Tamilnadu

”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அதிவேக இணையம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தேசிய அகல அலைவரிசை இயக்கத்தின்(NBM) செயல்பாடுகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் ஆ.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் NBM இன் கீழ் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை? NBM இன் கீழ் தர்மபுரியின் அனைத்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களிலும் உலகளாவிய அகல அலைவரிசை கிடைக்கச் செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை? தருமபுரியின் பின்தங்கிய மற்றும் பழங்குடியின தொகுதிகளில் டிஜிட்டல் இடைவெளியை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், மலிவு விலையில் இணையம், டிஜிட்டல் சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

கள்ளச்சந்தையில் விற்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு நடவடிக்கை என்ன?

அத்தியாவசியப் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்க கடந்த ஐந்து ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் எத்தனை என திமுக மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட கோதுமை, சர்க்கரை, அரிசி மற்றும் பிற பொருட்களின் அளவுகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

முறையாக செயல்படுகின்றனவா பொது சேவை மையங்கள்?

தமிழ்நாட்டில் செயல்படும் பொது சேவை மையங்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து கள்ளக்குறிச்சி திமுக மக்களவை உறுப்பினர் மலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிராமப்புற மற்றும் இரண்டாம் கட்ட நகர்ப்புறங்களில் பொது சேவை மையங்கள் மூலம் தற்போது வழங்கப்படும் அரசு மற்றும் தனியார் சேவைகளின் விவரங்கள் என்ன? தமிழ்நாட்டில் பொது சேவை மையங்களால் வழங்கப்படும் சேவை தரம் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஊக்குவிப்பு குறித்து அரசு நடத்தியுள்ள மதிப்பாய்வுகளின் முடிவுகள் என்ன?

பொது சேவை மைய உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொது சேவை மையங்களை நடத்தும் கிராம அளவிலான தொழில்முனைவோரின் (VLE) நிதி நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? மற்றும் தமிழ்நாட்டின் தொலைதூர மற்றும் பழங்குடிப் பகுதிகளில் உள்ள பொது சேவை மையங்கள் முழுமையாக செயல்படுவதையும் டிஜிட்டல் முறையில் பொருத்தப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? எனும் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.

Also Read: ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு