Tamilnadu
”ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வல்லமை” : சுதந்திரத் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சுதந்திரத் திருநாளையொட்டி இன்று (15.8.2025) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து ஆற்றிய சுதந்திரத் திருநாள் உரை:
“தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!”
- என்று நாம் தலைநிமிர்ந்து – நெஞ்சு நிமிர்த்தி பாட பாடுபட்ட விடுதலை வீரர்களையும் – அவர்களது குடும்பத்தினரையும் வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில், நாம் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்கக் காரணமாய் விளங்கும் தியாகிகளை போற்றி, அவர்களது உன்னத நோக்கங்கள் நிறைவேற நாளும் உழைக்க உறுதி எடுத்துக்கொள்வோம்.
இங்குப் பட்டொளி வீசிப் பறக்கும் நமது தேசியக் கொடியை, நான் மட்டுமல்ல – அனைத்து மாநில முதலமைச்சர்களும் இந்த நாளில் ஏற்றுவதற்கான ஜனநாயக உரிமையை 1974-ஆம் ஆண்டு இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த முத்தமிழறிஞர் கலைஞரின் வழித்தடத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில், ஐந்தாவது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றமைக்குப் பெருமை அடைகிறேன்! இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நாட்டின் பன்முகத்தன்மையின் அடையாளமாக விளங்கும் மூவண்ணக் கொடிக்கு கம்பீரமாக வணக்கம் செலுத்துவதும், தியாகிகளைப் போற்றுவதும், நமது வாழ்நாள் கடமை மட்டுமல்ல; நாட்டுக்கும், தியாகிகளுக்கும் செலுத்தும் மரியாதை!
குமரி முதல் இமயம் வரை விரிந்த இந்த இந்திய நாட்டின் குறிப்பிட்ட சிலரோ - சில பகுதியினரோ மட்டும் போராடி பெற்றதல்ல இந்த விடுதலை. நாடு முழுவதும், அனைத்து மாநில மக்களும், அனைத்து தேசிய இன மக்களும், அனைத்து மொழியினரும், அனைத்து மதப் பிரிவைச் சேர்ந்தவர்களும், அனைத்துப் பண்பாட்டைப் பின்பற்றுபவர்களும், தங்களது வியர்வையை – ரத்தத்தை - உணர்வை – உயிரைக் கொடுத்து பெற்றது இந்த விடுதலை!
அதனால்தான், 'அனைவருக்குமான இந்தியாவாக' நமது நாடு எப்போதும் இருக்க வேண்டும் என்று நமது தலைவர்கள் கனவு கண்டார்கள். அவர்களது கனவை நிறைவேற்றுவதுதான் அவர்களுக்குச் செலுத்தக்கூடிய உண்மையான புகழஞ்சலி!
தியாகத்தில், போராட்டத்தில், களத்தில் சளைத்தவர்கள் அல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை வரலாறு சொல்லும்!
அந்தத் தியாகிகளை, பெயரளவில் நினைவுகூர்ந்து மறப்பவர்கள் அல்ல நாம்!
அதன் அடையாளம்தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் பார்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மணிமண்டபங்கள் - சிலைகள்! இவற்றில் பெரும்பாலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோட்டை!
மகாகவி பாரதி இல்லம்!
பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம்!
மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம்!
தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம்!
வீரவாஞ்சிநாதனின் உறவினருக்கு நிதி!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னமானது!
பசும்பொன் திருமகனாருக்கு மணிமண்டபம்!
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்து பயணம்; மாதந்தோறும் நிதி!
தியாகிகள் மணிமண்டபம்!
விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்!
மாவீரர் பூலித்தேவர் நினைவு மண்டபம்!
தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!
மாவீரர் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!
நேதாஜிக்கு சிலை!
கக்கனுக்கு சிலை!
சிப்பாய் புரட்சிக்கு நினைவுத்தூண்!
- என நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய அரசுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு!
இந்த வரிசையில், இன்றைய திராவிட மாடல் ஆட்சியிலும் தொடர்ந்து தியாகிகளைப் போற்றி வருகிறோம்.
விடுதலை நாளின் 75-ஆவது ஆண்டு பெருவிழாவையொட்டி வெகுசிறப்பாக நாம் கொண்டாடினோம்.
செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தினோம்.
வ.உ.சி.மறைந்த நவம்பர் 18 தியாகத் திருவுருவ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தியுள்ளோம்.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்கவும், புதுப்பிக்கவும் அரசின் சார்பில் 18 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து ஒப்படைக்கப்பட்டது.
