Tamilnadu

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !

2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று 26.08.2025 சென்னை கிண்டி சிட்கோ அலுவலக வளாகத்தில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.த.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்களுடன் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டார் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மாவட்டம் வாரியாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு இலக்கிணை விரைவில் அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் மாற்றுதிறனாளிகள், மகளிர், ஆதீதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிக எண்ணிக்கையில் கடன் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

கடந்த 2023-2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் புதியதாக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டதின் கீழ் இதுவரை 2,970 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மானியத்துடன் ரூ.581 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,452 பயனாளிகளுக்கு ரூ.13.45 கோடி மானியத்துடன் ரூ.64.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல் படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலை இல்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்கள் முறைபடுத்துதல் திட்டம் உள்ளிட்ட ஆறு வகையான சுய வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 66,018 பயனாளிகளுக்கு ரூ 5,490.80 கோடி கடன் வழங்கப்பட்டு அரசின் வாயிலாக ரூ 2,133.26 கோடி மாணியமாக வழங்கப்பட்டுள்ளது.

இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலீட்டு மானியம், மின் மானியம், ஊதிய பட்டியல் மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 20,702 MSME நிறுவனங்களுக்கு ரூ.1,459.28 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் MSME துறை சார்பில் ரூ.63,573.11 கோடி முதலீடு செய்யும் வகையில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,610 நிறுவனங்கள் ரூ.27,312.26 கோடி முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!