Tamilnadu
சென்னையில் சிம்பொனி இசை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ‘இசைஞானி இளையராஜா பொன்விழா’!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், அன்புமிளிர இசைஞானி என அழைத்துப் போற்றப்பட்ட இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
1975-ஆம் ஆண்டு துவங்கிய இசைஞானி இளையராஜா அவர்களின் இசைப் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா அவர்கள்.
முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் தமிழர் மட்டுமல்ல இசைஞானி இளையராஜா முதல் இந்தியரும் ஆவார். ஆசிய நாடுகளைச் சேர்ந்த எவரும் இச்சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
முதலமைச்சர் அவர்களின் பாராட்டும், வாழ்த்தும் 8.3.2025 அன்று இலண்டன் மாநகரில் முதல் நேரடி சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில், 2.3.2025 அன்று முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இசைஞானி இளையராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களைப் பாராட்டி, அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
அது குறித்து சமூக வலைதளப்பதிவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடும்போது,
“தம் கைப்பட எழுதிய Valiant Symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணி மகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்! ” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, இலண்டன் மாநகர் சென்று சிம்பொனி சாதனை நிகழ்த்தி வெற்றியுடன் சென்னை திரும்பிய நிலையில் 13.3.2025 அன்று இளையராஜா அவர்கள் முதலமைச்சர் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்து, நன்றி தெரிவித்தார்கள்.
முதலமைச்சர் அவர்கள் அறிவித்த பாராட்டு விழா
இதன் பின்னர், முதலமைச்சர் அவர்கள், தம்முடைய வலைதளப்பதிவில், “மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள் அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இதன்படி, வரும் 13.9.2025 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜா அவர்களின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடைபெறும். இவ்விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரை வழங்குகிறார்கள்.
தொடர்ந்து நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசன், எம்.பி., அவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
நிறைவாக இசைஞானி இளையராஜா எம்.பி., அவர்கள் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
இவ்விழாவில். அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள் முதலானோரும் பங்கேற்கிறார்கள்.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், நன்றி கூறுகிறார்கள்.
Also Read
-
ராகுல் காந்தியின் வாகனங்களைத் தடுத்த பாஜக குண்டர்கள் - செல்வப்பெருந்தகை கண்டனம் !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : எந்தெந்த இடங்கள்... விவரம் உள்ளே !
-
காவலர் நாள் விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்ற காவலர்கள்!
-
‘மணலி-எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு மன்றம்’ & ‘தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளை’ தொடக்கம்!
-
”கண்ணாடி பாலம் பாதுகாப்பாகவும் உறுதியுடனும் உள்ளது" : அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!