Tamilnadu
நவ. 1 முதல் : வால்பாறை செல்வதற்கும் இனி இ-பாஸ் கட்டாயம்... உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காரணம் என்ன ?
ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். குழுவின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த அறிக்கையில், ஊட்டிக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், அரசு போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும், வரும் டிசம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி - ஐ.ஐ.எம். குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஐ.ஐ.டி - ஐ.ஐ.எம். குழுவினருக்கு தேவையான தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்க ஏதுவாக தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும் என அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டனர். அப்போது ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலை விட வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியன சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள். அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ பாஸ் வழங்கும் நடைமுறையை நவம்பர் 1 ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 31 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"திமுகவை போல் இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!