Tamilnadu

“வாக்களிக்காத மக்களும் வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படுகின்றனர்” - துணை முதலமைச்சர் பேச்சு!

தமிழ்நாடு துணை  முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சேக்கிழார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை  திறந்து வைத்து, புதிய  திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் ஆற்றிய உரை

நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நம்முடைய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பொதுமக்களுக்கு இன்றைக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

இந்த விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள உங்களுடைய அமைச்சர் அண்ணன் தா.மோ.அன்பரசன் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், நன்றியையும் உங்கள் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நேற்றைய தினம் காஞ்சிபுரத்தில் சுமார் 5 ஆயிரம் பொதுமக்களுக்கு, 253 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினோம். இன்றைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கிட்டத்தட்ட 305 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றோம். எனவே, இந்த 2 நாட்களில் மட்டும், நேற்றும், இன்றும் மட்டும் காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பாக சுமார் 12 ஆயிரம் பேருக்கு 660 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 நாட்களில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார்.

ஒவ்வொரு மனிதனுக்கும், உண்ண உணவு, உடுத்த உடை,
உறங்க இடம் இந்த மூன்றும் தான் அடிப்படை தேவைகள்.
எப்போது எல்லாம் நம்முடைய கழக  ஆட்சி அமைகின்றதோ அப்போதெல்லாம் இந்த மூன்று தேவைகளையும், நம்முடைய அரசு பார்த்து, பார்த்து செய்துகொண்டு வருகின்றது.

குறிப்பாக, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இருக்க இடம் எனும் தேவையை கருத்தில் கொண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிக் கொண்டு வருகின்றார். குறிப்பாக, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது, பெல்ட் ஏரியாவில் வசிக்கின்ற பொதுமக்களுடைய பட்டா பிரச்சினையை நிச்சயமாக தீர்த்து வைப்போம்  என்று தேர்தல் வாக்குறுதியாக  மக்களை சந்திக்கும்போது கூறினார். அதன்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு படிப்படியாக பட்டாக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக, கடந்த 4 வருடங்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் பட்டாக்களைக் கொடுத்து மிகப்பெரிய சாதனையை  படைத்திருக்கிறது நம்முடைய அரசு. இன்றைக்கு இந்த விழாவில் 7 ஆயிரம் பேர் பட்டாக்களைப் பெற்று இருக்கிறீர்கள். இனி பட்டாக்களை பெற்று இருக்கின்ற நீங்கள் உங்களுடைய வீட்டில் இன்றைக்கு இரவு நிம்மதியாக மகிழ்ச்சியோடு, சந்தோசமாக தூங்கலாம் உங்களுடைய குடும்பத்தோடு. ஏனென்றால், உங்கள் இடத்தின் மீதான சட்டப்பூர்வமான உரிமையை உங்களுக்கு இந்த அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். எனவே, பட்டாக்களைப் பெற வந்துள்ள அத்தனைப் பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு இந்த விழாவில் ஆண்களைவிட அதிகமாக சொல்லப்போனால் 80 சதவீதம் பேர் தாய்மார்கள், மகளிர் வந்து இருக்கின்றீர்கள். மகளிருடைய பொருளாதார விடுதலைக்காக பல்வேறு திட்டங்களை முன்னுரிமை கொடுத்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதில் சில திட்டங்களை மட்டும் இங்கே நான் உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்புகின்றேன்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு அவர்கள் போட்ட முதல் கையெழுத்தே மகளிர் உங்களுக்கான அந்த கையெழுத்துதான், அதுதான் மகளிர் விடியல் பயணத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட இந்த நான்கு வருடங்களில் மட்டும் 770 கோடி முறை பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றீர்கள். ஒவ்வொரு மகளிரும் மாதா, மாதம் மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய் நீங்கள் சேமித்து இருக்கின்றீர்கள்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த காஞ்சிபுரம் மாவட்டத்துல மட்டும் இந்த நான்கு வருடங்களில் 44 கோடியே 08 லட்சம் பயணங்களை மகளிர் நீங்கள் மேற்கொண்டு இருக்கின்றீர்கள். இவ்வளவு பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் இதுதான் இந்த திட்டத்தினுடைய வெற்றி என்று சொல்லலாம்.

அடுத்து காலையில் எழுந்து சீக்கிரம் வேலைக்கு செல்கின்ற பெற்றோர்கள் காலை உணவு சமைப்பதற்கு நேரம் இல்லாமல் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடுவார்கள். காலையிலேயே எழுந்து சமைத்துக் கொடுப்பது என்பது சிரமமாக இருக்கும். இதை அறிந்து கொண்ட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பிள்ளைகள் பல நேரங்களில் காலை உணவு சாப்பிடாமலேயே  வந்து விடுகிறார்கள் என்று அறிந்து முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தை, நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய  அரசு உதவி பெறுகின்ற பள்ளிக் கூடங்களுக்கும் விரிவாக்கம் செய்கின்ற திட்டத்தை சமீபத்தில் 10 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் அவர்கள் துவங்கி வைத்தார்கள். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் அவர்கள், அவருடைய மாநிலத்தில் இருந்து வந்து இங்கு அந்த திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை பாராட்டிய பேசிய போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே இது ஒரு சிறப்பான திட்டம். இந்த திட்டத்தை என்னுடைய பஞ்சாப் மாநிலத்திலும் நான்  விரிவுபடுத்த போகின்றேன் என்று பெருமையாக கூறினார். 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலமாக, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 22 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும்  தினம்தோறும் 33 ஆயிரம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்.

அடுத்து நம்ம வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் படித்தால் பத்தாது, பள்ளிக்கூடம்  முடித்துவிட்டு உயர்கல்வி  படிக்க வேண்டும் என்று  புதுமைப்பெண்,  தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த திட்டத்தின் மூலமாக கிட்டத்தட்ட 8 லட்சம்  மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மட்டும் தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக சுமார் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையை பெற்று வருகிறார்கள்.

இது எல்லாவற்றையும் விட மிக, மிக முக்கியமான ஒரு திட்டம். உங்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, இந்த செப்டம்பர் மாசத்தோட 2 வருடம் நிறைவு பெறுகிறது. இந்த 2 வருடத்தில் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 இலட்சம் மகளிருக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய்  கொடுத்திருக்கிறார். குறிப்பாக இன்றைக்கு இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 74 ஆயிரம் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மாதம், மாதம் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கூட, நிறைய பேர் எங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வேண்டும் என்று அந்த உரிமைத் தொகையை கேட்டு இருக்கின்றீர்கள். நிச்சயமாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அந்த நிபந்தனைகளை எல்லாம் தளர்வு செய்து இருக்கிறார். முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அந்த மனுக்களின் மீது நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும். இன்னும் கூடுதலான மகளிருக்கு நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று இந்த நேரத்தில் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது போன்ற ஏராளமான திட்டங்களால் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக  11.19 சதவீத வளர்ச்சியோடு இந்தியாவுலேயே முதல் இடத்தில் உள்ளது.

நம்முடைய திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்களை தாமாக முன்வந்து ஆதரிக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் அவர் சொன்ன வார்த்தைகள் இதுதான், எங்களுக்கு வாக்களிக்காத மக்களும் வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படுகின்ற அளவிற்கு எங்களுடைய ஆட்சி சிறப்பான ஆட்சியாக இருக்கும், எல்லோருக்குமான ஆட்சியாக இருக்கும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கூறினார். அதேபோல இன்றைக்கு எல்லா தரப்பு மக்களும் நம்முடைய அரசை, நம்முடைய முதலமைச்சர் அவர்களை பாராட்டிக் கொண்டு வருகிறார்கள்.

இந்த சாதனைகள் தொடர உங்களுடைய ஆதரவு இந்த அரசுக்குத் தேவை. ஏனென்றால் நீங்கள் எல்லாம் பயனாளிகள் மட்டுமில்லை, நம்முடைய அரசு திட்டத்தினுடைய பங்கேற்பாளர்கள்.  நம்முடைய அரசின் சாதனைகளை நீங்கள் அத்தனைபேரும் இனிவரும் காலங்களில் பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இங்கே பட்டா உட்பட பல்வேறு நலத்திட்டங்களைப் பெறவந்துள்ள உங்கள் அத்தனைப் பேரையும் மீண்டும் ஒரு முறை உங்களை வாழ்த்தி, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம். என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பேசினார்.

Also Read: வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள்.. ரூ.1.50 கோடி மானியம்.. அமைச்சர் MRK பன்னீர்செல்வம்