Tamilnadu

தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தொழில்துறை மற்றும் உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருவதை இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி அவர்கள் பாராட்டியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் முதலீடு மற்றும் உலகளாவிய ஈடுபாடு குறித்து இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் திரு. விக்ரம் துரைசாமி அவர்களை இலண்டனில் சந்தித்துப் பேசினார். 

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் உலகளாவிய நடவடிக்கைகளுக்கு இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி அவர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு, தமிழ்நாட்டின் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பொருளாதார செயல்திறனையும் பாராட்டினார். இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும் விரும்பமான இடங்களில் தமிழ்நாடு ஒன்றாகும் என்று தெரிவித்தார். 

சமீபத்தில் நிறைவடைந்த இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்திடும் சிறந்த நிலையில் உள்ள இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும் என்பதை விக்ரம் துரைசாமி அவர்கள் எடுத்துரைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இங்கிலாந்து பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ்நாட்டின் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், எதிர்காலத்தை நோக்கியதாகவும், உலகளாவிய சந்தை வாய்ப்புகளுடன் திட்டமிட்ட ரீதியில் இணைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருவதை இந்தியத் தூதர் குறிப்பாகப் பாராட்டினார். புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் இந்தியாவில் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவ விரும்பும் இங்கிலாந்து நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாடு சிறந்த தேர்வாக இருப்பதை அவர் குறிப்பிட்டார். மேலும், இங்கிலாந்து நாட்டு கல்வி நிறுவனங்களுடன் மாநிலத்தின் முனைப்பான ஈடுபாட்டையும் வரவேற்றார்.

சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கான ஒழுங்குமுறை ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட இங்கிலாந்து-தமிழ்நாடு கல்வி கூட்டாண்மைகளை எளிதாக்குவதில் மாநிலத்தின் முயற்சிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியத் தூதருடன் பகிர்ந்து கொண்டார். அப்போது, பல நிறுவனங்களுடன் நடந்து வரும் சந்திப்புகள் மற்றும் இந்தியா-இங்கிலாந்து கல்வி உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக எக்ஸிடர் பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின்போது, நமது இளைஞர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்கும் உயர்தர முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

Also Read: ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!