Tamilnadu

”சமூகநீதியின் தேவையை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.9.2025) சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், முடிவுற்ற பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்து, புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியினை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:-

நாம் வாழும் சமூகத்தை கட்டமைக்கும் நம் குழந்தைகளின் எதிர் காலத்தை அவர்கள் பயணிக்கும் திசையைத் தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்திருக்கக்கூடிய இரண்டாயிரத்து 715 பேரையும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழ்நாட்டு பெற்றோர்களின் சார்பாக வாழ்த்தி, வருக! வருக! என வரவேற்கிறேன்!

ஆசிரியப் பெருமக்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சி தொடக்க விழா - 277 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 243 புதிய கட்டடங்கள் மற்றும் பாரத சாரண – சாரணியர் தலைமை அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா – 94 கோடி ரூபாயில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கக்கூடிய 59 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு என்று முப்பெரும் விழா என்று இந்த நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டி ஐம்பெரும் விழாவை ஏற்பாடு செய்திருக்கின்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய துறையின் செயலாளர் சந்திரமோகன், இ.ஆ.ப., உள்ளிட்ட அத்தனை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

எப்போதும் மாணவர்களுக்குத்தான் ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள். ஆனால், வரவேற்புரை மூலமாக ஆசிரியருக்கே பாடம் எடுத்திருக்கிறார் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். என்னைப் பொறுத்தவரை, முதலமைச்சர் என்பதால், சில ஆலோசனைகளை உங்களிடம் சொல்கிறேன்.

ஆசிரியர் என்பவர், பாடப்புத்தகத்தில் இருக்கின்ற பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுப்பவர் அல்ல; தன்னுடைய கல்வியையும், அனுபவத்தையும் சேர்த்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, எதிர்காலத்தில், நல்லொழுக்கம் மிக்க நாளைய சமுதாயத்தை உருவாக்குகிறவர்கள்!

ஒவ்வொரு முறை நீங்கள் வகுப்பறைக்குள்ளே நுழையும்போதும், நினைவில் கொள்ள வேண்டியது – உங்கள் முன்னால் உட்கார்ந்திருப்பவர்கள், பாடம் கற்றுக் கொள்கின்ற மாணவர்கள் மட்டுமல்ல, எதிர்கால டாக்டர்கள், இன்ஜினியர்கள், சயிண்டிஸ்ட், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்ற அரசியல் தலைவர்கள் என்று நீங்கள் உணரவேண்டும்.

நாட்டின் எதிர்காலத் தூண்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்ற பொறுப்புணர்வு தான் உங்களிடம் மேலோங்கி இருக்கவேண்டும்! இத்தனை ஆண்டு காலமாக, நீங்கள் மாணவர்களாக இருந்து, கல்வியைக் கற்று, சமூகத்தை உள்வாங்கி பெற்றிருக்கக்கூடிய அனுபவத்தை அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கடத்தி, இந்தச் சமூகத்துக்கே ஒளியேற்றி வைக்கப் போகிறீர்கள்!

இன்றைக்கு நாம் இருக்கின்ற காலக்கட்டத்தில், பாடம் எடுப்பது உங்களுக்கு எளிதாகிவிடும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், நீங்கள் படித்த காலத்தில், ஏன், நாங்கள் படித்த காலத்தில் எல்லாம் பரந்துபட்ட வாசிப்பிற்கான தேடலுக்கு மிகவும் மெனக்கெட வேண்டியதாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அப்படியல்ல! அறிவியல், வரலாறு, கணிதம் தொடங்கி, எந்தப் பாடமாக இருந்தாலும், அதன் ஆழத்தை, ரொம்ப எளிதாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகிவிட்டது! ஆனால், இதில் ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இவைகள் அனைத்துமே தகவல்கள்தான்!

இந்தத் தகவல்களை மாணவர்களின் அறிவாற்றலுக்குக் கொண்டு சென்று அவர்களுடைய சிந்தனையைத் தூண்டி, அவர்களுடைய அறிவை மேம்படுத்த வேண்டிய பெரும் பணி உங்களிடம் தான் இருக்கிறது! ஏனென்றால், எந்த அளவுக்கு அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக்கிடக்கிறதோ, அதற்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல் தேவையற்ற குப்பைகளும் இருக்கிறது! அதற்காக நாம் தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்ல முடியாது!

நாம்தான் நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய மாணவர்களுக்கு சரியானதை அடையாளம் காட்டவேண்டும்! எதற்கெடுத்தாலும் டெக்னாலஜியை மட்டுமே நம்பி இருக்கின்ற தலைமுறையாக நம்முடைய மாணவர்கள் மாறிவிடக் கூடாது. எதுவாக இருந்தாலும், கூகுளிடம் கேட்டுக் கொள்ளலாம். ஏ.ஐ.-யிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக் கூடாது!