கிண்டி காந்தி மண்டபத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலையும், மருது சகோதரர்கள் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
கடலூரில் அஞ்சலை அம்மாள் சிலை வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி - ஒளி காட்சிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த 3 கோடியே 36 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
தனது வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டுக்கு வந்தவர் அண்ணல் காந்தியடிகள். அரையாடை அணிவது என்ற முடிவை மதுரை மண்ணிலிருந்து தான் காந்தியடிகள் எடுத்தார். இதன் அடையாளமாகச் சென்னை அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்துள்ளோம்.
விடுதலைப் போராட்டத்தின் பவள விழாவையொட்டி, கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை 20 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியுள்ளோம்.
அதேபோல், விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கும் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறோம்.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தினை அறிவித்திருந்தேன். இந்தத் திட்டத்தினை வரும் 19-ஆம் நாள் துவங்கி வைக்க உள்ளேன்.
அந்தத் திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் மாவட்டக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, இந்தப் படைவீரர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 848 அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதில் 348 விண்ணப்பங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
தொழில்முனைவோர் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மானியம் அரசால் வழங்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவதற்கு முன்பு,
சென்னையில் காந்தி மண்டபம், கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபம், ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. அவர்களது இல்லம் என விடுதலைப் போராட்ட வீரர்களுக்காகத் தமிழ்நாட்டில் மூன்று நினைவு மண்டபங்கள்தான் இருந்தன.
திராவிட முன்னேற்றக் கழக அரசு தியாகிகளையும், தியாகத்தையும் போற்றும் அரசு என்பதால்தான், நமது கழக ஆட்சிக்காலங்களில், இத்தனை நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன.
தமிழ்நாட்டின் தலைமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை நாள் பற்றிச் சொல்லும்போது, “1947 ஆகஸ்டு 15-ஆம் நாள், நாம் ஆங்கிலேயரின் கணக்கைத் தீர்த்த நாள்! அதன்பின் ஒவ்வொரு ஆண்டிலும், வரும் சுதந்திரத் திருநாள், நாட்டிற்காகவும் - நம் நாட்டு மக்களுக்காகவும் நாம் ஆற்றியுள்ள பணிகளைக் கணக்குப் பார்க்கும் நாள்" என்றார்.
அந்த வகையில், நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்த இந்த நான்காண்டு காலத்தில் நிறைவேற்றியுள்ள திட்டங்களை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த காலத் தியாகிகளைப் போற்றும் அதே வேளையில், இன்றைய மக்களையும் - வருங்கால தமிழ்நாட்டையும் வளர்த்தெடுக்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 11.19 விழுக்காடாக அதிகரித்து, மாபெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது சொல்லியிருந்த 9.69 விழுக்காட்டைவிட இது கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு அதிகம்!
இந்தியாவிலேயே மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத மாபெரும் வளர்ச்சி! ஏன், நாட்டினுடைய வளர்ச்சியே 6.5 விழுக்காடுதான். ஆனால், தமிழ்நாடு 11.19 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது!
சில முக்கியமான புள்ளிவிவரங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் தமிழ்நாடு 788 புள்ளிகளுடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சமூக முன்னேற்றக் குறியீடுகளில் பெரிய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள மக்கள்தொகை 11.2 விழுக்காடு. ஆனால், தமிழ்நாட்டில் 1.43 விழுக்காடு மக்கள்தான் வறுமைக் கோட்டுக்குக்கீழ் இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திடும் பணியில் நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
10 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள்; அதன் மூலம் 30 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளோம்.
பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 47 விழுக்காடு!
Startup தரவரிசைப் பட்டியலில், 2018-இல் கடைசி இடத்தில் இருந்து, 2022-இல் முதலிடத்துக்கு முன்னேறி இப்போது Best Performer!
ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்திய நாட்டிலேயே 80.89 புள்ளிகளுடன் முதல் இடம்!
மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில், தேசிய அளவில் 37 விழுக்காடு பெற்று நாட்டிலேயே முதன்மை மாநிலம்!
ஜவுளி மற்றும் தோல் பொருட்களின் ஏற்றுமதியில் முதன்மையான மாநிலம்!
ஒட்டுமொத்த நாட்டின் காலணி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு, 38 விழுக்காடு!
2024-ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகளில், விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் நமது தமிழ்நாடு!
மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாகச் சேவை புரிந்ததற்கு முதல் மாநிலமாக விருது!
மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்!
காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி - தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு விருதுகள்!
காகிதம் இல்லாச் சட்டமன்றத் திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்தியமைக்காக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் விருது!
உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காக விருது!
மாநில கூட்டுறவு வங்கியின் சிறந்த சேவைக்கான விருது!
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா.விலேயே விருது!
இப்படி பல்வேறு விருதுகளைப் பெற்று சிறப்பான மாநிலமாக - உன்னதமான மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.
சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் ஆட்சிதான், திராவிட மாடல் ஆட்சி!
தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி !
