Tamilnadu

ரோபோ சங்கர் மறைவு : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து, வெள்ளித்திரைக்கு வந்தார். ’மாரி’, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன், புலி, விஸ்வாசனம் உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் ரோபோ சங்கர், தீவிர சிகிச்சைக்கு பிறகு நலம்பெற்றார். இதனைத் தொடர்ந்து படங்களில் மீண்டும் நடத்து வந்தார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 2 நாள்களாக வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவரது உயிர் பிரிந்தது. அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை - வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், ”திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி - சின்னத்திரையில் சாதித்து - திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!