தொழில்நுட்பத்திற்கும், மனிதச் சிந்தனைக்குமான வேறுபாட்டை உணர்த்தவேண்டும்! அறத்தின் வலிமையையும், நேர்மையின் தேவையையும் மாணவர்களுக்கு நீங்கள்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்! மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களைக் கடந்து, இலக்கியங்களை, பொது அறிவுத் தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை, காலநிலை மாற்றம் குறித்த தெளிவை, மாற்று எரிசக்திகளின் தேவையைப் பற்றியெல்லாம் நீங்கள் உரையாடி புரிய வைக்கவேண்டும்!

என்னடா நம்முடைய டீச்சர் போர் அடிக்கிறார்கள் என்று அவர்கள் நினைத்துவிடக் கூடாது! மாணவர்களிடம் நீங்கள் ஒரு நண்பனாக பழகவேண்டும்! யூடியூபில் சில ஆசிரியர்கள், தங்களுடைய மாணவர்களுக்கு Critical Thinking – Problem Solving பற்றியெல்லாம், Creative-ஆக சொல்லித்தர பல வீடியோக்கள் வருகிறது. அது போன்று நீங்களும் புதுப்புது முயற்சிகளை எடுக்கலாம்... உங்களுடைய முயற்சி ஒரு மாணவ, மாணவியின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கலாம்!

அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கின்ற திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அவர்கள் தலைமுறையை ஏற்றம் பெற செய்யலாம்! இதற்கெல்லாம் காரணம், எங்கள் சயின்ஸ் சார், மேத்ஸ் டீச்சர், பி.டி. சார் என்று அவர்கள் சொல்வதுதான் உங்களுக்கான பெரிய அவார்ட்!

இன்றைக்கு நீங்கள் விதைக்கப்போகின்ற நல்ல விதைதான், நாளைக்கு நம்முடைய சமூகத்தில் முளைக்கப் போகிறது!

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எந்தளவுக்கு அறிவாற்றல் முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம்! மாணவர்களை மிகவும் ப்ரஷர் செய்யக் கூடாது! நாம் அன்பாக, பக்குவமாகச் சொன்னால், மாணவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்!

சில குழந்தைகள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள். சிலர் கலகலவென்று பேசுவார்கள். சிலர் படித்த குடும்பங்களில் இருந்து வந்திருப்பார்கள். சிலருடைய குடும்பங்கள் இப்போதுதான் கல்வி கற்க தொடங்கியிருப்பார்கள். அனைவருடைய வீட்டிலும் ஒரே சூழல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால், அனைவரையும் ஒரே அளவுகோலோடு, முன் முடிவோடு அணுகக்கூடாது! அவர்களுடைய குடும்பச்சூழல் என்ன? அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சனை என்னவென்று கவனித்து, அவர்களை வளர்த்தெடுக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு! ஏனென்றால், நீங்கள் தான், அந்த குழந்தைகளுக்கான இரண்டாவது பெற்றோர்!

இன்னும் சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு இருக்கின்ற சூழலில், பெற்றோர்களை விட, ஆசிரியர்கள் தான் பிள்ளைகளிடம் அதிக நேரம் இருக்கிறீர்கள். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு கல்விச் சூழலில், மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம்!

இன்றைக்கு நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்கள், நம் பெருமையின் அடையாளமாக உயர்ந்து வருகிறார்கள். பள்ளிகளின் உட்கட்டமைப்பும், தரமும் உயர்ந்திருக்கிறது! அவர்களுக்கு, சமூக அறிவும், உலக அறிமுகமும் கிடைக்கவேண்டும் என்ற, வெளிநாடுகளுக்கு டூர் அழைத்துக் கொண்டு செல்கிறோம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி, பொருளாதார சூழல் காரணமாக தடைபடக் கூடாது என்று புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்!

இது எல்லாவற்றிற்கும் மேலாக, அறிவுப்பசியோடு பள்ளிக்கு வருகின்ற மாணவர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்று சூடான – சுவையான – சத்தான காலை உணவை வழங்குகிறோம்! ஆசிரியர்களும் தங்களை Upgrade செய்வதற்கான அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம்!

இதையெல்லாம் பயன்படுத்தி, மாணவர்களை வளர்த்தெடுக்க வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். கல்வி தொடர்பாக, நீங்கள் செய்யப் போகின்ற பணிகளைத் தாண்டி, மாணவர்களுக்குள்ளே சாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்!

சமத்துவம் மற்றும் சமூகநீதியின் தேவையைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்! மாணவர்களுக்கு, நல்ல ரோல்-மாடல்களை அறிமுகப்படுத்துங்கள்! நீங்களே ஒரு ரோல்மாடலாக இருங்கள்! Civic Sense-யை கற்றுத் தாருங்கள்! மாணவர்களிடம் அடிக்கடி மனதுவிட்டு பேசுங்கள். நூலகங்களையும், வாசிப்புப் பழக்கத்தையும் அறிமுகப்படுத்துங்கள்! அதற்கு, நீங்கள் முதலில் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்!

மாணவர்கள், எல்லாவற்றையும், ஏன் – எதற்கு – எப்படி என்ற பகுத்தறிவு உணர்வுடன் அணுகுகின்ற தலைமுறையாக உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கிறது!

Also Read: ”கீழடியைத் தொடர்ந்து பூம்புகாரின் பெருமையையும் வெளிக்கொணர்வோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!