Tamilnadu

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்” : திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி!

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வி.மைத்ரேயன் Ex.M.P அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.மைத்ரேயன் ,”திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

அதிமுகவின் போக்கு சரி இல்லை. டெல்லியின் கட்டளைக்கு அடிபணிந்த இயக்கமாக அதிமுக இன்றைக்கு மாறிவிட்டது. கூட்டணி முடிவுகளை கூட பழனிசாமியால் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

காசு கொடுத்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தை கண்டு, தன்னை ஒரு எம்.ஜி.ஆர் போலவும், அம்மையார் ஜெயலலிதா போலவும் நினைத்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு ஒரே ஒரு உதாரணம், உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது. ”மண், மொழி, மானம் காக்க ஓரணியில் திரண்டு இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: "நமக்குள் இருக்கும் நட்பு தேர்தலுக்கானது அல்ல, கொள்கை நட்பு, இலட்சிய நட்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !