Tamilnadu

”அனைத்து திட்டங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செப்.9 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது, ”ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த மாவட்டத்தில் நடைபெறுகின்ற அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நாம் நடத்தியிருக்கின்றோம். நம்முடைய அரசு அமைந்தபிறகு இந்த நான்கரை ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு புதிய நலத்திட்டங்களை தந்திருக்கின்றார்கள்.

அந்த திட்டப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து இன்றைக்கு நாம் விவாதித்திருக்கின்றோம். அதேபோல் இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களுடன் நான் சந்தித்து உரையாடிவிட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றேன்.

அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது, சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். அதுதவிர, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், பொறுப்பு அமைச்சர், மக்கள் பிரதிநிதிகளுடன் கோரிக்கைகளை பெற்று, அவற்றையும் ஆய்வு செய்த பிறகே இந்த கூட்டத்திற்கு வருகை தந்துள்ளேன்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், முக்கியமான திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து மட்டுமே இன்றைக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து திட்டங்களையும் காலம் தாழ்த்தாமல் திட்டத்திற்கான குறிப்பிட்ட காலவரையரைக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அரசு, முதலமைச்சர் அவர்கள் எவ்வளவு திட்டங்களை தீட்டினாலும், அவற்றை மக்களிடத்தில் கொண்டு சென்று மக்கள் பயனடைய வேண்டும் என்றால் வந்திருக்கக்கூடிய அரசு அலுவலர்கள் நீங்கள் தான் முக்கிய பங்காற்றி இருக்கின்றீர்கள்.

எனவே, இத்திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்தி, இந்த அரசுக்கும் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”முதலீடுகளை ஈர்ப்பதிலும் முதல் அமைச்சராக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி பாராட்டு