்நாட்டு மக்களையும் நீந்தி காப்பாற்றுகிறார் நம் முதலமைச்சர். நமது மாணவர்களை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று எந்நாளும் உழைத்து வருகிறார்” என பேசினார்.
அதேபோல் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ”நான் பள்ளி படிக்கும்போது சாதிய உளவியலால் அதிகம் கஷ்டப்பட்டேன். ஆனால் இன்று பள்ளிக்குள் சமூக நீதி, சமத்துவம் என்ற வார்த்தையை ஓங்கி ஒலிக்கவைக்கக் கூடிய நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பெயர்களை நீக்கியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என கூறினார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் கல்வி குறித்து போலி தரவுகள்” : ASER நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்திய எழுத்தாளர் !
-
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது எப்போது ? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு... விவரம் உள்ளே !
-
“கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு - “எலைட் மக்களுக்கு இது கிரிஞ்சாகத்தான் தெரியும்” : இயக்குநர் கவிதாபாரதி !
-
ஆகம விதியை பின்பற்றும், பின்பற்றாத கோவில்கள் என்ன ? - 6 பேர் கொண்ட குழுவை அமைத்த உச்சநீதிமன்றம் !