கடந்த நான்காண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சியைப் பாருங்கள்… அது ஒற்றைத்துறை வளர்ச்சியாக இல்லாமல், பல்துறை வளர்ச்சியாக இருக்கிறது. அனைத்து மாவட்டங்களும் வளர்ந்து வருவதை நீங்கள் பார்க்கலாம். அனைத்து மக்களும், சமூகப் பிரிவும் வளர்ந்து வருவதை நீங்கள் காணலாம்.
மகளிரின் தன்னம்பிக்கையை உயர்த்தியிருக்கும் - ஒரு கோடியே 14 இலட்சம் பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்!
மகளிரின் சேமிப்பையும் – சமூகப் பங்களிப்பையும் அதிகரித்துள்ள பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம்!
மாணவர்களிடையே கல்விப் புரட்சியை உருவாக்கியுள்ள திட்டங்கள் - புதுமைப்பெண்! தமிழ்ப்புதல்வன்! நான் முதல்வன்!
18 இலட்சம் பள்ளி மாணவர்களின் மனவலிமையையும், உடல்வலிமையையும் அறிவு வலிமையையும் அதிகரித்துள்ள காலை உணவுத் திட்டம்!
அதுமட்டுமல்ல, மக்களுக்கு நெருக்கமாகச் செல்லக் கூடிய திட்டங்கள் - உங்களுடன் ஸ்டாலின்! நலம் காக்கும் ஸ்டாலின்!
21 இலட்சம் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லம் தேடி ரேசன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டம்!
- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசு - உங்கள் திராவிட மாடல் அரசு! இந்த வீர விடுதலைத் திருநாளிலும் ஒன்பது முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல் அறிவிப்பு –
மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு -
மாநில அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு -
வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல் பெற்றுவரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
நான்காவது அறிவிப்பு -
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு -
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ஆறாவது அறிவிப்பு -
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை, மாதவரத்தில் 33 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஏழாவது அறிவிப்பு -
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
எட்டாவது அறிவிப்பு -
ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.
ஒன்பதாவது அறிவிப்பு -
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு
15 கோடி ரூபாய் செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
இந்த ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும்!
வேற்றுமையில் ஒற்றுமையும் - ஒற்றுமையின் மூலமாக ஒருமைப்பாட்டையும் - ஒருமைப்பாட்டின் மூலமாக ஒன்றுபட்ட வளர்ச்சியையும் வழங்க வேண்டும். ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வல்லமை!
பல மாநிலங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல மதங்களைச் சார்ந்த கோடிக்கணக்கான மக்களை உள்ளடக்கிய துணைக்கண்டம்தான் இந்தியா. அனைத்து வேற்றுமைகளையும் கடந்து, நாம் பீடுநடை போட, அனைவரும் இந்தியராய் ஒருங்கிணைந்து செயல்படக் காரணம், நமது அரசியலமைப்புச் சட்டம்! புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வகுத்தளித்த இந்த வரலாற்றுச் சாசனத்தில், ஒன்றிய அரசும் - மாநில அரசுகளும் இணைந்து மக்கள் பணியாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பகிர்வு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 75 ஆண்டுகளில், நமது அரசியல் களம் கண்ட மாற்றங்களால், இந்த அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பல முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நிலையையும் நாம் காண்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட, மக்களுக்கு அருகில் இருந்து செயல்படும் மாநில அரசுகளுக்குப் படிப்படியாகக் கூடுதல் அதிகாரங்கள் தேவைப்படும் சூழலில், இதற்கு நேர்மாறாக கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில், மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன.
ஒன்றிய அரசின் சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளாலும், மாநில அரசுகளுக்கான நிதிப் பங்கீட்டிலும், திட்டங்களிலும் ஒன்றிய அரசு காட்டும் பாரபட்சத்தாலும், ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைக் களைந்திட ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கினை மீட்டெடுத்திட, அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதுதான் ஒரே தீர்வு! இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தக்க தருணம் தற்போது வந்துவிட்டது என இந்த விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன்.
மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியை எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
சுயசார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போது தான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்!
தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு.
தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களில் ஒருவனாக, இந்திய நாட்டு மக்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக - எனது மனமார்ந்த விடுதலை நாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன்.
Also Read
-
”போலி வாக்குகள் என்ற ‘பூஸ்டர் டோஸ்' மூலம் வெற்றி பெற்ற பிரதமர் மோடி” : பவன் கேரா குற்றச்சாட்டு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி சொன்ன தூய்மைப் பணியாளர்கள் : புதிய அறிவிப்புகளுக்கு வரவேற்பு!
-
”ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம் - விடுதலைத் திருநாள் போற்றிடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி
-
சுதந்திர தினத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?
-
79-வது சுதந்திர தினம் : சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!